
இலங்கையின் ஜனாதிபதித் தேர்தலானது உலக நாடுகளின் கவனத்தை திசைதிருப்பி உள்ளது. இவற்றிற்கும் மேலாக இந்தியா பார்வையாளர் என்ற நிலையிலிருந்து, சரத் பொன்சேகாவின் களமிறங்கலுக்குப்பின் பங்காளியாக மாறியுள்ளதை அவதானிக்க கூடியதாக உள்ளது.
இந்தியா தனது பிராந்திய நலனை முதன்மைப்படுத்தியே ஒவ்வொரு அடியையும் நகர்த்தும் என்பது அறிந்த விடயம். தன்னைச் சூழ அமைந்துள்ள சீனா, பாக்கிஸ்தான் போன்ற நாடுகளால் ஏற்படுத்தப்படும் அச்ச நிலைக்கு ஏற்றவாறு தன்னை மாற்றியமைக்க வேண்டிய தேவையுள்ளது. கடந்த காலங்களில் இந்தியா தனக்கு எதிரான யுத்தங்களில் இலங்கை இந்தியாவுக்கு சார்பற்ற நிலையில் பெற்ற அனுபவத்தை எப்போதும் மீட்டிப்பார்க்கும் இந்தியா, ஒருபோதும் இலங்கையை பகைத்துக்கொள்ள விரும்பாது. மாறாக இந்தியாவின் பிராந்திய நலன்களுக்காக தன் 'செல்லப்பிள்ளையாக' இலங்கையை விருப்பமின்றி வைத்துக்கொள்ளும். அதாவது தமிழ்நாட்டு மக்களின் விருப்பைவிட இந்தியா தனது இறைமையையும், பிராந்திய நலன்களையும் தான் அதிகம் நேசிக்கும்.
இந்த நிலையில், விடுதலைப்புலிகளுக்கு எதிரான யுத்தத்திலும் கூட இந்தியா பிராந்திய நலனை மையப்படுத்தியே காய்களை நகர்த்தியிருந்தது. அதுவானது இலங்கை அரசுக்கு 'சிம்ம சொர்ப்பனமாக' இருந்த விடுதலைப்புலிகளை அழிப்பதில் அதிக உடன்பாடு இந்தியாவுக்கும் இருந்தது.
இலங்கைக்கு கிடைத்த தலைமைகளுக்குள் ஒரு 'முரட்டுத்தனமான' ராஜபக்சவின் தலைமை இந்தியாவுக்கு மிகப்பொருத்தமாக அமைந்தது. குறிப்பாக எச்சந்தர்ப்பத்திலும் சர்வதேசத்தின் அளுத்தத்திற்கு கட்டுப்படாத ஒரு தலைமையே தேவையாக இருந்தது. இந்த இடத்தில் ரணில், சந்திரிகா போன்றவர்கள் தலைமையாக இருந்தால் எப்படியிருக்கும் என்று கற்பனை செய்துபார்த்தால், இவர்களுக்கான சர்வதேச தொடர்புகளையும், பெருந்தன்மையான அவர்களின் குடும்ப செல்வாக்குப் பின்னணியையும் பாவித்து சர்வதேசம் அவர்களை மனிதநேய மூடிக்குள் மூடிவிடும்.
இவ்விதமான எவ்வித பின்னணியுமற்ற ஒரு தலைமை எப்போ வருமென காத்திருந்த இந்தியாவிற்கு இன்று வாய்ப்பாக அமைந்துவிட்டது.
மஹிந்த ராஜபக்ச என்ற போர்வையினுள் நின்று இந்தியா விடுதலைப்புலிகளுக்கு எதிராக யுத்தமிட்டது. இந்த நிலையில் இந்தியாவின் அட்டவணைப்படி மஹிந்த ஜனாதிபதித் தேர்தலை அறிவித்தார். சரத் பொன்சேகா களமிறங்குவார் என்ற செய்தி மஹிந்தாவை விட இந்தியாவிற்கே அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது. பலவிதமான உபாயங்களை இந்தியா பிரயோகித்தபோதிலும் சரத் பொன்சேகா களமிறங்குவதை தடுக்கமுடியவில்லை. சரத் பொன்சேகாவை அரவணைத்து களமிறங்கும் நிலையை தடுக்க மஹிந்த கொம்பனிக்கு ஆற்றலும் இருக்கவில்லை. கோத்தபாய ராஜபக்ச, சரத் பொன்சேகா முறுகல் காலம் செல்லச் செல்ல அதிகரித்து, இறுதியாக சரத் பொன்சேகா களமிறங்குவதை உறுதிப்படுத்தி விட்டது. இந்த நிலையில் சரத் பொன்சேகா வெற்றியடைந்துவிட்டால் முதலில் கிழியப்போவது இந்தியாவின் முகத்திரை தான். தன்னை ஒரு அஹிம்சை நாடாக உலக நாட்டிற்கு போட்ட வேஷம் வெளிச்சத்திற்கு வர வாய்ப்பிருக்கும்.
'ஆட்டுக்கு தீர்பதுதான் குட்டிக்கும்' என்பதைப்போல மஹிந்தவும் சர்வதேச நீதிமன்றம் வரை இழுபடப்போகிறார் என்பது அடுத்த செய்தியாகும்.
இவற்றிலிருந்து விடுபட ஒரே வழி மஹிந்தாவை ஜனாதிபதியாக்குவது என்பதில் தான் இந்தியா மிகுந்த கவனம் செலுத்தி வருகிறது. இவற்றுக்கு குறுக்கே நிற்கும் எந்த சக்திகளையும் இந்தியா எதிரியாகவே நோக்குமென்பதில் சந்தேகமே இல்லை.
இதுஒரு புறமிருக்க,
இந்தியாவின் அட்டவணைப்படி இலங்கை அரசு மேற்கொண்டது புலிகளுக்கெதிரான யுத்தம் மட்டுமல்ல. ஜனாதிபதித் தேர்தல் அடங்கலாக மகிந்தவை வெல்ல வைப்பதும் தான். இதற்காக தீர்மானிக்கும் வாக்காளர்களாக தமிழர்கள் இருப்பதால் தமிழ் மக்களை கவருவதற்கான பல உபாயங்களை இந்தியா வகுத்து மகிந்தாவுக்கு போதித்திருந்தது. அதன் பிரகாரம் தற்பொழுது மகிந்தவால் வீசப்படும் தமிழ்மக்களுக்கான வாக்குறுதிகள் சரத் பொன்சேகாவால் கூறப்படும் வாக்குறுதிகளை விட மேலாக இருப்பது சிங்கள மக்கள் மத்தியில் ஒரு அதிருப்தியை ஏற்படுத்துமளவிற்கு உருப்பெற்று வருகின்றது (இந்தியாவால் ஏற்படுத்தப்பட்ட வடகிழக்கு இணைப்பு உட்பட). இந்த நிலையில் தமிழ் தேசிய கூட்டமைப்பினர் மகிந்தாவிற்கு சாதகமான முடிவை எடுக்க வேண்டுமென இந்தியா மறைமுகமாக அழுத்தம் கொடுத்து வருகிறது. தமிழ் தேசிய கூட்டமைப்பின் முக்கியஸ்தர்கள் இந்தியாவுடன் தமக்கான நெருங்கிய உறவை வைத்திருப்பதால் கையாளுவதில் இந்தியாவுக்கு இன்னும் இலகுவாக உள்ளது. இதுவே கூட்டமைப்பு எடுக்கும் தீர்மானம் தாமதமாகுவதற்கு காரணமாகலாம். இருப்பினும் இலங்கைத் தமிழ்மக்களின் நலன் கருதியே எந்தத்தீர்வும் எடுக்கப்படுமென தமிழ் தேசிய கூட்டமைப்பு திட்டவட்டமாக அறிவித்து விட்டது. அதுவானது சரத் பொன்சேகாவிற்கு சார்பாக அமையலாம். இது இந்தியாவை பெரும் ஏமாற்றத்திற்கு உள்ளாகியுள்ளது.
இந்த 'இடியப்ப சிக்கலினுள்' சிவாஜிலிங்கம் களமிறங்குவது இந்தியாவுக்கு இன்னுமொரு தலையிடி. தமிழ்மக்களின் வாக்குகள் சிதறுண்டு போகும்பட்சத்தில் மஹிந்த - சரத் போட்டியாக அமையும். இறுதியில் ஜனாதிபதியாவதற்கு மூன்றாம் வேட்பாளரின் வாக்குகளைக் கோரும் பட்சத்தில் சிவாஜிலிங்கமோ, இடதுசாரி வேட்பாளரான விக்கிரமபாகு கருணாரத்னவோ மூன்றாவது வேட்பாளராகலாம். இவர்கள் இருவரும் நிட்சயமாக மகிந்தா பக்கம் சாயமாட்டார்கள். இந்த நிலையில் மகிந்தா தெரிவு செய்யப்படுவது அரிதாகலாம். இது இயல்பாகவே இந்தியாவுக்கு சிவாஜிலிங்கத்தின் மேல் கோபம் ஏற்பட வாய்ப்புண்டு. இந்த நிலையில் ஈழத்தமிழர்கள் சார்பான மாநாட்டுக்கு சிவாஜிலிங்கம் தமிழ்நாடு செல்வது இந்தியாவின் கோபத்தை இரட்டிப்பாக்கி இருக்கலாம்.
தசக்கிரீவன்
"வரலாற்றை அறியாதவன் சமூகம் அழிந்துவிடும்"
-கவிஞர் இக்பால்-
ஒரு உடமையின்பால் உரிமை கொண்டாடுகையில் அவ்வுடமையின் உரிமைத்துவம் சார்பான அங்கீகரிக்கப்பட்ட ஆவணங்கள் வெளிப்படுத்தல் அவசியம். இது யாவற்றுக்கும் பொருத்தமாகும். அதாவது,
இலங்கையில் உள்ள தமிழர் வாழ்விடமான தமிழீழ பிரதேசம் உண்மையிலே தமிழ்மக்களுக்கு உரித்துடையதா? உரித்துடமை உள்ளதென்றால் அதற்கான ஆவணங்கள் (குறைந்த பட்சமாவது) ஒப்புவிக்கப்படுமா? அல்லது, 'தமிழீழம் தமிழரின் தாயகம்' என முன்னோரிலிருந்து இந்நாளிலுள்ளவர் வரைக்கும் கூறப்படும் வாய்ப்பாடு என்பதால் அது தமிழரின் தாயகமாகிவிடுமா? அல்லது,
எமக்கான போரியல் குழுமங்கள் போரிட்டதால் அது நியாயமாகத்தான் இருக்கும் என குத்து மதிப்பில் ஏற்றுக்கொண்டோமா? இப் பேர் போன்ற வினாக்களுக்கு எம்மில் பெரும்பாலானோர், குறிப்பாக இன்றைய இளம் சமுதாயத்தினர் விடை கண்டறிதல் வேண்டும். இதன் நியாயப்பாடுகளை குறைந்த பட்சமாவது அறிந்திருக்கும் பட்சத்தில்தான் துணிந்து எமது உரிமைத்துவத்தை சர்வதேசத்திடமோ அல்லது, ஏன் தமிழரோடு முரண்படும் சிங்கள மக்களுக்கு அதிலும் சிங்கள புத்தி ஜீவிகளுக்கு (அரசியல் வாதிகளல்ல) வரலாற்று ஆவணங்களோடு நிரூபிக்கும் பட்சத்தில் சிங்கள மக்களின் நியாயவாதிகள் நிச்சயம் ஏற்றுக்கொள்வார்கள் என்பதில் ஐயமில்லை. எமது தமிழீழத்திற்கான போராட்டத்தை அறிவியல் பூர்வமாக வெளிப்படுத்துவதில் தான் 'தமிழீழ போராட்டம்' வெற்றி பெற வாய்ப்புண்டு.
இதையே கருக்கோளாகக் கொண்டு விடுதலைப்புலிகளின் தலைவர் மேதகு வே. பிரபாகரன் அவர்களின் உரையின் பல இடங்களில் போராட்டம் வேறுவடிவம் பெறவேண்டும் என்றும், போராட்டம் புலம்பெயர் மக்களிடையே விடப்படுகிறதென்று கூறியதும் கவனிக்கத்தக்கது.
'போராட்டம் வேறுவடிவம்' என்பது தற்போது ஆயுதப் போராட்டத்திற்கு சாத்தியமில்லை. (எதிர்காலத்தில் முனைப்புப் பெறாது என்று அர்த்தம் கொள்ளலாகாது) ஆகவே, அதுவானது அறிவியல் சார்ந்த ஜனநாயகப் போராட்டம் என்றே பொருள் கொள்ள வேண்டும். அடுத்ததானது,
'போராட்டமானது புலம் பெயர் மக்களிடையே விடப்படுகின்ற' தென்பது புலம்பெயர் மக்கள் ஆயுதங்கள் சுமந்து தமிழீழ மீட்புக்காக ஈழம் செல்ல வேண்டும் என கருத்துக் கொள்ள முடியாது. அதுவானது,
சர்வதேச அமைப்புக்களின் சிந்தைக்கு எட்டும் படியாக எமது போராட்ட நியாயங்களை தர்க்க ரீதியாகவும், அறிவியல் பூர்வமாகவும் சாத்வீக முறையில் எடுத்தியம்பி நியாயப்படுத்தலே ஆகும். இந்த இரு விடயங்களிலும் புலம் பெயர் மக்கள் மிகத்தெளிவாக இருக்கவேண்டும். இவற்றில் வெற்றி காண்பதே நோக்காக கொள்ள வேண்டும்.
இதற்கான காரணம் யாதெனில்,
தமிழீழ தாயகத்தின் மக்கள், விலங்குகளுக்குப் பயந்து சூழ்நிலையின் கைதிகளாக மௌனித்து கிடக்கிறார்கள். அவர்களால் வாய்திறந்து நியாயம் சொல்ல, சுதந்திரமும் வலிமையுமற்று வாழ்கிறார்கள்.
இதற்கான பெரும் கடமை யாதெனில் மேதகு பிரபாகரன் அவர்களால் சுட்டி உரைக்கப்பட்ட (மேற்கூறிய) இந்த எடுகோள்களை, கருத்தியல் இலட்சியமாக கொண்டு எம் பணிகளை தொடரவேண்டும்.
தமிழீழம் சார்பான தரவுகளில் நியாயப்பாடு தென்படுதல் அவசியமாகும். அந்தத் தரவுகளாவன, கருத்தியல் இலட்சியத்திற்கு அறிவியல்பூர்வமாக அமைதல் வேண்டும். அதனால், தமிழீழ உரிமைத்துவம் சம்பந்தமான தரவுகளை அறிந்த புத்திஜீவிகள் எழுத்துருவில் வெளிக்கொணரவேண்டும். அதில் நியாயங்கள் நிறுவப்படல் வேண்டும். அதற்காக, நம்பமுடியாத, யதார்த்தத்திற்கு ஒவ்வாத அற்புத சக்திகளைக்காட்டும் புராண இதிகாசங்களூடாக நியாயங்களை நிறுவ முற்படலாகாது. அவை தோற்றுப்போய்விடலாம். அத்தோல்வியானது என்றுமே 'எழும்பமுடியாத' தோல்வியாகக் கூட அமைந்துவிடலாம் என்பதில் கவனம்கொள்ளல் அவசியம். ஆதலால், தமிழீழம் சார்ந்த ஒரு 'எள்ளுப்பொரி' தகவலை தருவது பொருத்தமாக அமையும் என எண்ணுகிறேன்.
றொபேட் நொக்ஸ்(Robert Knox) கண்ட கைலாய வன்னியன்.
மேலைநாட்டவர்கள் இலங்கையின் மீது மோகம் கொள்ள பல காரணங்கள் இருந்தாலும், முக்கிய காரணங்களாக அறியப்படுவது வளங்களும், வணிகமும் எனலாம். இதற்கு தேவையான மூலங்கள் கடலும், கங்கை சார்ந்த நிலமும், ஏற்றுமதி இறக்குமதி வணிகத்திற்கான துறைமுகங்களுமாகும்.
இவை அதிகமாகக் காணப்பட்ட இடங்கள் தமிழரின் தாயகப்பிரதேசங்களே ஆகும். குறிப்பாக, ஆசியக்கண்டத்தின் திறவுகோல் என அழைக்கப்படும் இயற்கை துறைமுகமான திருக்கோணமலை மேலைத்தேய நாட்டவர்களின் கண்களில் பன்னெடும் காலமாக குத்தி நின்றது. இத்துறைமுகமானது வணிகத்திற்கும், எதிரிகளுடன் போர் செய்யவும் வசதிகள் கொண்டதாக அமைந்திருந்தது. துறைமுக வளத்திலே 'மாதோட்டம்' துறைமுகமும் முக்கிய பங்கு வகிக்கின்றது. இந்த இரு துறைமுகங்களையும் தாலமி(PTOLEMY) என்னும் கிரேக்க நாட்டு புவியியல் அறிஞர்(ஏறத்தாள1870 ம் ஆண்டுகளுக்கு முன்) தனது வரைபடம் மூலம் தமிழர் வாழும் இடங்களென(தாமிரிகே DAMIRIKE) சுட்டிக்காட்டியுள்ளார்.(உலக வரைபடத்தை முதல் வரைந்த அறிஞர் தாலமி ஆவார். அவரின் பார்வையில் இலங்கையில் அப்போது இருந்த தமிழர் பகுதிகள் காட்டப்படுகின்றன. அதை பிறிதொரு அத்தியாயத்தில் காண்போம்)
தமிழர் தாயகமான திருக்கோணமலையின் எழிலுக்கும் வளத்திற்குமாக பல பேரரசுகள் போரிட்டு மடிந்தன. இன்றைய யுத்தங்கள் கூட திருக்கோணமலையை அடிப்படையாக கொண்டு நடைபெறுகின்றதென்பது உண்மை. அதனால் தான் தமிழீழ தாயக தலைநகர் திருக்கோணமலை என என்றும் மனதில் பதித்துக்கொண்ட காவல் தெய்வங்களை இக்கணம் நினைவு கூருதல் பொருத்தமுடையதாகும். அந்த வழியிலே இலங்கையை தம்வசப்படுத்த முயன்ற மேலைத்தேய நாடுகளுடன் கண்டிய மன்னன் முரண்பட்டுக் கொண்டான்.
1660 ம் ஆண்டிலே மிகப்பெரிய போர்வீரனாக இருந்த றொபேட் நொக்ஸ் என்னும் ஆங்கிலேயனை திருக்கோணமலையில் மூதூர் என அழைக்கப்படும் கொட்டியாபுரத்திலே கண்டிய மன்னன் சிறைப்பிடித்தான்.(அக்காலத்தில் கொட்டியாபுரப்பற்று வன்னிமை கண்டிய மன்னனின் மேலாட்சியை ஏற்றிருந்தது)
சிறைப்பிடித்த நொக்சை கண்டிய மன்னன் 19 வருடங்கள் சிறைக்கைதியாக வைத்திருந்தான். (இன்னும் கூட மூதூரில் உள்ள பிரதான வீதிக்கு நொக்ஸ் வீதியென பெயருண்டு என்பது குறிப்பிடத்தக்கது) சிறையிலிருந்த நொக்ஸ் தருணம் கண்டு(1710) தப்பியோடினான். தப்பியோடும் வழியில் அனுராதபுரத்தை அடைந்த அவர், அங்கு சிங்கள மொழி பேசும் ஒருவர் கூட அங்கு இல்லாததது கண்டு திகைப்படைந்துள்ளார். அங்கு ஆட்சித்தலைவராக இருந்தவர் தமிழர் என அறிந்து அவரின் உதவியுடன் அனுராதபுரத்திலிருந்து புறப்பட்டு அருவியாற்றுக்கரையோரமாக காட்டுப்பகுதியினூடாக வந்து மன்னாரை குறுக்கறுத்து வன்னிப்பெருநிலப்பரப்பினுள் வந்தடைந்தார். அக்காலத்தில் வன்னியை ஆட்சிசெய்த கைலாய வன்னியனின் ஆட்சியைக் கண்டு வியந்து நின்றார். கண்டி மன்னனுக்கோ, ஒல்லாந்தருக்கோ திறை(வரி) செலுத்தாது தன்னாட்சி கொண்ட சுதந்திர அரசை அமைத்து நேர்த்தியாக ஆண்டுவந்த கைலாய வன்னியனின் பெருமையைக் கண்டு ஆச்சரியமடைந்தார்.
இதுபற்றி விபரமாக தனது பயண நூலில் குறிப்பிட்டுள்ளார். மேலும் இலங்கைத் தீவின் படத்தையும் நொக்ஸ் வரைந்துள்ளார். அப்படத்தில் 'கைலாய வன்னியனின் நாடு' (CEYLOT WANNEA) எனக்காட்டி யாழ்ப்பாண குடா நாட்டுக்கு தெற்கே உள்ள வன்னிப்பகுதியையும், கிழக்கு கரையோரமாக உள்ள வன்னிமைகளையும் தமிழ் ஆட்சித் தலைவனாகிய கைலாய வன்னியனின் ஆட்சியின் கீழ் இருந்தமையை குறிப்பாகக் காட்டியுள்ளார்.
இத்தரவுகளிலிருந்து பண்டைய காலம் முதல் தமிழருக்கான தாயகம் தனியே இருந்ததென்ற உண்மையோடு ஒப்புக்கொண்டாக வேண்டி உள்ளதை உணர்தல் வேண்டும்.
ஒல்லாந்தரும் தமிழரின் ஆட்சியும்
கைலாய வன்னியன், அடங்கா அரசுரிமை கொண்டு ஒல்லாந்தரின் ஆதிக்கத்தினுள் அகப்படாமல் வீரத்துடன் ஆட்சிசெய்தான்.(இதனால் தான் அடங்காப்பற்று என பெயர் வந்ததோ?) இலங்கையிலே இனவழி நாட்டினங்கள் இரண்டு உள்ளதென ஒல்லாந்தர் ஒப்புக்கொண்டிருந்தனர். மொழி மட்டுமல்ல வாழ்வுமுறை, பண்பாடு, அரசு, ஆட்சிமுறைகளில் இருந்து இரு இனங்களும் வேறுபட்டிருந்தன. இதனை மையப்படுத்தி ஆட்சிமுறைகளையும் தத்தமது இறைமை மாறாமல் அமைத்திருந்தனர்.
இலங்கையின் கரையோரங்களை தளமாகக் கொண்டு ஆறு ஆட்சி மாவட்டங்களை ஒல்லாந்தர் அமைத்திருந்தனர்.(கிறிஸ்துவுக்கு முன் 161 ம் ஆண்டில் அனுராத புரத்தை தலைநகராக கொண்டு இலங்கைத்தீவு முழுவதையும் ஆட்சி செய்த எல்லாள மன்னனின் ஆட்சி அமைப்புமுறையை தழுவியே ஒல்லாந்தர் இலங்கையின் ஆட்சி அமைப்பு முறையை யாத்திருந்தனர்)
* கொழும்பு ஆட்சி மாவட்டம்
* புத்தளம் ஆட்சி மாவட்டம்.
* யாழ்ப்பாண ஆட்சிமாவட்டம்.
* திருக்கோணமலை ஆட்சி மாவட்டம்
* மட்டக்களப்பு ஆட்சி மாவட்டம்
* காலி ஆட்சி மாவட்டம்
இந்த ஆட்சி மாவட்டத்தின் தலைவர்களை கொழும்பில் இணைத்து தன்னாட்சி அதிகாரங்களை ஆளுனரூடாக வழங்கியிருந்தனர்.
நிர்வாகத்துடன் நீதியும் பேணுவதன் பொருட்டு மூன்று நீதி மாவட்ட பிரிவுகளாக(Judicial District) ஒல்லாந்தர் ஏற்படுத்தி இருந்தனர்.
1)கொழும்பு ஆட்சி மாவட்டம், புத்தளம் ஆட்சி மாவட்டம் இரண்டும் இணைந்து கொழும்பைத் தலைமையகமாகக் கொண்டு இயங்கியது.
2)யாழ்ப்பாண ஆட்சி மாவட்டமும், திருக்கோணமலை ஆட்சி மாவட்டமும் இணைந்து யாழ்ப்பாணத்தைத் தலைமையகமாகக் கொண்டு இயங்கியது.(வடகிழக்கு இணைந்து)
3)காலி ஆட்சி மாவட்டம் தனி நீதிப்பிரிவாக காலியை தலைமையகமாகக் கொண்டு இயங்கியது.
இதிலிருந்து தமிழருக்கும் சிங்களவருக்குமாக தனித்தனி நீதிப்பிரிவுகள் அமைந்திருந்தமையை அவதானித்தல் அவசியமாகும்.
தனித்தனி இரு இனங்களுக்குமான வேறுபட்ட ஆட்சிமுறைகளை அமைத்து நிருவாகம் நடத்தப்பட்டது.
யாழ்ப்பாணம், திருக்கோணமலை, மட்டக்களப்பு, புத்தளம், கற்பிட்டி ஆட்சி மாவட்டங்களுக்கு தமிழரின் பண்பாடு, நாகரீகம், வாழ்வியல், மாறாமல் ஒன்றித்து போகக் கூடியவாறு ஆட்சி அமைக்கப்பட்டிருந்தது.
ஜோஹன்சு சைமன்சு என்ற ஒல்லாந்து ஆளுநர் (கி.பி. 1703) யாழ்ப்பாண மக்களின் வழமைகள், பண்பாடுகள், மதம் என்பன தனித்துவமானது என அறிந்து அவற்றை தொகுத்து 'தேசவழமை' என பெயரிட்டு அதற்கமைய நீதி செலுத்தியமை ஒரு வரலாற்றுக் குறிப்பாகும்.
மேற்கூறிய வரலாற்றை மீள் நினைவுக்குட்படுத்திப் பார்க்கையில் 'தமிழருக்கான தாயகம்' இலங்கைத்தீவிலே இருந்திருக்கின்றதென்பது ஆதாரங்களுடன் உள்ளது.
இதனை உற்று நோக்குகையில், தமிழருக்கான தாயகத்தைக் கோருவது என்னவோ புதிதாக முளைத்த விடயமல்ல. பரம்பரை பரம்பரையாக எம் முன்னோர்களின் முதுச சொத்தான எமது வாழ்விடங்களை தந்துவிடுங்கள் எனவும், மாற்றாருக்கு அதில் உரிமையில்லை என நீதியாகவும் நேர்மையாகவும் வெளிப்படுத்துவதே ஆகும்.
தமிழர் தம் தாயக பூமியில் தன்னாட்சி அமைத்து சுதந்திரமாக வாழ நினைப்பதில் தவறொன்றுமில்லை.
'தமிழர் தாயகம்' ஆக்கிரமிப்புக்குட்பட்டு பறிக்கப்படும் போது அதனை உரிமைத்துவம் கொண்ட மக்கள் தடுக்க முற்படுவதை உரிமைப்போராட்டமென்பதா? அல்லது பயங்கரவாதம் என்பதா?
நேர்மையாக, நீதியாக, தர்ம அடிப்படையில் சர்வதேசம் நடுநிலமையாக இதனை நோக்கி நீதி வழங்கவேண்டும். இதையே காலம் காலமாக ஈழத்தமிழ்மக்கள் கேட்டு நிற்கிறார்கள்- மறுக்கப்படுவதனால் போரிட்டு வருகிறார்கள்.
சுவிசிலிருந்து
கனகசபை தேவகடாட்சம்

சிங்களத்தின் தலைமைகள் கொடுத்த வாக்குறுதிகளிலிருந்து மாறுவது இல்லை. அது எந்த நிலையில் என்பதுதான் கேள்வி! தமிழ்மக்களுக்கான எதிர்விளைவுகளை தோற்றுவிக்கும் சந்தர்ப்பங்களில் எல்லாம் சிங்களத்தலைமைகள் வாக்குறுதியை மாற்றுவதும் இல்லை மீறுவதுமில்லை. அதற்கு உதாரணமாக வெகு அண்மைக்காலத்தில் நடந்தேறிய திருக்கோணமலை நகராட்சி மன்ற, பிரதேசசபை உறுப்பினர்களின் 'கட்சித் தாவல்கள்' இதற்கு பெரும் எடுத்துக்காட்டாகக் கொள்ளலாம்.
சிங்களமானது திருக்கோணமலையை குடியேற்றத்தாலும், அராஜகத்தாலும் ஆக்கிரமிப்புச் செய்யமுடிந்திருக்கிறது. இருப்பினும் அரசியலால் வெற்றி கொள்ள முடியவில்லை என்ற ஆதங்கம் முழு சிங்களத்திற்கும் அதாவது கட்சிமோதல்களுக்கும் அப்பால் இன்றுவரை உள்ளது என்பதை எவராலும் மறுத்துரைக்க முடியாது. தமிழருக்கெதிரான வாக்குறுதிகளை வழங்கி அதிலிருந்து மாறாத சிங்களத் தலைமைகளின் வரிசையில் மஹிந்த ராஜபக்ச முன்னோடியாகும். அதிலும் கிழக்கு மாகாணத்தை சிங்களத்தினுள் கரைக்கும் மிகப்பெரிய ஏற்பாடுகளில் ஒன்றுதான் கிழக்கு மாகாண முதலமைச்சர் நியமனம்எனக்கொள்ளலாம்.
தமிழீழத் தலைநகராக கொண்ட திருக்கோணமலையை பாதுகாக்க வேண்டிய தேவை பேதங்களுக்கப்பால் அனைத்து தமிழருக்கும் உண்டென்பதை உணரல் அவசியம். அதாவது, அரசியல் ரீதியாக திருக்கோணமலை தமிழ்மக்களின் தேசியம் சார்ந்த அபிலாசைகளை சிங்களத்தினுள் கரைக்கும் செயற்பாட்டை முதன்முதலில் உருவாக்கியவர்கள் தான் இந்த 'கட்சி தாவிகளான' நகராட்சி, பிரதேசசபை உறுப்பினர்கள் என்பதை மனதில் பதித்தாக வேண்டும்.
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச அவர்களின் சிந்தனையில் முழுமையாக இருப்பது சிறுபான்மை கட்சிகளை உடைத்து பலவீனமாக்கி ஒரு பலவீன அரசியல் நிலையை தோற்றுவித்து அதனை தனது அரசியல் இருத்தலுக்கு சாதகமாக்கி கொள்வதே ஆகும். அதிலே இரு பெரும் தேவைகள் தொக்கி நிற்கிறது. ஒன்று தனது அரசியல் இருத்தலை உறுதியாக்கி கொள்வது.
மற்றது, பிரதானமாக கிழக்குமாகாண தமிழ்பேசும் மக்களிடையே பிளவுகளை உண்டாக்குவதும், மேலும் திருக்கோணமலை பிரதேசத்தை சிங்கள தேசிய நலன் கருதி சிங்கள மயமாக்கலுமாகும்.
இவையானது, தற்காலிகமான பெரும் வெற்றியாக சிங்களத்திற்கு அமைவதுபோல தோற்றமளித்தாலும் கால நகர்வில் சர்வதேசத்தின் தலையீட்டால் தவிடுபொடியாகப் போகின்றதென்பது பெரும் உண்மையாகும்.
இவற்றிற்கு அப்பால்,
ஜனாதிபதி மகிந்தவால் சேர்த்தணைக்கப்பட்ட திருக்கோணமலை 'கட்சிதாவிகளுக்கு' கொடுத்த வாக்குறுதி நிறைவேற்றலானது, நகராட்சிமன்ற, பிரதேசசபைத் தேர்தலை மேலும் 2011 ஏப்பிரல் வரை நீடித்து ஒரு வருட 'போனஸ்' வழங்கியமையாகும். ஒருவருட 'போனஸ்' க்குள் கரைந்துபோன இவர்களின் அரசியல் அத்தியாயத்தின் நிறைவு இன்னும் ஒரு வருடத்தினுள்ளே கொண்டாடி தமது சுயநல அபிலாஷைகளையும், தேவைகளையும் தீர்த்துக்கொள்ள வேண்டுமென தமிழ்மக்கள் நிம்மதிப்பெருமூச்சு விட்டு காத்து நிற்கின்றனர்.
மலையூர் பண்ணாகத்தான்
இலங்கையின் தமிழருக்கு சிங்கள பேரினவாதிகளால் ஏற்படுத்துகின்ற நெருக்கு வாரங்களின் இரணங்கள் ஆறுவதற்கு முன்னர், அல்லது அதுபற்றி மீள் நினைவுக்குட்படுத்தப்பட முன்னர், பல சர்ச்சைகளை சிங்களம் உண்டாக்கிவிட்டு தனது காரியங்களை சாதித்துக்கொள்ளும் சாதுரியத்தை குறுகிய காலமாக கையாண்டு வருவதை மிக உன்னிப்பாக அவதானிக்க வேண்டியது சுய சிந்தனை கொண்ட தமிழ்மக்களின் கடமையாகும்.
தமிழீழ விடுதலைப்புலிகளின் பின்னடைவையடுத்து, புலம்பெயர் நாடுகளில் அதன் பாதிப்பானது,
* புதிய தலைமைக்கான முன்னெடுப்பு
* நாடுகடந்த தமிழீழம்
*தமிழர் தாயகத்தை நிர்மாணிப்பதற்கான சர்வதேசத்தை நோக்கிய கவனயீர்ப்பு போராட்டங்கள்.
*வட்டுக்கோட்டை தீர்மானத்தின் மீதான சர்வதேச கணக்கெடுப்பு.
மேற்கூறிய காரணிகள் இலங்கை அரசுக்கு ஒரு புதிய வடிவத்திலான போராட்டமாக அமையலாயிற்று. இப்போராட்டங்களை மழுங்கடிக்கப்படவேண்டிய தேவை அவசரமாகவும், அவசியமாகவும் இலங்கையரசுக்கு தோன்றியமையால், தமிழீழ விடுதலைப்புலிகளின் தலைவர் வே.பிரபாகரனின் இறப்பு அத்தாட்சிப்பத்திரத்தை இந்தியா கோரியபோதிலும் அதனை வழங்குவதை தாமதமாக்கி தமிழ்மக்கள் மத்தியிலே ஒரு சர்ச்சை நிலையை தோற்றுவித்தது. இதன்மூலம் தலைவர் பிரபாகரன் இறந்ததாக கூறப்படும் உடலத்தை அடையாளம் காண்பதில் வாதப் பிரதிவாதம் ஏற்பட்டது. இதுவானது இலங்கை அரசுக்கு ஒரு இனிப்பான நிகழ்வு. இச்சர்ச்சையானது தொடர்ந்துகொண்டு இருக்கையில் சிங்கள அரசு அமைதி காத்து தமிழ் தேசியத்துக் கெதிரான ஒருவித வெற்றியை தனதாக்கி வந்தது. அதாவது, புலம்பெயர் மக்களின் கூர்மைப்படுத்தப்பட்ட தாயக உணர்வை திசை திருப்புவதாக அமைந்தது. அதனை அடுத்தாற்போல், இந்தியா வேகப்படுத்திக்கொண்டிருந்த தலைவர் பிரபாகரனின் இறப்பு அத்தாட்சிப்பத்திரத்தை கையளிக்க தீர்மானித்த கையோடு, ஜனாதிபதித் தேர்தலையும் இலங்கையரசு தேதி குறித்து அறிவித்தது. அதன் தொடர்ச்சியாக,
*மஹிந்த சரத் முரண்பாடுகள்
*சிவாஜிலிங்கத்தின் ஜனாதிபதிதேர்தல் வேட்புமனுத்தாக்கல்
*கிழக்கு மாகாண முஸ்லிம் தலைவர்களின் தமிழருக்கெதிரான அறிக்கைகள்
*பிள்ளையான் கருணா முறுகல்
*தமிழ் தேசியக்கூட்டமைப்பின் ஜனாதிபதித்தேர்தல் சம்பந்தமான மௌனம்
மேற்கூறியவை, பெருமளவில் புலம்பெயர் நாடுகளிடையே தாக்கத்தை ஏற்படுத்தி, அம்மக்களிடையே இருந்த தமிழ் தேசிய உணர்வு மெது மெதுவாக கரைந்து போகவேண்டுமென இலங்கை அரசு எதிர்நோக்கி இன்றுவரை காத்து நிற்கிறது. மேலும் மேலும் இதனை இலங்கை அரசு பூதாகரமாக்கி இலங்கை தமிழ் மக்கள் அடங்கலாக புலம்பெயர் மக்கள் உட்பட அனைவரின் புலன்களையும் திசைமாற்றுவதற்காக தமிழ்மக்கள் மத்தியிலே 'அங்கிடு தத்திகளை' தெரிந்தெடுத்து 'தன்கையாலே தன் கண்ணை குத்துவதற்கான' ஏற்பாடுகளை செய்து வருகின்றது.
இந்த இலங்கை அரசின் கபடத்தனமான பிறிதொரு பணியின் மறுதொரு படிதான்,
தமிழ்மக்களிடையே வட்டுக்கோட்டை தீர்மானத்தை பற்றிய விமர்சனங்கள் ஆகும்.
1976 ம் ஆண்டு வட்டுக்கோட்டை தொகுதியிலுள்ள பண்ணாகம் மெய்கண்டான் மகாவித்தியாலயத்தில், தமிழ்மக்களின் ஏகோபித்த ஆதரவுடன் செய்யப்பட்ட தீர்மானங்களானது வெறுமனே எழுந்தவாரியாக தீர்மானிக்கப்பட்டதல்ல. காலம் காலமாக சிங்களத்தலைமைகளின் ஏமாற்று வித்தைகளிலிருந்து பெற்ற அனுபவங்களைக் கொண்டு எழுதப்பட்டவை ஆகும். குறிப்பிற்காக சில ஏமாற்றுவித்தைகள்,
*1921 ம் ஆண்டு எழுத்து வடிவில் இலங்கை தேசிய காங்கிரசால் வழங்கிய சில முக்கிய தீர்மானங்கள் பின்பு மறுத்தமை.(இதனை கொழும்பு பிரகடனம் என்று அழைக்கப்படுகின்றது)
*1944 ம் ஆண்டில் இலங்கை தேசிய காங்கிரஸ் கட்சியில் இருந்த அமரர் J.R. ஜெயவர்த்தன தமிழ் மொழியைப்பற்றி கிஞ்சித்தும் நோக்கம் கொள்ளாமல் சிங்கள மொழி மட்டும் அரசகரும மொழியாக பிரகடனப்படுத்தியமை.
*1946 ம் ஆண்டில் உருவாக்கப்பட்ட ஐக்கிய தேசியக்கட்சி தீர்மானங்களிலும் கூட மேற்கூறிய தீர்மானங்களையே அமுல்ப்படுத்தியமை.
*1956 ம் ஆண்டு பண்டா செல்வா ஒப்பந்த்தத்தை எதிர்த்து ஐ. தே. கட்சியின் J.R. ஜெயவர்த்தன கண்டிக்கு பாத யாத்திரை சென்றமை.
*1956 ம் ஆண்டு தனிச்சிங்களச்சட்டம் நடைமுறைப்படுத்தல்.
*1958 ம் ஆண்டு தமிழ் சிங்கள இனக்கலவரம்.
*1960௦ ம் ஆண்டு மறுக்கப்பட்ட தமிழர் உரிமைக்காக சத்தியாக்கிரக போராட்டம் ஏற்படுத்தி அது தோல்வியில் முடிந்தமை.
*1965 ம் ஆண்டு செய்யப்பட்ட டட்லி - செல்வா ஒப்பந்தம் நடைமுறைபடுத்த முடியாது முறிந்தமை.
*1974 ம் ஆண்டு தை 10௦ ம் திகதி நடைபெற்ற தமிழாராட்சி மாநாட்டில் சிங்கள இராணுவத்தால் 9 தமிழர்கள் சுட்டுக்கொலை செய்யப்பட்டமையும் அது சார்பாக அப்போது ஆட்சியிலிருந்த (ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி) பிரதமர் சிறிமாவோ பண்டாரநாயக்கா உரிய நடவடிக்கை எடுக்காமையும்.
இவை போன்ற ஏராளமான, தமிழ்மக்களிற்கு எதிரான முரண்பாடுகளை காலம் காலமாக தோற்றுவித்த சிங்கள அரசிடமிருந்து பெற்றுக்கொண்ட அனுபவத்தின் வெளிப்பாடே அந்த வட்டுக்கோட்டை தீர்மானமாகும். இதுவே தமிழ்மக்களுக்கான இறுதி தீர்மானம் அல்ல. ஆனால் இதனை அடிப்படையாக கொண்டு தான் அதற்கு பிற்பாடான நிகழ்ச்சித்திட்டங்கள் தொடர்ந்தன என்பது உண்மையாகும். அதாவது, வட்டுக்கோட்டை தீர்மானமானது என்றுமே ஒரு வழிகாட்டிவிளக்கென்று கூறலாம். அதனை புறம் தள்ளி வைத்து தீர்வுக்கான வழியை காணமுடியாது. இதானதிலிருந்து பெற்ற பரிணாம வளர்ச்சியானது உச்சமாக சென்று விரிவடைந்து இன்று சர்வதேச அங்கீகாரம் வரை வளர்ந்திருக்கின்றது. இந்த நிலைக்கு கொண்டுவந்த பெருமை தமிழீழ விடுதலைப்புலிகளைத் தவிர வேறு ஒருவரும் உரிமை கொள்ள முடியாது.
ஆகவே, வட்டுக்கோட்டை தீர்மானம் பற்றிய சர்ச்சை அவசியமற்றது. அதை ஏற்றுக்கொள்ள வேண்டுமென்பதும் ஏற்றுக்கொள்ள வேண்டாமென்பதும் இரண்டாம் பட்சமாக இருக்கலாம். வட்டுக்கோட்டை தீர்மானமானது கொண்டுவந்து நிறுத்தியுள்ள இடம் விடுதலைப்புலிகளின் காலமெனலாம்.
தமிழீழ விடுதலைப்புலிகள் நிறுத்தியுள்ள இடம்( தற்போதய காலம்) சர்வதேச மட்டமாகும். தற்போதைய தமிழ்மக்களின் பங்கானது சர்வதேச மட்டத்திற்கூடாக உரிமை பெறுவதற்கான போராட்டமென்பதே. இதன் தீர்வுக்கான பொறிமுறை பற்றி சிந்திப்பதே சுயநிர்ணயத்தை நேசிக்கின்ற ஒவ்வொரு தமிழரின் கடப்பாடாகும். இதனை விடுத்து கடந்த காலங்களில் ஏற்படுத்தப்பட்ட தீர்மானங்கள் பற்றிய அனாவசிய சர்ச்சைக்குள் மூழ்குவோமானால் தமிழ்மக்களின் அனைத்து உரிமைகளும் தொலைந்துவிடும். இதுவே சிங்களத்திற்கு மிக உச்சமான மகிழ்வாக இருக்கும். எனவே விடுதலைப்புலிகள் விட்ட இடத்திலிருந்து எமது உரிமைக்கான போராட்டத்தை தொடங்குவதோடு அதற்கு கைவிளக்காக வட்டுக்கோட்டை தீர்மானத்தையும் எடுத்துக்கொள்ள வேண்டுமென தமிழ்மக்கள் உறுதி பூண வேண்டும்.
இந்த உறுதியானது காலத்திற்கு காலம் தமிழ்மக்களிடையே விரிசல்களை உண்டாக்க முனையும் இலங்கை அரசுக்கும், இலங்கை அரசால் நியமிக்கப்பட்டிருக்கும் 'தமிழ் கூலிப்படை ஏஜெண்டுகளுக்கும்' தலைஎழுப்ப முடியாத 'செம' அடியாக அமையும்.
மல்லிகையூரான்
கருத்துகள் எதிர்பார்க்கப்படுகின்றன

'கொள்ளையர்களுடன் சேரமாட்டேன். நாட்டுப்பற்றாளர்களுடன் கைகோர்த்து நடப்பேன்' என முன்னாள் இலங்கையின் முன்னாள் ஜனாதிபதியான சந்திரிகா பண்டாரநாயக்க குமாரணதுங்க, மகாறகம புற்று நோய் வைத்தியசாலையில் மருந்துகள் அன்பளிப்பு செய்யும் வைபவத்தில் கூறினார்.
மேலும் அவர் கூறுகையில்,
'இந்நாட்டிற்கு குடும்பத்தையே அர்பணிப்பு செய்த எம்மையே வெளியில் போட்டுவிட்டார்கள். சர்வாதிகாரம் இலங்கையிலே தலைவிரித்தாடுகிறது. கொள்ளையர் கூட்டம் கட்சிக்குள் அதிகாரம் செலுத்துகிறது. மக்களின் பணம் அமைச்சர் பதவிகளுக்காக வீணடிக்கப்படுகிறது. இந்த ஜனாதிபதித்தேர்தலில் சரியான முடிவை சரியான நேரத்தில் எடுப்பேன்'.
காலம் காலமாக சிங்களத்தலைமைகள் தமிழர் விவகாரத்தில் 'பல்டி' அடித்து வருவது அறிந்த பழைய தகவல்கள். 1930௦ ம் ஆண்டுகளில் அமரர் S.W.R.D பண்டார நாயக்கா தொடங்கி இன்றுவரையுள்ள தலைமைகள் வரை இதற்கு உதாரணமாகக்கொள்ளலாம்.
எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் தமிழ்மக்களின் வாக்குகளை சூறையாடுவதற்கு இருபெரும் சிங்களத்தலைமைகள் தமக்குள்ளே மோதிக்கொண்டு பல 'குட்டுக்கள்' வெளியாகிகொண்டு இருக்கும் நிலையில், அண்மையில் சரத் பொன்சேகாவால் ஓர் ஆங்கில ஊடகத்திற்கு வழங்கிய செவ்வியில் பாதுகாப்பு அமைச்சின் செயலாளரின் கட்டளையால் சரணடைய வந்த புலித்தலைமைகள் சுட்டுக் கொல்லப்பட்டதாக கூறியிருந்தமை சர்வதேச மனிதநேய அமைப்புக்களை ஒரு 'உலுக்கு உலுக்கி' விட்டிருந்தது. இது சார்பாக பெரும் சர்ச்சைக்குள்ளான சரத் பொன்சேகா உடனடியாக 'பல்டி' அடிக்கவேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டார்.
தமிழர் வாக்குகளை பெரும்பான்மையாகப் பெறலாம் என எண்ணி அறிக்கைவிட்ட சரத் பொன்சேகா, தமக்குரிய சிங்களவரின் வாக்குகளை இழந்து 'முதலுக்கே மோசம் வரும்' என நோக்கியமை இந்த நிலைக்கு அவரை தள்ளி விட்டிருந்தது.
உண்மையையும், தர்மத்தையும் நோக்காது வெறுமனே வாக்குகளையும், பதவிகளையும் ஆதாரமாகக்கொண்டு உண்மைச்சம்பவங்களை மறைக்கின்ற தலைமைகள் எப்படி தமிழ்மக்களுக்கு மட்டுமல்ல, முழு இலங்கை மக்களுக்குமே நேர்மையாக நடக்கப் போகின்றதென்பது கேள்விக்குறியாகும். குறிப்பாக எவ்வாறு தமிழர் இவர்களை நம்பலாம்? இதனை இலங்கை குடிமக்கள் என்ற நிலையில் இருந்து ஆராய்ந்தால், இரு பெரும் இனங்களான சிங்கள, தமிழ் மக்கள் வாழும் நாடாகும். ஒரு குடையின் கீழ் இரு இனங்களையும் ஆள வேண்டும் என்று எண்ணுகின்ற சிங்கள தலைமைகள் ஒரு விடயத்தை அடிப்படையாக ஏற்றுக்கொள்வதற்கு காலம் காலமாக மறுத்து வருகின்றனர். அதுவானது, தமிழ்மக்களும் இந்நாட்டின் உரிமைத்துவம் கொண்ட பிரஜைகள்என்பதையே!
மேல்கூறப்பட்ட, அதாவது சரத் பொன்சேகாவினால் காட்டிக் கொடுக்கப்பட்டதாக கூறப்படும் பாதுகாப்பு செயலாளரின் கட்டளையானது சரத் பொன்சேகாவை நீதிமன்றம் வரை கொண்டுசெல்ல வேண்டும் என மஹிந்த கொம்பனியால் சூழுரைக்கப்படுவதும், ஊடகங்கள் தான் தனது உரையை திரித்துக் கூறியுள்ளதென்று சரத் பொன்சேகா மறுப்பதுமானது, இரு வேறுபட்ட இனங்கள், தத்தமது வேறுபட்ட அடையாளங்களுடன், சமய, கலாசார, பண்பாடுகளுடன் ஒன்றோடு ஒன்று இணைந்து வாழ முடியாது என்ற செய்திய கூறி நிற்கிறது.
ஒரே குடையின் கீழ் வாழும் ஓர் இறைமை கொண்ட இந்நாட்டின் ஓர் இன மெனக்கொண்டிருந்தால் இந்த நிகழ்வானது பெரும் தாக்கத்தை செலுத்தியிருக்காது.
மறுவளமாக ஓர் முறை சிந்தித்துப்பார்த்தால், அதாவது சரணடையவந்த 300௦௦ புலித்தலைமைகள் உட்பட வன்னி மக்கள் சிங்கள மக்களாக இருந்தால் இந்த நிலை எப்படி அமைந்திருக்கும்? காட்டிக்கொடுப்பென்றோ, நீதிமன்றங்களில் நிறுத்தவேண்டுமென்றோ வாதப்பிரதிவாதம் எதுவும் நிச்சயமாக நடைபெறுவதற்கு எள்ளளவும் வாய்ப்பிருந்திருக்காது.
இதற்கான வரலாற்றுச்சான்று என்னவென்றால், 1970 களில் J.V.P யின் பயங்கரவாதத்தை அடக்கிய அன்றைய பிரதமர் ஸ்ரீமாவோ பண்டாரநாயக்காவின் அரசு (ஸ்ரீ.ல.சு.க) J.V.P சார்ந்த சிங்கள பொதுமக்களுக்கோ, அவர்களின் வாழ்விடங்களிற்கோ, ஒட்டுமொத்த அழிவை ஏற்படுத்தவில்லை. J.V.P யின் பயங்கரவாதத்தை தனிமைப்படுத்தியே அழித்தது. அந்த பொறிமுறையானது, தற்போதைய அரசால் தமிழ்மக்களில் ஏற்படுத்தப்படவில்லை
என்பது, தமிழ்மக்களை இலங்கையின் இறைமையுள்ள மக்களாக சிங்களம் நோக்காமையே காட்டுகிறது.
வன்னியில் நடைபெற்று ஓய்ந்த யுத்தம் சிங்கள மக்களுக்கு நடந்திருந்தால் இன்று எத்தனையோ பொது அமைப்புகள் சிங்கள மக்களிடையே இருந்து முளைவிட்டிருக்கும். அவை எந்தெந்தவிதத்தில் அரசுக்கு எதிர் நடவடிக்கை எடுக்க முடியுமோ அந்தந்த விதங்களில் ஏராளமான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டிருக்கும்.
சிங்களம் ஒருபோதும் தமிழ்மக்களை இறைமையுள்ள இலங்கை பிரஜையாக ஏற்றுக்கொள்ளாது என்பதே உண்மை.
இதனால் சிங்களத்திற்கும் பாதிப்புகள் அதிகம் என்பதை அறிதல் பொருத்தம்!
தேர்தல் காலங்களில் தமிழரின் வாக்குகளை பெறுவதற்கு சிங்களத்தலைமைகள் சுயமரியாதை இழந்து அம்மணமாக நிற்கவேண்டியதில்லை.
இதிலிருந்து புலனாகும் செய்தி யாதெனில்,
தமிழர் பிரிந்து தமக்கான தாயகத்தில் சுதந்திர இறைமையுள்ள சமூகமாக வாழ்வதுதான்.
இந்த நிலையை சிங்களம் நன்கு சிந்தித்து, தமிழ்மக்கள் பிரிந்துசெல்ல அனுமதித்து, 'தொல்லை விட்டுதே போதும்' என்றிருந்தால் இரு இனங்களும் அமைதியாகவும் நிம்மதியாகவும் வாழலாம்.
தமிழ்மக்களின் சுயநிர்ணயத்திற்கும், சுதந்திரத்திற்கும் சிங்களத்தால் அசைவும் அதிர்வும் ஏற்பட்டுக் கொண்டிருக்கும் பட்சத்தில் சிங்களம் நிம்மதியாகவும், சுதந்திரமாகவும் வாழமுடியாது என்பது நிதர்சனம்.
தசக்கிரீவன்

'தமிழ் தேசிய கூட்டமைப்பின் பெயரில் இணைய ஆயத்தமில்லை' என புளொட் அமைப்பின் தலைவர் தர்மலிங்கம் சித்தார்த்தன் கூறிய விடயமானது மேலும் தமிழ் மக்களின் ஒற்றுமையை சீர்குலைப்பதாக அமைகின்றது.
தமிழ் தேசிய கூட்டமைப்பானது பல தமிழ் அரசியல் கட்சிகளின் கோர்வையாகும். கட்சிரீதியாக பல வேறுபட்ட கருத்துக்கள் நிலவலாம். இருப்பினும்,
தமிழரின் எதிர்கால தேசிய நலன்களை நோக்கி நகருவதையே இலக்காக கொண்ட இக்கோர்வைக்கட்சிகள் வேறுபாடுகளை இரண்டாம் பட்சமாக தள்ளிவைத்து விட்டு ஓர் அணியின்கீழ் இணைந்தன. இந்த இணைவு தமிழ்மக்கள் மத்தியில் பெரும் ஒற்றுமையை ஏற்படுத்தியதோடு, தமிழ்மக்கள் ஏகமனதாகவும் ஏற்றுக்கொண்டு வெற்றிபெற வைத்தனர்.
ஒரு கோர்வையில் தமிழ் அரசியல்கட்சிகள் ஒன்றிணைந்த போதும், தேர்தல் காலங்களில் அந்தக் கோர்வையினுள் 'கடிபாடு' இருந்தன என்பதற்கு மறுப்பில்லை. வேட்பாளர்களிடையே தனித்தனி முரண்பாடுகள், பிரதேச வேறுபாடுகள், சாதித்துவம், உட்கட்சிப் பேதங்கள், இப்படி ஏராளமாக இருந்தபோதிலும் தமிழ்மக்கள் அதனைப் பொருட்படுத்தாது தத்தமது விருப்பிற்கமைய வாக்களித்தார்கள். வழங்கப்பட்ட வாக்குகள் யாவும் சின்னத்திற்கு(வீடு) போடப்பட்டன. விருப்புவாக்குகளில் 'குத்துவெட்டுகளும்' முரண்பாடுகளும் இருந்தன.
தேர்தல் வெற்றிகளின் பின்னர் தெரிவு செய்யப்பட்ட உறுப்பினர்கள் திசைமாறாமல் தேசியத்தை நோக்கிய நகர்விலே உறுதியாக இருந்தார்கள். தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைமைப்பீடங்கள் இருந்தாலும் முற்று முழுதான முடிவை எடுக்கும் ஆளுமை தமிழீழ புலிகளிடமே இருந்தது. அதை எதிர்க்கமுடியாத சூழ்நிலையில் மௌனமாக தலைமைப்பீடம் இருந்தது. அப்போது தலைக்கு சுமைகளும் இல்லை. சர்ச்சைகளும் இல்லை. அனைத்துமே 'பிரம்போடு இருக்கும் பெரியையாவிடம்' இருந்தது. இப்போது தலையை பிய்த்துக் கொள்ளும் பிரச்சினைகள் அதிகரித்த போதிலும் தடம் மாறாமல் செல்ல வேண்டுமென்பதே அனைத்து தமிழ்மக்களின் எண்ணமாகும்.
புளொட் தலைவர் சித்தார்த்தனின் கருத்தை நோக்குமிடத்து அடிப்படையில் தமிழ்மக்களின் தேசிய நலனில் அக்கறை இல்லை என்பது புலனாகிறது.
அதாவது, 'இனிமேல் ஆயுதப்போராட்டமில்லை' எனக்கூறியதும், வேறுவழியிலான தீர்வு எது என்று சொல்லப்படாமையானது சிங்களத்தினுள் தமிழரின் தேசிய வாதத்தை ஜீரணமடையவைக்கும் நிலையையே தெளிவாகக் காட்டுகிறது. இதன் வெளிப்பாடே தமிழினத்தின் முதல் எதிரியான மஹிந்த ராஜபக்சவுக்கு ஆதரவு தெரிவிப்பது ஆகும்.
சித்தார்த்தனைப் பொறுத்தவரையில் ஏனையவரோடு ஒப்பிடுகையில் இலங்கை அரசியலின் யதார்த்த நிலைகளை மிக நீண்டகாலமாக(தர்மலிங்கம் பா.ம.உறுப்பினரின் மகன் என்ற வகையில்) அறிந்தும் புரிந்தும் கொண்டவராவார். அதனால் சிங்களத்தலைமைகள் நிச்சயம் ஏமாற்றும் என்ற உண்மையை தெளிவாகப் புரிந்தவர் என்ற அடிப்படையில் அதாவது மஹிந்த ராஜபக்ச காலை வாருவார் என தெரிந்திருந்தும் ஆதரவு கொடுக்க முனைவது பின்னணியில் சுயநலம் தொக்கி நிற்பதைக் காட்டுகிறது. அதற்கான ஒரு நொண்டிச்சாட்டாக தமிழ் தேசிய கூட்டமைப்பு என்ற பெயரின் கீழ் இணைய மறுப்பதாகும்.
தன்னையும் ஏமாற்றி ஊரையும் ஏமாற்றும் வித்தகர்கள் காலத்துக்கு காலம் நம்மவர்கள் மத்தியில் உருவாகுவது தமிழருக்கிட்ட சாபமாகும்.
எனவே, இப்போதும் காலம் போகவில்லை. முடிவை மாற்ற அவகாசமுண்டு. 'விளக்கைப் பிடித்துக் கொண்டு கிணற்றுக்குள் விழும்' நிலைக்கு வராமல் சித்தார்த்தன் தமிழினத்திற்கு தேவை என்ற வகையில் தன்னைத்தானே சிங்களத்தின் கபடங்களில் இருந்து காப்பாற்றிக் கொள்ளவேண்டும் .
'ஏமாற்றாதே ஏமாறாதே'
மலையூர் பண்ணாகத்தான்

ஒரு இனத்திற்கெதிரான யுத்தத்தை மேற்கொண்ட மஹிந்த அரசு, இனத்தின் அடையாளத்தை சிதைத்துக்கொண்டிருக்கும் வேளையில் திறந்த முட்கம்பிச் சிறைக்குள் சூழ்நிலையின் கைதிகளாக இருக்கும் மக்களை தமக்கு சாமரம் வீசும்படி கேட்டுக்கொள்வதில் விந்தை ஒன்றுமில்லை.
'அகத்தினழகு முகத்தில் தெரியும்' என்பதைப்போல ஜனாதிபதி மஹிந்த சகிதம் விமல் வீரவன்ச பரிவாரங்களின் முகங்களின் வழிந்து நிற்கும் வெற்றிக்களிப்பினை காட்சிப் படங்களிலிருந்து காணக்கூடியதாக இருக்கின்றது. கொன்றொழித்த தமிழ்மக்களை கொண்டே தனக்கு 'முதல் மரியாதை' பெறப்படுவதை மானமுள்ள தமிழர்களின் மனதில் மாறாத வடுவாக இருக்கும். அதேபோல் 'முதல் மரியாதை' கொடுக்கின்ற எம்மவர் மீதும் மானமுள்ள தமிழர் காறியுமிழ வேண்டும் போலும் இருக்கும்.
இவற்றையெல்லாம் மேலெழுந்த வாரியாக நோக்கும் போது 'எம்மினத்தை அழித்தவனுக்கு எம்மினமே கெளரவம் கொடுக்கின்றது' என்ற இயல்பான முடிவுக்கு நாம் வரலாம். இந்த நிகழ்வினை மூட்டை கட்டி வைத்துவிட்டு, கீழுள்ள காட்சிப்படத்தை ஒருமுறை உன்னிப்பாக பார்ப்போம். கீழே வாருங்கள்.
ஆராத்தி எடுக்கும் நிலையில் மஹிந்த பரிவாரங்களின் முகங்களில் வெற்றிக்களிப்பு தாண்டவம் ஆடுகின்றது என்பது உண்மைதான். அதே வேளை எம்மினப்பெண்கள் முகங்களில் ஆராத்தி தீயைவிட 'வேள்வித்தீ' எரிவதை எம்மால் காண முடிகிறதல்லவா?
மங்கள ஆராத்தியின் போது மலர்ந்திருக்க வேண்டிய எம்குலப்பெண்களின் வதனங்கள், மாறாக எதிர்காலத்தில் இனவாதசிங்களத்திற்கு எதிராக சுட்டெரிக்கும் தீயை மூட்டவிருப்பது எமக்கு கட்டியம் கூறி நிற்பது புலப்படுகின்றதல்லவா?
இது விருப்பின்றிய அமங்கல ஆராத்தி. பொறுத்திருப்போம் பொங்கும் நாள் கண்டு
இலங்கையிலிருந்து
மலையூர் பண்ணாகத்தான்

தமிழ் தேசிய கூட்டமைப்பின் நடவடிக்கைகளை நோக்குமிடத்து, பலவிதத்தாலும் சிங்களத்துக்கு வெற்றியீட்டிக் கொடுப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளுவதாகத் தெரிகிறது.
பொறுப்பற்ற அறிக்கையும் பொறுப்பற்ற பேச்சும் நம்பியிருக்கும் தமிழினத்தை அதல பாதாளத்தில் தள்ளுவதாக அமைந்து விடுமோ என்ற அச்சம் அனைத்து தமிழ்மக்களின் மனங்களிலும் எழுகின்றது.
தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் வன்னி பாராளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் 'பாராளுமன்ற உறுப்பினர் சிவாஜிலிங்கம் பணத்துக்கு அடிமையாகி ஜனாதிபதித்தேர்தலில் குதிக்கின்றார்' என கூறிய கூற்றை எண்ணி நெகிழாத தமிழ்மக்கள் இருக்க மாட்டார்கள். சிவாஜிலிங்கம் விலை போவதென்றால் அவருக்கு ஏராளமான சந்தர்ப்பங்கள் இருந்திருக்கின்றன. சிவாஜியின் தமிழ் தேசிய உணர்வே அவரை ஜனாதிபதித்தேர்தலில் களமிறங்கத் தூண்டியது என்பதே உண்மை. இருப்பினும், கூட்டமைப்பின் முடிவை நோக்காது ஜனாதிபதித்தேர்தலில் களமிறங்குவதாக அறிவித்தமை எதேட்சையானதும், அவசரமானதுமாகும். அது கண்டிக்கப்படவேண்டியது.
இது ஒருபுறமிருக்க, மறுவளத்தால் சிந்தித்தால் சிவசக்தி ஆனந்தன் பொது வேட்பாளராகிய சரத் பொன்சேகாவை ஆதரிக்க வேண்டும் என கூறும் கூற்றானது சரத் பொன்சேகாவுக்கு
சிவசக்தி ஆனந்தன் 'விலைப்போனவர்'என்று கருதிவிடலாமா? ஒரு ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்திவிடலாம் என்பதற்காக சரத் பொன்சேகாவை ஆதரிக்க வேண்டும் என சிவசக்தி ஆனந்தன் கூறும் கூற்று நியாயமானது. அதில் நேர்மை உண்டு என்று நம்பும் பட்சத்தில் சிவாஜியின் கூற்றில் நேர்மையும் நியாயமும் உண்டு.
இதில் வெளிப்படுகின்ற செய்தி என்னவென்றால் ' ஊர் இரண்டு பட்டால் கூத்தாடிக்கு தாயம்'. இதனால் கூட்டமைப்புக்குள்ளே இருக்கின்ற கருத்து முரண்பாடு ஜனாதிபதித் தேர்தலுக்குமப்பால் சிங்களத்துக்கு பெரும் வெற்றியாக அமையும் என்பதில் எவ்வித ஐயமும் இல்லை. ஆகவே தமிழ்த்தேசிய கூட்டமைப்பிடம் பொதுமக்கள் சார்பாக மிக விநயத்துடன் கேட்பது என்னவென்றால், கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்களுக்கிடையே கருத்து முரண்பாடுகளைத் தோற்றுவித்து பிரிவினையை ஏற்படுத்தி கொள்ளாதீர்கள். அதுவானது சிங்களத்தின் நோக்கத்திற்கு இசைவானதாகிவிடும்.
தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் முடிவெடுக்கும் தலைமைகளுக்கு ஒரு வேண்டுகோள்!
தீர்க்கமாக சிந்தித்து இந்த ஜனாதிபதித் தேர்தலில் விரைவான முடிவெடுக்க வேண்டியுள்ளது. ஏனென்றால் தள்ளிபோடும் முடிவுகளால் கூட்டமைப்பு உடைந்து விடுமோ என்ற பயம் ஏற்படுவதில் நியாயமுண்டு. கூட்டமைப்பின் சார்பாக வேட்பாளர் எவரும் களமிறங்கவில்லை என்ற முடிவெடுக்கப்பட்டால் அடுத்த முடிவானது கூட்டமைப்பினர் இந்த தேர்தலில் எப்படி நடந்துகொள்ள வேண்டும் என்ற முடிவேடுப்பதேயாகும். தற்பொழுது இந்த இரண்டாவது முடிவெடுப்பதில் ஏற்படுகின்ற தாமதம் கூட்டமைப்பினுள் சிக்கல்களுக்கு கருக்கூட்டுகிறது. ஒன்றுமட்டும் தெளிவாக புலனாகின்றது,
'பெரியையா பிரம்போடு பின்னால் இல்லை என்பதே '
ஆசிரியர்கள்
தணல் இணையதளம்

எதிர்வரும் ஜனாதிபதித்தேர்தலை முன்னிட்டு முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் தலைவர் ரவுப் ஹக்கீம் தலைமையில் ஒர்குழுவொன்று மூதூரில் பிரச்சாரக் கூட்டமொன்றை நடாத்தியது. அக்கூட்டத்தில் ரவுப் ஹக்கீம் கருத்து தெரிவிக்கையில்,
'ஜனநாயகத்திற்கெதிரான இந்த அரசு சிறுபான்மை மக்களுக்கு சொல்லொணாத் துயரத்தை தந்துள்ளது. மஹிந்த ராஜபக்சவை மீண்டும் ஜனாதிபதியாக்கினால் குடும்ப அராஜகத்திற்கு வழிவகுத்தவர்கள் ஆகிவிடுவோம். போர்முகத்துக்கப்பால் சரத் பொன்சேகா தமிழ்மக்களுக்கு உரிமைகளை வழங்க ஆயத்தமாகவிருப்பத்தை உறுதியாக நம்பலாம். இதை தமிழ்மக்களும் தமிழ்த்தலைவர்களும் நம்பவேண்டும். தமிழ் முஸ்லீம் கட்சிகளை துண்டுதுண்டாக பிரிப்பதற்கு ஆர்வம் காட்டிவந்த மகிந்தவின் ஆட்சியை சிறுபான்மை மக்கள் ஒன்றிணைந்து அகற்றவேண்டும்' என்றார்.
இக்கூட்டத்தில் முக்கியஸ்தராக முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும், கிழக்கு மாகாணசபை உறுப்பினருமாகிய திடீர் தெளபிக் உரையாற்றியதும் குறிப்பிடத்தக்கது.

மட்டக்களப்பு நகரில் சரத் பொன்சேகாவை ஆதரித்து கரு ஜெயசூர்யாவின் தலைமையில் கூட்டமொன்று நடைபெற்றது. இக்கூட்டத்தை கிழக்கு மாகாண ஐக்கியதேசியக்கட்சி உறுப்பினர் அரசரத்தினம் சசீதரன் ஒழுங்குபடுத்தியிருந்தார். இதில் தமிழ்மக்கள் விடுதலைப்புலிகள் அமைப்பைச்சேர்ந்த புவனேந்திரன் உட்பட பெரும்பாலான ஐக்கியதேசியக்கட்சி ஆதரவாளர்கள் கலந்துகொண்டார்கள். மட்டக்களப்பில் சரத் பொன்சேகாவிற்கு ஜனாதிபதித்தேர்தலில் ஆதரவை திரட்டுவதற்காக அமைக்கப்பட்ட முதலாவது கூட்டம் இதுவாகும் என்பது குறிப்பிடத்தக்கது.

