தமிழ் தேசிய கூட்டமைப்பு தனது தேர்தல் விஞ்ஞாபனத்தை வெளியிட்டதன் பின்னர் சிங்களத்தின் வயிற்றில் பு(லி)ளியைக் கரைத்துள்ளதை காணக் கூடியதாக உள்ளது.
'கிணறுவெட்ட பூதம் கிளம்பிய' கதை போல புலிகளை இராணுவரீதியாக ஒடுக்கிய பின் அதன் வழியொற்றி தமிழ் தேசிய கூட்டமைப்பு வெளியிட்ட விஞ்ஞாபனம் அதிக தாக்கத்தை சிங்களத்திற்கு தந்துள்ளது. இதில் உணரப்படும் உண்மை யாதெனில் 'கருத்துக்கள் ஒருவரைப் பற்றிக்கொள்ளுமாக இருந்தால் அது அழிக்க முடியாத, வெட்ட வெட்ட தளைக்கும் மரமாகும்' என்று கூறிய லெனினின் கருத்து எவ்வளவு உண்மையானது.
'சிங்களத்துடன் சேர்ந்து வாழ முடியாது' என்ற கருத்தியலை தமிழ்மக்கள் மிக ஆழமாகவே பற்றிக் கொண்டார்கள் என்பதை புரிந்து கொண்ட சிங்களம், தற்போது அதை எந்த வழியில் நசுக்கலாம் என திட்டங்கள் வகுத்த வண்ணம் உள்ளது.
அமைச்சர் டி. யூ. குணசேகர, J.V.P. முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச ஆகியோர் கூட்டமைப்பின் விஞ்ஞாபனம் சார்பாக வெளியிட்ட கருத்துக்களை மிக ஆழமாக உற்று நோக்குதல் அவசியம். விடுதலைப்புலிகளின் தனி ஈழ கொள்கைக்கு புத்துயிர் அளிப்பதாக கூறி விஞ்ஞாபனத்தையும், கூட்டமைப்பையும் 'தாறுமாறாக' விமர்சித்துள்ளதை காணலாம்.
ஜனாதிபதி வேட்பாளர் சரத் பொன்சேகாவை, ஜனநாயக வரம்புமுறைகளுக்கு மாறாக அதுவும் நீதியரசர்களின் கருத்துக்களையும் செவிமடுக்காது, நிறைவேற்று அதிகாரங்களை கையில் எடுத்துக் கொண்டிருக்கும் ஜனாதிபதியின் விருப்புக்கமைய சிறையில் தள்ளியிருக்கும் கொடுமையை உலகம் அறியும். இருப்பினும் மனித நேயத்தை அதிகமாக பேசும் பல நாடுகள் மௌனித்துக் கிடக்கின்றதையும் அறிவோம்.
எதிர்வரும் பொதுத் தேர்தலில் தமிழ் தேசிய கூட்டமைப்பிற்கான மக்கள் ஆணை நிறையவே கிடைக்கப் போகின்றதென்பது மறுக்க முடியாத உண்மை. அதிலும் இரா. சம்பந்தன் இறுதியாக திருக்கோணமலை புத்திஜீவிகளுடன் நடைபெற்ற கலந்துரையாடலில் 'பிரிந்து போனவர்கள் உண்மைநிலை புரிந்து கொண்டு மீண்டும் தமிழ் தேசிய கூட்டமைப்புடன் இணைந்து கொள்ளலாம்' என்ற கருத்து மிக சாதகத் தன்மையை வெளிக்காட்டுகிறது. இது சிங்களத்திற்கு மேலும் எரிச்சலை உண்டாக்கும். அதாவது, சிங்களம் எதிர் பார்த்தபடி தமிழ் கட்சிகளின் பிளவுகள் நீடிக்க வாய்ப்பில்லை என்ற காரணமாக அமையலாம். இதை நசுக்குவதற்கு வேறுபட்ட விபரீத செயற்பாடுகளுக்கு செல்வது சிங்களத்திற்கு அவசியமானது அவசரமானதாகவும் படலாம்.
வழமையாக சிங்களம் காலா காலமாக தனது கையாலாகாத் தனத்தை பிரயோகிக்க உள்ள ஒரே வழிதான் 'நிறைவேற்று அதிகாரமாகும்' எனவே, எமது கண் முன்னால் அதுவும் இந்நாட்டின் மாவீரனாக சிங்கள மக்களால் வரித்துக் கொள்ளப்பட்ட சரத் பொன்சேகாவுக்கே இந்த நிலை என்றால்...........................
எந்தத் தடையும் தாண்டி தியாக சிந்தனையோடு எதிர்வரும் காலங்களில் தமிழ் தேசிய கூட்டமைப்பு தளராமல் மிக உறுதியாக தனது பாதையில் பயணிக்க வேண்டுமென அனைத்து தமிழ்மக்களாலும் எதிர்பார்க்கப்படுகிறது.
அதற்கான முழு பலத்தையும் தளத்திலும், புலத்திலும் ஏன் உலகத்தமிழர்களும் தலைவர்களும் சகல பேதங்களையும் புறம்தள்ளி கைகொடுக்க ஒன்றிணைய வேண்டும் என்பது காலத்தின் தேவையாகும்.
மல்லிகையூரான்
கருத்துகளுக்கு: info@thanall.com
காலை விடியலில் வழமைபோல் தொலைபேசி மணி இன்றும் (12.3.2010) கிணு கிணுத்தது. சமூக சேவையில் தன்னை ஈடுபடுத்திக் கொள்ளும் ஒரு அன்பர் நாட்டு நடப்பையும், பலதும் பத்தையும் வழமைபோல் சிலாகிக்கத் தொடங்கினார்.
'வட்டுக்கோட்டை தீர்மானமும் - நாடுகடந்த தமிழீழமும்' என்ற தலைப்பில் பரஸ்பரம் கருத்துக்களை பரிமாறிக் கொண்டோம். மேலும்,
தமிழ் தேசிய கூட்டமைப்பின் பிளவு தொடங்கி அண்மைக்கால இலங்கைத் தேர்தல்கள், புலம்பெயர் நாடுகளின் தேர்தல்கள் அடங்கலாக உரையாடலின் உள்ளடக்கம் அமைந்திருந்தது.
அதிலும் குறிப்பாக, சில தினங்களுக்கு முன்னர் இணையதளங்களில் வெளியான 'வட்டுக்கோட்டைக்கும் நாடுகடந்த தமிழீழத்திற்கு'மான கருத்து முரண்பாடுகள் எமது காயங்களை ஆற்றுப் படுத்தாமல் கொழுந்து விட்டெரியப்பண்ணிக் கொண்டிருந்தது.
எமது தமிழ் சாதியின் ஒற்றுமையீனத்தை எண்ணி கசந்து கொண்டோம். தமிழீழம் பெறுவதிலே எமக்குள்ள ஒற்றுமையீனத்தையும், தமிழருக்கான உரிமைகள் வழங்கப்படக் கூடாதென்பதில் சிங்களம் காட்டுகின்ற ஒற்றுமையையும் எண்ணி வியந்து கொண்டோம்.
சம்பாஷணையை முடித்துவைக்குமுகமாக அந்த அன்பர் சுருக்கமாக கருத்துக் கூறினார்.
'ஒற்றுமையாக செயற்பட்டால் பெரும்பாலும் அது இலங்கைத் தமிழரின் குணாதிசயமாக இருக்க மாட்டாது! இது வரலாறல்லவா? ஒன்றுமட்டும் உறுதியாக சொல்லலாம். 30 வருட காலமாக அனைத்துத் தமிழர்களையும் ஒரு குடையின் கீழ் ஒற்றுமையாக வைத்திருக்கக் கூடிய சக்தி அந்த வேலுப்பிள்ளையின் மகனால் தான் முடிந்திருந்தது. இந்த நிலைக்கு கொண்டுவர அந்த 30 வருட காலமும் எத்தனை இன்னல்களுக்கு அந்த ஆள் முகம் கொடுத்திருப்பார்? எண்ணிப்பார்க்கவே முடியவில்லை. இப்போது அது சிதறிவிட்டது. இருப்பினும், அந்த 30 வருட காலம்தான் தமிழனுக்கு கிடைத்த வெற்றி! அந்தக் காலம் தான் இலங்கைத் தமிழருக்கு கிடைத்த தமிழீழம்!
இந்த நினைவுகளிலே காலத்தைக் கடத்துவோம்.
நாம் அந்த காலத்தினிலே வாழக் கொடுத்து வைத்தது ஒரு வரப்பிரசாதம்.
அதுவே பொற்காலம்.
இந்த நிம்மதி ஒன்றே போதும்! சாகும்வரை வாழ்வோம்'!
பெருமூச்சு புறப்பட்டு ஓய்ந்தது. தொலைபேசியூடாக ஆதங்கம் தெரிந்தது. உரையாடலை அன்பர் நிறைவுக்குக் கொண்டுவந்தார். இதயம் கனத்த சுமையோடு விடைபெற்றேன்.
உரையாடலை மீட்டிப் பார்க்கிறேன். எவ்வளவு உண்மை அடங்கியிருந்தது. இரணங்களின் வடுக்களில் இருந்து குருதி பீறிப் பாய்கிறது. என்ன செய்ய முடியும்?
ஒற்றுமையீனத்தால் சின்னாபின்னமாகும் எமது தமிழினத்தை இப்படியே அமைதியாக இருந்து பார்த்துக் கொண்டிருப்பதா? இதற்கான பரிகாரம் தான் என்ன? 30 வருடமாக தலை நிமிர்ந்திருந்த இனம் 'வாழைப்பூ' போல தலை தாழ்ந்து வாழ்வதா? 'தலைவன் வழி தொடருவோம்' என கோஷம் எழுப்புவதில் எந்த அளவு உண்மை இருக்கிறது? என்னுள் கேள்விகள் கோர்வையாக எழுகின்றது.
ஒன்று மட்டும் இப்போது பதிலாக தெரிகின்றது.
தமிழ்மக்கள் அனைவரும் விழிக்க வேண்டும். தெளிவு கொள்ள வேண்டும். 'புலம்பெயர் நாடுகள் அடங்கலாக ஒற்றுமைப்படாத எந்த அமைப்பையும் நாம் ஏற்றுக் கொள்ள மாட்டோம்' என உறுதியாக சபதம் எடுத்துக் கொள்ள வேண்டும். உங்களது 'பதவி மோக' சண்டைக்குள் தலைநிமிர்ந்து வாழ்ந்த எமது இனம் பலியாக முடியாது. சரி, பிழைகளை நீங்களாகவே தீர்த்துக் கொள்ளாத வரையில் தமிழ்மக்களாகிய நாம் எதற்கும் உடன்பட்டு வரமாட்டோம். இது தான் எமது தலைவன் காட்டிய வழி என உறுதியோடு தமிழீழத்தின் மேல் சத்தியம் செய்து கொள்வோம்.
வாழ்க தமிழ்! வாழ்க தமிழினம்!
தசக்கிரீவன்
ஒரு நாட்டிலே பொதுத் தேர்தல் ஒன்று ஏற்படுமாயின், அந்த நாட்டில் புதிய புதிய திட்டங்களும், சுபீட்ச வாழ்வும், புரட்சிகர மாற்றங்களும் ஏற்படுவதற்கான முன் மணியோசையாக கொள்ளலாம். ஆனால் இலங்கையை பொறுத்தவரையில், ஆளும்கட்சிக்கு எதிராக எதிர்க்கட்சியும் எதிர்கட்சிக்கு எதிராக ஆளும் கட்சியும் மாறி மாறி பழைய குப்பைகளை கிளறி சந்தியில் நின்று சண்டை பிடிப்பதே மரபாகும். தற்போது நடைபெறவிருக்கும் பொதுத் தேர்தல், கட்சிச் சண்டைகளுக்குள்ளும் தமிழ்மக்களுக்கான அடிப்படை மனித உரிமை மீறல்களை முன்வைத்து தேர்தல் பிரச்சாரம் மேற்கொள்ளுவதை காணக் கூடியதாக உள்ளது. இராணுவ ரீதியாக புலிகளை அழித்த பின்னர் நாட்டில் பொருளாதார சுபீட்சம் ஏற்படுமென தென்னிலங்கை மக்கள் கனவுகள் கண்டிருந்தனர். மாறாக விலைவாசியேற்றம் இமய உச்சமாகி விட்டது. அத்தோடு தமிழ்மக்கள் மேல் கட்டவிழ்த்திருந்த அரச பயங்கரவாதம் தற்பொழுது மேலும் அதிகமாகி விட்டது.
இடம்பெயர்ந்த மக்கள் மீளக்குடியேற வேண்டுமெனில் அரச வேட்பாளர்களுக்கு வாக்குப்பண்ண வேண்டுமென நெருக்குதல் கொடுப்பது ஒரு ஜனநாயக மீறல். இடம்பெயர்ந்த மக்கள் தற்பொழுது தங்களை முதலில் தமது சொந்த இடங்களில் குடியேற்றியபின்னர் தான் அரச வேட்பாளர்களுக்கு வாக்குப் பண்ணுவதாக வாக்குக் கொடுத்துள்ளார்கள். அது ஒரு வகையில் சிறப்பான கொள்கையாக அமையலாம். மீள்குடியேற்றமென்பது ஒரு மனிதனின் அடிப்படை உரிமையாகும். இதை அடகுவைக்குமளவு அரசுக்கு வறட்சியும், தமிழ்மக்களின் தெளிவின்மையையும் காட்டி நிற்கிறது. தமிழ்மக்களின் உரிமைகளுக்கு சார்பாக களமிறங்கும் அரசியல்வாதிகள் போட்டியரசியலை கைவிட்டு முதலில் மக்களை அரசியல் மயப்படுத்த வேண்டும். இதுவே இன்று எம்முன் நிற்கும் பெரும் சவாலாகும்.
மக்கள் அரசியல் மயப்படுத்தப்படும் பொழுது எமது நாட்டின் தமிழ்மக்கள் சார்ந்த, கடந்த - நிகழ் - எதிர் கால அரசியல் சித்தாத்தங்களை விளங்கிக் கொள்ளும் பட்சத்தில், ஓர் விடுதலைப் போராட்டத்தை பயங்கரவாதத்தின் மூலம் அழித்தொழித்த ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் பயங்கரவாத முகம் வெளியில் தெரிய அதிக வாய்ப்புகள் உண்டாகும் என்பதாகும்.
தற்போதைய தமிழ்க் கட்சிகளிடையிலான பிளவு தமிழ்மக்களிடையே உள்ள ஒற்றுமையையும், அரசியல் தெளிவையும் சீர்குலைத்து விட்டது. மிகப் பெரிய பயங்கரவாதியான ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவை சர்வதேச அரங்கிலும், சர்வதேச நீதிமன்றத்திலும் எமது படித்த கனவான்கள் கொண்டுபோய் நிறுத்துவார்களென இனவாஞ்சை கொண்ட தமிழர்கள் கண்ட கனவு பலியாது போய்விடுமோ என்ற ஏக்கம் ஆரம்பிக்க தொடங்கிவிட்டது. பிரச்சனைகள் ஓரிடத்திலிருக்க, அதை நோக்கிய நகர்வுகள் வேறிடமாக இருப்பதை அவதானிக்க கூடியதாக உள்ளது. ஆகவே இதற்கான உடனடி தீர்வுக்கான பொறிமுறையை அனைத்து தமிழ்மக்களும் கண்டுபிடிக்க ஆயத்தமாக வேண்டும். வெறுமனே தேர்தலுக்குள் மூழ்கி, காலம் காலமாக நாம் போராடிவந்த போராட்டங்களுக்கு அர்த்தமில்லாமல் செய்துவிடலாகாது. வெளியில் நிற்பவர்கள் அனைவரையும் உள்வாங்கக்கூடிய ஒரு பொது அமைப்பை உருவாக்கும் பலம் புலம்பெயர்வாழ் தமிழ்மக்களிடமே உள்ளது. தேர்தல் முடிந்த கையோடு வெற்றி தோல்விகளுக்கப்பால், மனக்கசப்புகள் மேலெழுவதற்கு முன், ஓர் புலம்பெயர் நாட்டிற்கு அனைவரையும் அழைத்து புலம்பெயர் வாழ் புத்திஜீவிகள் பிரசன்னத்தில் உலகப்பயங்கரவாதிகளில் ஒருவரான மகிந்த ராஜபக்சவை சர்வதேச நீதிமன்ற குற்றவாளிக் கூண்டில் ஏற்றுவதற்கான ஒரு ஆரோக்கியமான திட்டமிடல் ஒன்றை ஏற்படுத்த வேண்டியது கட்டாய கடமையாகும்.
இதற்காக என்னவிலை கொடுத்தேனும், நேர்த்தியான, ஒற்றுமையான, ஒழுங்கமைக்கப்பட்ட ஓர் அமைப்பு புலம்பெயர் மக்கள் மத்தியில் உருவாக்கப்பட வேண்டும். அதனூடாக பிரதான எடுகோளாக மகிந்த ராஜபக்சவை பயங்கரவாதியாக சர்வதேசத்துக்கு வெளிக்காட்ட வேண்டும். இதுவே எமது தாயகத்து மக்களுக்கு நாம் புலம்பெயர்வாழ் மக்கள் செய்யும் பிராயச்சித்தமாகும்.
தசக்கிரீவன்
ஒரு பழைய சம்பவம் நினைவுக்கு வருவதை தவிர்க்க முடியாதுள்ளது.
தி. மு. க. விலிருந்து புரட்சித் தலைவர் M.G.R. பிரிந்து சென்று அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தை ஸ்தாபகம் செய்து அவர் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்ட பொழுது அதன் கருப்பொருளாக அமைந்திருந்தது 'என்னை ஏன் கருணாநிதி வெளியில் விட்டார்? நான் செய்த குற்றம் என்ன? இதற்கான பதிலை மக்கள் எதிர்வரும் தேர்தலில் அணியணியாக சென்று இரட்டையிலைச் சின்னத்திற்கு வாக்களிக்க வேண்டும்' என்பதேயாகும். தமிழ் தேசிய கூட்டமைப்பில் இருந்து பிரிந்துசென்ற பாராளுமன்ற உறுப்பினர்களின் நிலையும் இதேபோன்றுதான். அன்றைய தேர்தலில் M.G.R. இன் பக்கம் மக்கள் வெள்ளம் திரண்டு நின்றிருந்தது. அதைத் தளமாக கொண்டு, பிரிந்துசெல்வதால் கூடிய நன்மையுண்டு எனக்கருதி அதை வாய்ப்பாக பயன்படுத்திக் கொண்டார். ஆனால் தமிழ் தேசிய கூட்டமைப்பிலிருந்து பிரிந்து சென்றவர்களுக்கு மக்கள் அவர்கள் பக்கம் இல்லை.
கூட்டமைப்புத் தலைமைகளில் ஒருவரான இரா. சம்பந்தனை மட்டும் குறை கூறிக்கொண்டு பிரிந்து செல்வது தேசியத்துக்கு செய்யும் கேடாகும். அதற்காக இரா. சம்பந்தனின் பரிபாலனம் சிறப்பானதென்று கூறவரவில்லை. கண்ணில் தூசு விழுந்தால் கண்ணைப் பிடுங்கி ஏறிவது வழக்கமல்ல. தூசைப் பிடுங்கி எறிவது நியாயம் ஆகும். தேசியத்தை நேசிப்பவர்களாக இருப்பவர்களாயின், தேர்தல் காலங்களுக்கு முன்னதாகவே பொதுக் குழுவைக் கூட்டி அல்லது பொதுக் குழு கூடும் ஒரு சந்தர்ப்பத்தை பயன்படுயத்தி தலைமையை மாற்றுவது அல்லது திருத்துவது போன்ற நடவடிக்கைகளை மேற்கொண்டிருத்தல் வேண்டும். உள்ளிருந்து கொண்டே போராடி ஒரு முடிவு கண்டிருந்தால் மக்கள் பலம் நியாயத்தின் பக்கம் சாய்ந்திருக்கும். வேறொரு சுயநலக் காரணத்தை மனதில் அடித்தளமாக வைத்துக்கொண்டு சம்பந்தனை சாட்டாக சொல்லி விலகிச் செல்வது தமிழ் தேசியத்தை நாசம் செய்வதோடு மட்டுமல்லாது பிரதேச வாதத்தைக் கூட கிளப்பிவிட இடமுண்டு.
எதிர்வரும் தேர்தல் உண்மையாக தேசியத்தை நேசித்தவர்கள் யார் என்பதை காட்டும் கண்ணாடியாக அமையப்போகின்றது. மக்கள் தெளிவோடுதான் இருக்கிறார்கள் என்பதற்கு மாற்றுக் கருத்தில்லை. ஏனெனில் இதேபோன்று E.P.D.P. , E.P.R.L.F. வரதர் அணி போன்றவை தேசியத்திற்கும் விடுதலைப்புலிகளுக்கும் மாறாக கிளம்பியிருந்தபோதும் வடகிழக்கு தமிழ்மக்களின் உணர்வுகளுக்கு முன்னால் காட்டு வெள்ளத்தில் அள்ளுண்டு போவதுபோல் காணாமல் போய்விட்டார்கள். இம்முறை தேர்தலில் E.P.D.P. தமிழீழ தலைநகரில் கால் பதிக்கவே முடியாமல் போயிற்று. இதே நிலை தமிழ் தேசியக் கூட்டமைப்பில் இருந்து பிரிந்து சென்றவர்களுக்கும் வாய்ப்புக்கள் அதிகம். இருப்பினும் ஒரு சில தேசிய உணர்வாளர்கள் மக்களோடு இல்லை என்ற ஓர் இனம்புரியாத நெருடல் தமிழ்மக்கள் மத்தியில் உள்ளதென்பதை மறுக்க முடியாது. இவர்களையெல்லாம் உள்வாங்க முடியாமல் போனது துரதிஸ்டம் தான். கால ஓட்டத்தில் பழமையான பகைகளைஎல்லாம் மறந்து தேர்தல் பெறுபேறுகளுக்கப்பால் ஒன்றிணைந்து தமிழ்மக்களை வழிநடத்தி செல்லவேண்டும் என்பதுதான் பேரவா.
மல்லிகையூரான்
இலங்கையிலே பொதுத் தேர்தல் சூடு பிடிக்க ஆரம்பித்துள்ளது. பாராளுமன்ற உறுப்பினர்களின் தெரிவில் பொதுமக்கள் காட்டும் ஆர்வத்தை விட, வடகிழக்கிலே தமிழ் தேசிய கூட்டமைப்பு உடைந்ததன் பின் தேர்தல் பெறுபேறுகள் எப்படி அமையப்போகின்றது என்பதில் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச காட்டும் ஆர்வம் மிக அதிகம் எனலாம். 'புது முகங்களுடன் தேசிய இனப்பிரச்சனை சார்பாக பேச ஆயத்தமாக இருக்கின்றேன்' என்ற அவரின் அறைகூவல், புதுமுகங்களை என்ன வழிப்படுத்தியேனும் தன்வலைக்குள் சிக்க வைக்கும் உபாயத்தை மறைமுகமாக கூறி நிற்கிறது . இந்த விடயத்தில் தமிழ் வாக்காளர்கள் மிக நிதானமாக செயற்பட்டு, தேசியத்திற்காக தம்மை முழுமையாக அர்பணிப்பவர்களை தெரிவு செய்து பாராளுமன்றம் அனுப்புவார்கள் என்பதில் எள்ளளவும் ஐயமில்லை.
குறிப்பாக, அரசியற் தளத்திலிருந்து சம்பந்தனை வெளி ஏற்றுவதற்கான பெரும் முயற்சிகள் நடந்துகொண்டிருப்பதை அவதானிக்கக் கூடியதாக இருக்கின்றது. ஆரம்பக்கட்ட முயற்சிகள் சிங்களத்திற்கு தோல்வியைத் தந்தாலும், திருக்கோணமலை மாவட்ட தேத்தல் களத்தில் சம்பந்தனைத் தோற்கடிப்பதற்கான பெரும் முயற்சிகள் மேற்கொள்வதை சொல்லியாக வேண்டும்.
திருக்கோணமலையிலே மகிந்தாவின் ஐக்கிய சுதந்திர முன்னணியில் போட்டியிடுவதற்காக பல தமிழர்கள் நேர்முகப்பரீட்சைக்கு தோற்றி 'வெறும் வாயை அரைத்துக் கொண்டு' வீடு திரும்பிய நிலையை மீட்டிப்பார்த்தல் அவசியம். நேர்முகப் பரீட்சை என்பது ஏதோ பெரிய மலையை வேரோடு சாய்ப்பதற்காக அல்ல, வெறும் கண்துடைப்புக்காகவே என்பதை பலர் புரிந்துகொள்ளவில்லை. தமிழர் ஒருவர் அப்பட்டியலில் இடம்பெறுவாரெனில் அந்த தமிழருக்கு விழும் தமிழ் வாக்குகள் அவரை பாராளுமன்ற உறுப்பினராக்க போதாது. இதனால் முஸ்லீம் பிரதிநிதித்துவம் அதிகரிக்க இடமுண்டு. அரசுக்கு அதுவல்ல பிரச்சனை. அமைச்சர் புஞ்சிநிலமையை திருக்கோணமலை பாராளுமன்ற உறுப்பினராக கொண்டு வருவதே முக்கிய கருதுகோள்.
மூதூர் கிழக்கு மீள்குடியேற்றத்தை மையப்படுத்தி புஞ்சிநிலமை செய்யும் பிரச்சாரம் பெரும் அதிர்வை காட்டி நிற்கின்றது. குறிப்பாக, தனக்கு வாக்குப்பண்ணாத மூதூர் கிழக்கு மக்கள் மீள்குடியேற்றம் செய்யப்பட மாட்டார்கள் என்ற கதையைக் கட்டவிழ்த்து வாக்குத் தேடுவதில் ஈடுபட்டுள்ளார்கள். இதனால் ஓர் குறிப்பிட்டளவு தமிழ் வாக்குகள் அவருக்கு விழுவதை தவிர்க்க முடியாது. இதற்கான எதிர்ப்பிரச்சாரத்தை தமிழ் தேசியக்கூட்டமைப்பின் தலைமை வேட்பாளர் இரா சம்பந்தனால் வைக்க முடியாமை நிதர்சனம்.
மாவிலாறுப் பிரச்சனையில் மூதூர்கிழக்கு மக்கள் இடம்பெயர்ந்திருந்தபோது திருக்கோணமலை பாராளுமன்ற உறுப்பினர்களின் நடவடிக்கைகள் புஞ்சிநிலமைக்கு சிறிதளவு சாதகத்தன்மையை ஏற்படுத்த இடமுண்டு. மேலும் மே மாத வன்னி யுத்தத்தின் போது பாதிக்கப்பட்ட மக்களை அவர்கள் இடத்தில் சென்று பார்வையிடுவதில் கூட்டமைப்புத் தலைமகள் காட்டிய அக்கறையின்மை, சக வன்னிப் பாராளுமன்ற உறுப்பினர் சதாசிவம் கனகரட்னம் தடுப்புக்காவலில் இருந்தபோது பாராமுகத்தன்மயையும், 12 பாராளுமன்ற உறுப்பினர்களின் வெளியேற்றமும் இவற்றிக்கு துணை போகலாம்.
இவைகளையெல்லாம் மறுதலித்து எதிர்வாதம் செய்வது ரொம்ப கடுமையான பணி. இருப்பினும் மக்கள் தேசியத்தில் இருந்து விடுபடவில்லை என்பது யதார்த்தம். எது எப்படியாயினும் திருக்கோணமலைக்கு இரா சம்பந்தன் பாராளுமன்ற உறுப்பினராக வரவேண்டியது காலத்தின் கட்டாயம். இதை திருக்கோணமலை மக்கள் நன்கு உணர்ந்துள்ளார்கள் என்பதை மறுப்பதற்கில்லை பிரச்சாரங்களுக்கப்பால், விடுதலைப்புலிகளால் விதைத்துச் சென்ற தேசியம் சுயநிர்ணயம் தன்னாட்சி இவைகளில் இருந்து திருக்கோணமலைத் தமிழ் மக்கள் தடம்மாற மாட்டார்கள் என்பது உறுதி.
மலையூர் பண்ணாகத்தான்
கடந்த சில தினங்களுக்கு முன் தமிழ் இணையத்தளங்களில் வெளியான 'தமிழ் தேசியத்திற்கு பொறிவைக்கும் இலங்கை புலனாய்வுத்துறை' என்ற அரசியல் கட்டுரை பெரும் அதிர்வைத் தந்துள்ளது. தேசியத்தலைவர் பிரபாகரனினால் சுதுமலையில் ஆற்றிய உரையில் 'எப்போது தனித் தமிழீழக் கொள்கையை கைவிடுகின்றேனோ அன்றே என்னை சுட்டுக்கொல்ல வேண்டும்' என்ற வாசகம் இன்றும் எம்மனங்களில் இருந்து மறையாமல் உள்ளது.
ஈழப்போராட்டத்தின் ஆரம்ப வரலாற்றில் 'தமிழ் புதிய புலிகள்' என்ற அமைப்பு 1976 ம் ஆண்டு தலை தூக்கி இருந்தது. 'தம்பி' என்ற செல்லப் பெயரோடு தலைவர் பிரபாகரன் அதனுள் இருந்த காலம் அது. அவ்வமைப்பின் ஆரம்பமாக நான்கு பிரதான கட்டளைகள் உருவாக்கப்பட்டு சத்தியப்பிரமாணம் எடுத்துக் கொண்டதை மீட்டிப்பார்த்தல் பொருத்தமாகும்.
அதில் முக்கியமாக
* இலங்கை அரசுக்கெதிரான ஆயுதப்போராட்டம்
* தமிழீழம் கிடைத்தபின் இயக்கம் கலைக்க வேண்டும்
* புலிகள் அமைப்பில் இருந்து விலகி வேறு அமைப்புகள் உருவாகினாலோ எந்தவிதத்திலும் அரசுக்கு துணை போனாலோ மரண தண்டனை வழங்கப்படும்.
* காதல், பாசம் இயக்க நடவடிக்கைகளுக்கு இடையூறாக இருக்கக்கூடாது.
அமரர் சிவகுமாரின் மூலம் அறிமுகப்படுத்தப்பட்ட சயனைட் வில்லை உட்கொள்ளுதலானது அமைப்பின் உறுதித்தன்மையையும், நம்பகத்தன்மையையும் சர்வதேச மட்டம் வரை உயர்த்தியிருந்தது. அதன்பிறகான வளர்ச்சிக் காலம் மிக உச்சத்தை அடைந்து தமிழீழ விடுதலைப்புலிகளாக தோற்றம் பெற்று கட்டுப்பாட்டுடன் இருந்து வந்ததென்பது அனைவரும் அறிந்த விடயம். இந்த நிலையில் ஊடகங்கள் ஊடாக வெளியான மேற்படி செய்தியை ஒப்பு நோக்குகையில் உயிருடன் இராணுவத்திடம் பிடிபட்ட விடுதலைப்புலிப் போராளிகளின் நடவடிக்கைகள் தலைகீழாக மாறியிருப்பதை அவதானிக்கையில் அருவருப்பாக உள்ளதை உணரக்கூடியதாக உள்ளது.
வன்னி யுத்தத்தின் பின்னராக இலங்கைப் படையினரால் கைதுசெய்யப்பட்ட விடுதலைப்புலிகளின் உறுப்பினர்கள் தற்போது இராணுவத்தின் கையாட்களாக இயங்கி புலம்பெயர்வாழ் விடுதலைப்புலிகளின் செயற்பாட்டாளர்களையும், ஆதரவாளர்களையும் காட்டிக்கொடுத்தல் என்பது மகா துரோகமான செயலாகும். அதாவது இவர்களால் எடுக்கப்பட்ட சத்தியப்பிரமாணங்களின் படி நடக்கத்தவறியமை வரலாற்றுத்துரோகமும் ஆகும்.
என்னதான் நிர்ப்பந்தம் ஏற்பட்டாலும் கொள்கையோடும் கட்டுக்கோப்போடும் வழிநடத்தப்பட்ட விடுதலைப்புலிப் போராளிகள் தடம்புரளலாகாது. ஒட்டுமொத்தமாக அரசாங்கத்தின் ஒட்டுக்குழுக்களுக்கும் இவர்களுக்கும் வித்தியாசம் இல்லாமல் போய்விடும். ஏற்கனவே எழுதப்பட்ட கட்டளையின் பிரகாரம் அரசோடு நின்று காட்டிக்கொடுப்பவர்களுக்கு துரோகிப் பட்டமும் மரண தண்டனையும் ஆயின் உயிருடன் பிடிபட்ட போராளிகள், அமைப்பின் கட்டளைகள் எதைக்கூறுகின்றதோ அதன்படி நடந்திருக்க வேண்டும். ஆசா பாசங்களுக்கு தம்மை உட்படுத்திக் கொண்டு இலங்கை புலனாய்வுப் பிரிவின் அட்டவணையின்படி இயங்குவதானது மன்னிக்க முடியாத மாபெரும் குற்றமுமாகும்.
சுயநலத்திற்காக மாறியவர்கள் என்ற வரிசையில் காட்டிக்கொடுத்தவர்கள், அரசுக்கு சோரம் போனவர்கள், ஒட்டுக்குழுக்கள் போன்றவர்களின் செயற்பாடுகள் துரோகத்தனமென இனம்கண்டு விடுதலைப்புலிகளால் மரண தண்டனை வழங்கப்பட்டவர்களின் காரணங்கள் இப்போது நியாயப்படுத்தப்படலாம்.
எனவே, 'தலைவன் இட்டவழியே எம்வழி' என்று உலகத்திற்கு முன்மாதிரியாக வாழ்ந்து காட்டிய போராளிகள் எந்த இன்னல்கள் வந்தாலும் இலட்சிய வழி மாறாது தமது போரியல் குணங்களை வேட்கையுடன் வெளிப்படுத்தும் போதுதான் தலைவன் என்றும் எம்மோடு வாழ்ந்து வழி காட்டுகின்றான் என்ற கொள்கை உறுதி பெறும். இதுவே தமிழுக்கும் தமிழ் மண்ணுக்கும் நீங்கள் ஆற்றும் இலட்சியப்பணியாக அமையும் என்பதில் ஐயம் இல்லை.
வாழ்க தமிழ்! வாழ்க தாயகம்!
மல்லிகையூரான்
இலங்கையின் வடகிழக்கு மாகாணத்திலே பறிபோகக் கூடாதென தமிழர்கள் நோக்கும் பகுதிகளில் திருக்கோணமலை மாவட்டமும், அம்பாறை மாவட்டமும் பிரதானமானவை எனலாம். இத்தாயகப் பகுதிகளை சிங்களம் தனதாக்கிக்கொள்ள எடுத்துவரும் முனைப்புகள் சொல்லி மாளாது. இந்த நிலையில் சிங்களத்திற்கு வழி சமைத்துக் கொடுக்க எதிர்வரும் பொதுத் தேர்தல் வாய்ப்பாக அமையப்போகின்றது என எண்ணும் பொழுது கவலை கொள்ளாமல் இருக்க முடியாது.
2000 ம் ஆண்டு பொதுத் தேர்தலின்போது திருக்கோணமலையிலே பல புத்திஜீவிகளை உள்ளடக்கிய மகாசபை ஒன்று அமைத்து, பல கோணங்களாக பிரிந்திருந்த தமிழ் கட்சிகளை ஒரு கூரையின்கீழ் கொண்டுவருவதற்கு பல பிரயத்தனங்கள் மேற்கொள்ளப்பட்டன. 'கிளித்தட்டு' பாய்ந்து பல கட்சிகள் புறப்பட ஆயத்தமான போது இவற்றை ஒன்று சேர்க்க வேண்டுமென்ற நல்ல நோக்கத்துடன் ஓர் உணர்வாளர் உண்ணாநோன்பு அனுஷ்டித்த போதும் தமிழ் கட்சிகள் எதுவும் ஒரு கூரையின் கீழ் வர மறுத்துவிட்டன. இதனால் இரு தமிழர் ஆசனங்களை பெறவேண்டிய நிலையிருந்தும் ஒரு ஆசனம் கூட பெறமுடியாமல் போனதும், மூன்று முஸ்லீம் பாராளுமன்ற உறுப்பினர்கள் தெரிவானதும் வரலாறு. அக்காலங்களின்போது புலிகள் பொதுத் தேர்தலில் மறைமுகமாகவோ நேரடியாகவோ பங்குபெறவில்லை.
2004 ம் ஆண்டு பொதுத் தேர்தலின் போது திருக்கோணமலை மாவட்டம் இரண்டு பாராளுமன்ற உறுப்பினர்களை பெற்றிருந்ததை நினைவுக்குட்படுத்தல் அவசியம். புலிகள் பலமாக இருந்த காலத்தில் இத்தேர்தல் நடத்தப்பட்டமையால் புலிகளின் சுட்டுவிரல் அசைவின்படி மக்கள் ஒற்றுமையுடன் வாக்களித்து இரண்டு பாராளுமன்ற உறுப்பினர்கள் பெறப்பட்டது.
இம்முறை பொதுத் தேர்தலுக்காக அம்பாறை மாவட்டத்திலும் தமிழர் மகாசங்கம், தமிழ்க்கட்சிகள் அனைத்தையும் ஒரு கூரையின் கீழ் கொண்டுவருவதற்காக எடுத்த முயற்சி ஈற்றில் தோல்வியில் முடிந்தது. கட்சிகளை ஒன்று சேர்ப்பதற்கு புத்திஜீவிகள் பலர் மாகாண சபை உறுப்பினர் எஸ். புஸ்பராஜா தலைமையில் பிரத்தியேகமாக தம் காலத்தையும் நேரத்தையும் விரயம் செய்தும் எதுவித பயனும் அளிக்கவில்லை. இம்முறை தமிழ் பிரதிநிதித்துவத்தை காப்பாற்றவேண்டியது கடவுளிடம் தான் உள்ளது.
2010 ம் ஆண்டு பொதுத் தேர்தலின்போது திருக்கோணமலையிலே மகாசபையும் இல்லை புலிகளின் கட்டுப்பாடும் இல்லை. இது போன்று அம்பாறை மாவட்டத்திலும் தமிழீழ விடுதலைப் புலிகளின் கட்டுப்பாடு இல்லை. இதனால் சிதறு தேங்காய் போன்று தமிழ் கட்சிகள் தேர்தல் களத்தில் குதித்து தமிழர் பிரதிநிதித்துவத்தை இல்லாமல் செய்வதற்கு வழி அமைந்துவிடுமோ என தமிழ் உணர்வாளர்கள் ஆதங்கப்படுகிறார்கள். தமிழ் கட்சிகளின் பலப் பரீட்சைக்கு களம் அமைக்க இதுவல்ல தருணம். தமிழர் பிரதிநிதித்துவம் இழப்பதால் தமிழ்மக்களுக்கு ஏற்படப்போகும் ஒட்டு மொத்த பாதிப்புகளுக்கும் பிரிந்து நின்று 'சண்டித்தனம்' காட்டும் தமிழ் கட்சிகளே பொறுப்பாகும்.
தசக்கிரீவன்
