தமிழ் பேசும் மக்களுக்கு எதிராக சிங்களம் காலம் காலமாக கட்டவிழ்த்துவரும் அராஜகம் மீண்டும் தலைதூக்க ஆரம்பித்து விட்டது.
கொழும்பு 2 இலுள்ள மலே வீதியில் பெரும்பான்மையாக தமிழ்பேசும் மக்களின் குடியிருப்பு பகுதியே ஆகும். மிக நீண்ட காலமாக(100 வருடங்களுக்கு மேல்), குறிப்பாக இஸ்லாமியர்கள் வாழ்ந்துவரும் பூமியாகும். சடுதியாக இந்த குடியிருப்புகளிலிருந்து அம்மக்களை வெளியேற்றுவதன் நோக்கம் புரியாமலில்லை.
கொழும்பு மாநகரத்திலே தமிழ்பேசும் மக்களின் ஆதிக்கம் அதிகரித்து வருவதை பல காலமாக உள்ளூர 'புகைந்து' கொண்டிருந்த சிங்களத்திற்கு இப்போது தருணம் சரியாக அமைந்துவிட்டது. இன்னும் ஆழமாக சொன்னால் கடந்த வருடம் மே மாதந்துடன் நிறைவுபெற்ற தமிழ் உரிமை மீட்புப் போராட்டமும் சாதகமாக அமைந்துவிட்டது எனலாம். இதற்கு பாடம் படிப்பிப்பதற்கு 'சண்டியர்கள்' இல்லாமையும் வருத்தத்திற்குரியது.
அண்மைய பொதுத் தேர்தல்களில் தெரிவு செய்யப்பட்ட தமிழ்பேசும் இனத்தின் பாராளுமன்ற பிரதிநிதிகளின் எண்ணிக்கை மேலும் சிங்களத்திற்கு 'புகைச்சலை' உருவாக்கியிருக்கும். இதன் வெளிப்பாடுதான் கொழும்பு - மலே வீதியில் உள்ள அத்துமீறி அமைந்திருக்கும் குடியிருப்புகளை அரசு அகற்றுவதற்கான திட்டமிட்ட நடவடிக்கைகளாகும்.
'சட்டம் யாவருக்கும் சமம்'
இதில் மாற்று கருத்து எவருக்கும் இருக்க முடியாது. ஆனால் மலே வீதியிலுள்ள தமிழ்பேசும் மக்களுக்கு ஒரு சட்டம்!
கிழக்கு மாகாணத்தில் அம்பாறை, திருக்கோணமலை, மூதூர் - இலங்கைத் துறைமுகத்துவாரம்,
வடக்கு மாகாணத்திலே மாங்குளம், முல்லைத்தீவு, கிளிநொச்சி, வவுனியா, மாதகல் போன்ற பகுதிகளில் வாழும் தமிழ்ப்பேசும் மக்களுக்கு பிறிதொரு வகையான சட்டம் நடைமுறையில் இருப்பது கண்கூடு.
சட்டம் பொதுவானதென்றால், இனத்துக்கொரு சட்டம் இலங்கையில் தோன்றுவதற்கு காரணம் என்ன? இங்கு தான் இலங்கையின் இன முரண்பாடுகளின் தோற்றம் தெரிகிறது. 1947 களிலே தந்தை செல்வாவால் முன்வைக்கப்பட்ட 'வடகிழக்கில் அத்துமீறிய சிங்களக் குடியேற்றத்திற்கு' எதிரான கோஷம் இன்று நிதர்சனமாகியுள்ளது.
கொழும்பு மலே வீதியில் அத்துமீறி வாழும்(குறைந்த வருமானமுடைய) தமிழ்பேசும் மக்களை ஈவு இரக்கமின்றி, பதில்வதிவிடம் வழங்காது வெளியேற்றும் அரசு, திருக்கோணமலை ஈச்சிலம்பற்று பகுதிகளில் அமைந்த தமிழ்மக்களின் இந்துக் கோவில்களை எதுவித அறிவித்தலுமின்றி அகற்றி தெருவிலே வைத்துவிட்டு(மலை நீலியம்மன் ஆலயம், குறிஞ்சிமலை முருகன் ஆலயம்) அவ்விடத்தில் புத்த விகாரைகள் தற்பொழுது அமைக்கப்பட்டு வருவதும், தமிழ் பாரம்பரிய நிலங்களிலே அத்துமீறிய சிங்களக் குடியேற்றங்கள் ஏற்படுத்தப்பட்டு வருவதையும் எந்தச் சட்டத்தின்கீழ் என்பதை தமிழ்பேசும் மக்கள் பேதங்களை மறந்து உற்றுநோக்கல் வேண்டும்.
சாதிக்கொரு சட்டம். இனத்துக்கொரு சட்டம். இவை இலங்கை வரலாற்று அத்தியாயத்தில் மறைக்க முடியாதவை.
திருக்கோணமலை - மூதூர் தொகுதி முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்(மர்கூம்) அமரர் A.L. அப்துல் மஜீத் அவர்கள் 1970 ம் ஆண்டு தேர்தல் மேடையில் கூறிய வார்த்தைகளை மீள்நினைவுக்கு கொண்டுவருவது பொருத்தமாக இருக்கும்.
'அன்பான மக்களே!
தமிழ்மக்கள் தங்கள் வாழ்வியல் உரிமைகளுக்காக அரசுக்கெதிராக குரல் கொடுத்து வருகிறார்கள்.
சிங்களவர்கள் அவற்றை வழங்க மறுக்கிறார்கள்.
எதிர்காலத்தில் இது பெரும் போராட்டமாக வெடிக்கலாம். அப்போராட்டங்களில் தமிழர் தரப்பினர் தோற்றுவிடக் கூடாது. அவர்களின் நியாயமான வெற்றிக்கு இஸ்லாமியர் நாங்கள் பக்க பலமாக இருக்க வேண்டும். ஏனெனில் தமிழரின் போராட்ட அரண் சிங்களத்தால் உடைக்கப்படுமாயின், அடுத்ததாக இருக்கின்ற முஸ்லீம் இனத்தவரிலே சிங்களம் கொம்பு பாச்சும். அதற்கு எம்மால் ஈடுகொடுக்க முடியாதென்பதால் இருஇனமும் இணைந்தே இருக்கவேண்டும்'.
அமரர் மஜீத் அவர்களின் கூற்று இப்போ நிதர்சனமாகி வருவதை உணர முடிகிறது.
'சிறுபான்மை இனமென்பது இலங்கையில் இருக்கக்கூடாது' என்று கூறிய ஜனாதிபதியின் கூற்றை சற்று ஆழமாக சிந்தித்தால் உண்மை புரியும். திட்டமிட்ட சிறுபான்மையினரின் குடியகற்றலையும், சிங்களத்தின் மேலாதிக்கத்தையும் புரிந்துகொண்டு அடுத்த நடவடிக்கை என்ன செய்யவேண்டுமென தமிழ்பேசும் மக்களும், அரசியல் தலைமைகளும் கூட்டாக இணைந்து உடனடியாக சிந்திக்க வேண்டிய காலம் நெருங்கி விட்டது.
சிறுபான்மையினரின் ஒற்றுமையே பலம்.
கனக கடாட்சம்
கட்டப்பொம்மனின் வீரவரலாறு சொல்லும்போது காட்டிக்கொடுத்த எட்டப்பனும் தொடர்வான்.
இயேசுவின் புனித வாழ்தலை கூறும்போது காட்டிக்கொடுத்த யூதாசும் தொடர்வான்.
பண்டார வன்னியனின் வீர காவியம் படிக்கும்பொழுது காட்டிக்கொடுத்த காக்கை வன்னியனின் வரலாறும் தொடரும்.
இவற்றை எடுகோள்களாக வைத்துக்கொண்டு எட்டப்பனும், யூதாசும், காக்கைவன்னியனும் வரலாற்றில் வாழ்கிறார்கள் என்று அர்த்தம் கொள்ளல் ஆகாது. அதுவானது புனிதருக்கும், வீரர்களுக்கும் இவர்கள் ஆற்றிய துரோகத்தனத்தின் இழிகர அடையாளச்சின்னமாகவே வரலாற்றில் பதிகிறார்கள் என்பதே வாஸ்தவமான கூற்றாகும்.
கடந்து சென்ற காலச்சுவடுகளின் தடங்களை பின்தொடர்ந்து பார்த்தால் அப்பாவித் தமிழ்மக்களுக்கு, தமிழினத்தை தலைநிமிர்ந்தது வாழவைப்பதற்காக தம்மை ஆகுதியாக்கிக்கொண்ட வீரர்களுக்கு மஹிந்த அரசு செய்த துரோகத்தனத்துக்கான ‘வெற்றிச்சின்னம்’ தான் பண்டார வன்னியன் தடம் பதித்த புதுமாத்தளன் பகுதியில் நடப்பட்டிருக்கும் பயங்கரவாதத்தைக் காட்டும் அந்தத் துப்பாக்கிச்சிலை ஆகும். எதிர்காலத்தில் அதைச்சுற்றியே சிங்களப்படையினரின் பெரும் பாசறை அமையப்போகின்றது.
பயங்கரவாதத்தை ஒழித்ததற்கான நினைவுச்சின்னமென்று அரசு கூறலாம். புலிகளை கொன்றொழித்ததற்கான வெற்றிச்சின்னமென்றும் கூறலாம். எது எப்படியாயினும், ஆயிரமாயிரம் அப்பாவித்தமிழ்மக்களினதும், ஆயிரமாயிரம் வீரர்களினதும் வேட்கை அனல் கொண்ட பச்சை இரத்தங்களை சேறாக்கி, வித்துடல்கள் விதைக்கப்பட்ட புனித பூமியாகும்.
உறங்கு நிலையில் இருக்கின்ற விதைகளை உயிர்பெற வைப்பதற்காக நாட்டிய ‘வெற்றிச்சின்ன’மாகவே பறிகொடுத்த தமிழ்மக்கள் நோக்குகின்றார்கள், என்று மஹிந்த அரசுக்கு புரியாமல் இருக்கின்றதென்பதற்கு ஆழ்ந்த அனுதாபங்கள்.
‘அனுமானின் வாலில் கட்டிய தீ’ போன்று எதிர்காலத்தில் அனைத்து தமிழ்மக்களின் நெஞ்சங்களில் அந்தத் தீ பற்றிவைக்கப்போகின்றது என்ற உண்மையை பாவம் சிங்கள இனவாதிகளால் இப்போது உணரமுடியவில்லை என்பது பரிதாபத்துக்குரியது.
யூதாஸ் தனது துரோகத்தனத்தால்தான் ஜேசுபிரான் சிலுவையில் மரிக்க வேண்டியதாயிற்று என்பதை அவன் மனச்சாட்சி உணர்த்தியபோது, அவனின் துரோகத்தனத்திற்கு சன்மானமாக கிடைத்த அந்த நிலத்திலேயே தன்னை மாய்த்துக்கொண்டதும், இன்றுவரை அந்த நிலம் ‘இரத்த நிலம்’ என்று அழைக்கப்படுவதையும் வரலாற்றில் காணலாம். அதே ‘இரத்த நிலமாக’ துரோகத்தனத்தின் சின்னமாக மகிந்தாவின் ‘வெற்றிச்சின்னம்’ வன்னி மண்ணில் ஒரு குறிப்பிட்ட காலம்வரை நிலை கொள்ளப்போகிறது.
மானமுள்ள ஒவ்வொரு தமிழரின் இதயத்திலும் தொடர் அசைவு நிலையில் இந்த ‘வெற்றிக் கொண்டாட்டம்’ மக்கள் மனதில் சோகமாய்ப் பதிந்திருக்கும் என்பதோடு, எமது தாயக மீட்பை சுட்டிக்காட்டும் குறியீட்டுச் சின்னமாய் வீரத்துடன் விஸ்வரூபம் எடுக்கப்போகின்றதென்பதையும் உறுதியுடன் நம்பலாம்.
தசக்கிரீவன்
இலங்கையில் வாழும் தமிழ் பேசும் மக்களுக்கு உரிமைகளுடன் கூடிய சுதந்திர வாழ்வை வழங்குவதற்கு சிங்களத் தலைமைகள் காட்டும் 'கஞ்சத்தனம்' மீது கொண்ட அவநம்பிக்கைதான் காலத்துக்கு காலம் ஒப்பந்தமாக வெளிவந்துள்ளன. அவையே ஒவ்வொரு தேர்தலின்போதும் 'பிச்சைக்காரனின் புண்' போல தமிழ் பேசும் தலைமைகளும் சிங்களத் தலைமைகளும் பாவித்து பயனடைந்து வருகிறார்கள் என்பது வரலாறு. இதிலே, ஒரு சில வழிகளில் தமிழ் கட்சிகளும் நன்மையடைந்து வருவதையும் மறைக்க முடியாது. இலங்கை வரலாற்றிலே குறித்துரைக்கக்கூடிய ஒப்பந்தங்களில் 1947 ம் ஆண்டு தமிழ் காங்கிரஸ் தேர்தல் வாக்குறுதி, 1958 ல் செய்துகொண்ட பண்டா + செல்வா ஒப்பந்தம், அதனைத் தொடர்ந்து 1987 ல் செய்துகொண்ட இந்திய இலங்கை ஒப்பந்தங்களாகும்.
1944 ம் ஆண்டு ஐப்பசி மாதம் 29 ம் திகதி ஆரம்பிக்கப்பட்ட தமிழ் காங்கிரஸ் கட்சியின் தலைவராக அமரர் G.G. பொன்னம்பலமும், உபதலைவராக அமரர் தந்தை S.J.V. செல்வநாயகமும் இருந்தார்கள். 1947 ல் நடைபெற்ற இலங்கைப் பொதுத் தேர்தலில் 'சோல்பரி ஆணைக்குழுவை நிராகரித்தல்' என்பதை மையப் பொருளாக முன்வைத்து தமிழ் காங்கிரஸ் வடகிழக்கு தமிழ் மக்களிடம் கேட்ட ஆணைக்கு 7 பாராளுமன்ற உறுப்பினரைக் கொண்டு பெரும் வெற்றி கிடைத்தது.
அதனைத் தொடர்ந்து, அரசுத் தலைவர் அமரர் D.S .சேனநாயக்காவிடம் தமிழ் காங்கிரஸ் கோரிக்கைகளை வைத்தது.
* இந்திய வம்சாவழியினருக்கு பிரஜா உரிமை வழங்கல்
* இலங்கையின் தேசியக்கொடியில் தமிழருக்காக இடம் வழங்கல்
* தமிழ் பகுதிகளில் அத்துமீறிய சிங்கள குடியேற்றங்களை நிறுத்துதல்
* சிங்களமும், தமிழும் அரச கரும மொழியாக்கல்
இதற்கான முழு ஆதரவையும் அமரர் G.G. பொன்னம்பலம் வழங்க மறுத்தமையால், முரண்பட்டுக் கொண்ட அமரர் தந்தை S.J.V. செல்வநாயகம் அவர்கள், 1949 ம் ஆண்டு புரட்டாதி 18 ம் திகதி தமிழ் அரசுக் கட்சியை ஸ்தாபித்ததையும் இவ்விடத்தில் நினைவுக்குட்படுத்தல் பொருத்தமாகும்.
1947 ல் முன்வைத்த கோரிக்கைகள் இன்றுவரை நிறைவேற்றப்படாமல் கிடப்பில் உள்ளதை அவதானிக்கலாம்.
1958 ம் ஆண்டு செய்துகொண்ட பண்டா + செல்வா ஒப்பந்தத்தில் முக்கியமான
* இலங்கையின் உரிமைத்துவம் கொண்ட தேசிய சிறுபான்மை இனத்தின் தேசிய மொழி 'தமிழ்' ஆகும்.
* வடகிழக்கில் பிராந்திய சபைகளை அமைத்தல்
* கல்வி, சுகாதாரம், போக்குவரத்து, விவசாயம், நிலப்பங்கீடு, நீர்ப்பாசனம், கைத்தொழில், மீன்பிடி, வீடமைப்பு போன்றவைகளின் தீர்மானமும், நிர்மாணமும் அவ்வப்பகுதி பிராந்திய சபைகளுக்கு வழங்கல்
* வடகிழக்கில் உள்ள பாராளுமன்ற உறுப்பினர்கள், நகரசபைத்தலைவர்கள், மாநகரசபைத் தலைவர்கள், பிராந்தியசபை உறுப்பினர்கள் (விரும்பினால்) ஒன்றிணைந்து திட்டங்களை வகுக்கவும், நிர்வகிக்கவும்.
இதுவரை இலங்கை அரசால் நடைமுறைப் படுத்தப்படாமல் போய்விட்ட ஒப்பந்தங்களில் இவையும் அடங்கும்.
1987 ம் ஆண்டிலே அமரர் J.R. ஜெயவர்த்தனாவின் தலைமையில் செய்துகொள்ளப்பட்ட இலங்கை இந்திய ஒப்பந்தமானது
* சகல இனங்களும் மொழி, மத, பண்பாடுகளை பேணிப் பாதுகாக்க உரிமையுடையவர்கள்.
* சிங்களம், தமிழ் ஆட்சிமொழியாகும். ஆங்கிலம் தொடர்பு மொழியாகும்.
* தமிழ் பேசும் மக்களின் வரலாற்று வதிவிடம் வடகிழக்காகும்.
* வடக்கு கிழக்கு இணைக்கப்படவேண்டும்
* ஒரு வருட எல்லைக்குள் சர்வஜன வாக்கெடுப்பு நடாத்தப்பட்டு அங்கீகாரம் பெறல் வேண்டும்.
* இலங்கையில் மாகாண சபை உருவாக்கப்படல் வேண்டும்.
வெறுமனே ஒப்பந்தம் செய்யப்படுவதும், அவை மீறப்படுவதும் அல்லது நடைமுறைப் படுத்தப்படாமல் கிடப்பில் கிடப்பதும் எதிர்வரும் காலங்களில் முற்றுப் புள்ளிகளோடு
நிறுத்தப்படல் வேண்டும். காலத்துக்கு காலம் அரசியல் தேவைகளை கருத்தில் கொண்டு புதிது புதிதாக ஒப்பந்தம் புனைவது அவசியமற்றதாகும்.
நடைமுறைப்படுத்தாது தேங்கிநிற்கும் ஒப்பந்தங்களை காலத்திற்கு ஏற்றால் போல் மறுசீரமைத்து உயிர் கொடுக்க வேண்டும். தெரிவு செய்யப்பட்ட தலைமைகளை விட, தெரிவு செய்த பொதுமக்களுக்கே உரிமை அதிகம். எதிர்காலங்களில் அரசியல் தலைமைகளை தெரிவு செய்யும்போது அறிவாற்றல் தனமாக, கடந்த ஒப்பந்தங்கள் சார்பாக இவர்கள் ஆக்கபூர்வமான என்ன நடவடிக்கைகளை மேற்கொண்டார்கள் என அவதானித்து அதற்கு முன்னுரிமை வழங்கி தலைமைகளை தெரிவு செய்தல் அவசியம்.
வெறுமனே, 'உசுப்பேற்றும்' வீர வசனங்களை பேசுபவர்களையும் இவர்கள் 'வெட்டி வேரோடு சாய்ப்பார்கள்' என்ற எதிர்வு கூறும் கற்பனா வாதத்தையும் ஏற்றுக்கொண்டு வாக்குப் பண்ணல் ஆகாது. 'தெரிவானவர்கள் என்ன செய்தார்கள்' என்பதில்தான் தெரிவு அமையவேண்டும். 'ஊரான்' 'சொந்தக்காரன்' 'சாதிக்காரன்' போன்றவை தெரிவுகளுக்குள் அடங்கலாகாது. இதுவே ஆரோக்கியமான, சிறந்த தலைமைகளை நிகழ், எதிர் காலங்களுக்கு வழங்குவதாக அமையும்.
கனகசபை தேவகடாட்சம்
இழப்புக்களுடன் மன அழுத்ததற்கும் உள்ளான ஒருவர் அல்லது இருவரை பார்த்திருப்பீர்கள். ஆனால் இங்கு ஒரு பாடசாலையின் அதிபர் அதன் இருநூறிற்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் இரண்டாயிரம் மாணவ மாணவியர் என்று ஒரு பெரிய கல்விச் சமுதாயமே இழப்புக்களுடனும் மன அழுத்தங்களுடனும் வாழ்ந்து வருகின்றனர். இங்கு தற்சமயம் உள்ள அதிபரில் தொடங்கி ஆசிரியர்கள் கடைசி வகுப்பு மாணவர்கள் என்று அனைவருமே இறுதி யுத்தத்தில் அத்தனையையும் இழந்து தங்கள் கல்வியை மட்டுமே சொத்தாக எடுத்து வந்தவர்கள். அத்தனை இழப்புகள் சோகங்களிற்கு மத்தியிலும் கல்வியை தொடர விரும்பிய மாணவர்களிற்கு மட்டுமல்ல கல்வியை வளங்க முன்வந்த இடம் பெயர்ந்த ஆசிரியர்களிற்கும் வவுனியாவின் பிரபலமான 7 பாடசாலைகளின் கதவுகளும் பூட்டிக்கொண்டன. வந்தவரையெல்லாம் வாழவைத்த வளமான வன்னி மண்ணின் சொந்தக்காரர்களிற்கு வந்த இடத்தில் கிடைத்தெல்லாம் வசைச்சொற்கள் மட்டுமே. அத்தனையையும் தாங்கி அனாதையாய் நின்றவர்களிற்குக் கைகொடுத்தது காமினி மகாவித்தியாலம் மட்டும்தான். இங்கு தற்சமயம் தங்கள் உடல் அவயவங்களையும் பெற்றோர்களையும் இழந்துபோன 84 மாணவர்களிற்கான கல்வி அடிப்படை வசதிகளையும் புலம்பெயர் உறவுகளிடம் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். இன்று அந்த பாடசாலை மாணவர்களின் நிலைமைபற்றி அதன் அதிபர் திரு.ரங்கநாதன் அவர்களிடமே கேட்போம்.
நேசக்கரம்
1947 ம் ஆண்டு நடைபெற்ற இலங்கையின் முதல் தேர்தல் காலங்கள் தொடங்கி தேசியத்தின் தடம்மாறாது, நோக்கங்கள் பிசகின்றி தமது வாழ்வியல் நிலைகளை விட சுதந்திர உரிமைகளேயே வேட்கையாகக்கொண்டு வாழ்ந்து வருபவர்கள் திருக்கோணமலை வாழ் மக்கள் என்றால் மறுப்பதற்கு முடியாததாகும்.
திருக்கோணமலையின் பாராளுமன்ற உறுப்பினராக தெரிவுசெய்யப்பட்ட (1947) அமரர் சிவபாலன் தொடங்கி இன்று வரையிலான இரா. சம்பந்தன், க. துரைரெட்னசிங்கம் வரையிலான தெரிவுகளை பின்னோக்கிப் பார்த்தால் இதன் உண்மை புலனாகும். தந்தை செல்வநாயகம் அவர்களின் வழிகாட்டலில் தொடங்கிய இலங்கை தமிழரசுக்கட்சி ஆரம்ப காலம் முதல் இன்று வரை தமிழ் தேசியத்தை நோக்காகக்கொண்ட சுதந்திர தாகத்தை திருக்கோணமலை மக்கள் பல தேர்தல்கள் மூலம் வெளிப்படுத்தியிருந்தனர். இதே சாயலாகக் கொண்டு திருக்கோணமலை நகராட்சிமன்ற மற்றும் நகரமும் சூழவும் பிரதேச சபை ஆகியவற்றின் தலைமைத்துவங்களை மக்கள் தேசியம் என்ற நிலை மாறாமல் தம் உணர்வுகளை வெளிப்படுத்தியிருந்தார்கள். இருப்பினும் அண்மையில் நடைபெற்ற மாகாண சபைத்தேர்தலில் சிங்களத்தைப் பெரும்பான்மையாகக் கொண்ட ஐக்கியதேசியக்கட்சியில் சந்தர்ப்ப சூழ்நிலை காரணமாக இரு தமிழர்கள் (சு. பரசுராமன், ந. வரதன்) வெற்றிபெற்றிருந்தனர். இதற்காக மக்கள் சிங்கள கட்சி ஒன்றிற்கு தடம் மாறிவிட்டார்கள் என்று அர்த்தம் கொள்ளலாகாது. அதாவது தமிழ் தேசிய கூட்டமைப்பு தேர்தலில் களமிறங்காமையும் தற்போதய ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச அரசாங்கமான பொதுஜன ஐக்கிய முன்னணியை தோற்கடித்து தமிழ் மக்கள் தமது தேசியத்தின் வெளிப்பாட்டை வெளிப்படுத்துவதேயாகும். இலங்கையை மாறி மாறி ஆட்சி செய்துவரும் பெரும் கட்சிகள் (U.N.P, S.L.F.P) எப்படியாவது தமது காலடிகளை திருக்கோணமலையில் பதித்துக்கொள்வதற்கு பல வழிகளிலும் முயற்சி செய்தாலும் அவர்களால் தமிழ் வேட்பாளர்களையே களமிறக்க முடிந்ததே தவிர ஒரு தமிழ் பிரதிநிதிகளையும் சிங்களகட்சிகளால் பெற முடியவில்லை என்பது வரலாறு. திருக்கோணமலையை தமதாக்கிக் கொள்வதற்கு சிங்களத்துக்கு பல தேசியத்தேவைகள் இருந்தன. இதற்கான சூழ்ச்சிகளை சிங்களக்கட்சிகள் பேதங்களுக்கப்பால் ஒன்றிணைந்திருந்தன. அதற்காக முன்னெடுக்கப்பட்டவைகளில் குடியேற்றமும், பௌத்த ஆலயங்கள் ஸ்தாபிப்பும் முக்கியமானவையாகும். ( இது பற்றி விரிவாக ஆராயப்படவேண்டியது). இதனால் தமிழ் மக்கள் இன்றுவரை படும் நெருக்குவாரங்களோ அதிகம். தமது ஆதங்கங்களை அடக்கிக்கொண்டு வாழ்ந்து வருவது கவனிக்கத்தக்கதாகும். இவற்றையெல்லாம் வெளிப்படுத்துவதற்கு ஒரு வடிகாலாக வரும் தேர்தல்களை பயன்படுத்தி அதன் மூலம் தமது வெளிப்பாடுகளை சிங்களத்திற்கும் சர்வதேசத்திற்கும் ஓங்கிக்கூறி வருவார்கள். இலங்கைக்கு தலையாகவும், தமிழ்மக்களின் முக்கிய குறியீடுகளின் ஒன்றான யாழ்ப்பாணம் வெற்றிலைச் சின்னத்தின் கீழ் காட்டிக் கொடுக்கப்பட்ட நிலையில், திருக்கோணமலை நகராட்சிமன்ற மற்றும் உறுப்பினர்களை கைப்பற்றுவதற்கு இது இலகுவான நேரம் என சிங்கள அரசு எண்ணியிருக்கலாம். அதற்காக என்னவிலை கொடுத்தாலும் நட்டமில்லை என அரசு திட்டமிட்டு கொண்டது. அதற்காக உறுப்பினர்களின் தனிப்பட்ட பல தேவைகள் விலையாக பேசப்பட்டிருக்கலாம். நிட்சயமாக அரசுக்கு தாவிய உறுப்பினர்கள் கூறுவது போன்று மக்களுக்கான அபிவிருத்தியாக இருக்கமுடியாது. (தனிப்பட்ட உறுப்பினர்களுக்கான அபிவிருத்தியாக இருக்கக்கூடும்) அல்லது ‘மக்களுக்காக’ என இவர்கள் கூறும் எந்தக் காரணங்களும் பொருத்தமுடையதாகாது. அதாவது கச்சையை விற்று மானத்தை காக்கவேண்டிய தேவை மக்களுக்கு இல்லை. எது எப்பிடியாயினும் அரசு ஒரு விடயத்தை புரிந்து கொள்ளல் அவசியமாகிறது. அதாவது தேசியத்தை நோக்கிய மக்களின் தெரிவு நேர்த்தியானது. அது என்றுமே மாறாது. இவற்றிற்கான ‘மக்கள் பதிலடியை’ நடந்து முடிந்த தேர்தல் மூலம் அரசு பெற்றிருக்கின்றதென்பது நிதர்சனமான உண்மை. நடந்து முடிந்த தேர்தல்களில் ஒரு கோணமாக பார்வையை விட்டால், இலங்கையிலே விடுதலைப்புலிகளை பின்னடைய வைத்ததற்கான சிங்கள மக்களின் நன்றியின் வெளிப்பாடே மகிந்த ராஜபக்ச ஜனாதிபதி வெற்றி. சுயநிர்ணயம், தாயகம், தன்னாட்சிக்காக இறுதிவரை போராடிய விடுதலைப் புலிகளின் அங்கீகாரம் பெற்ற தமிழ் தேசிய கூட்டமைப்புக்கு கிடைத்த நன்றியின் வெளிப்பாடே இந்த வெற்றி. இதற்காக எதிர் நீச்சல் போட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பு ஒருபுறம், கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தர் ஒருபுறம். இந்த களத்திலே பல வித்தியாசமான பிரச்சார உத்திகள் கையாளப் பட்டாலும் விடுதலைப் புலிகளின் அங்கீகாரத்திற்கு தமிழ்மக்கள் ஆணை வழங்கியுள்ளார்கள் என்பதே உண்மை. தமிழ் தேசிய கூட்டமைப்புக்கு இனிமேல் தான் யுத்தகாலம் ஆரம்பிக்க போகிறது. பிரிந்தவர்களை கூட்டி எடுப்பதும், சர்வதேசத்திற்கு தமிழ்மக்களின் போராட்டம் ஒரு ‘விடுதலைப் போராட்டமென’ தெளிவு படுத்த வேண்டியதான இரு கடமைகள் உள்ளது. இந்த நிலையை எட்ட தமிழ் தேசிய பாராளுமன்ற உறுப்பினர்களோ அல்லது இரா. சம்பந்தனிடமோ உள்ளதென எண்ணலாகாது. இவர்கள் உட்பட புலம்பெயர்ந்த சமூகம் அடங்கலாக அனைத்து தமிழர்கள் தலையிலும் இந்த சுமை சுமத்தப்பட்டுள்ளது என்ற உண்மையை அறிதல் வேண்டும். இந்த சுமையை நேர்த்தியாக, தடம்மறாது, விலைபோகாது உரிய இடங்களுக்கு(சர்வதேசம்) இழுத்துக்கொண்டு செல்ல வேண்டிய பொறுப்பு தமிழ் தேசிய கூட்டமைப்பினரிடம் உள்ளது.
கனக கடாட்சம்
1944 ம் ஆண்டுகளில் தமிழ்மக்களின் விடிவை நோக்காக கொண்டு அமரர் ஜீ. ஜீ. பொன்னம்பலத்தை தலைவராகவும், அமரர் தந்தை செல்வாவை உபதலைவராகவும் கொண்டு ஆரம்பிக்கப்பட்ட தமிழ் காங்கிரஸ் அரசியல்கட்சி, 1947 ம் ஆண்டுத் தேர்தல்களிலே அமோக வெற்றி பெற்றதும்,
அன்றைய காலத்தில் ஆட்சித் தலைவராக தெரிவுசெய்யப்பட்ட D.S. சேனநாயக்காவிடம் ‘தமிழரின் தாயக‘ கோட்பாட்டை பிரதானமாக கொண்ட 4 அம்ச கோரிக்கையை தந்தை செல்வா முன்வைத்த போது அமரர் ஜீ. ஜீ. பொன்னம்பலம் அதனை ஏற்றுக்கொள்ள மறுத்தமையால் தந்தை செல்வா பிரிந்துசென்று புதிய கட்சியாக தமிழரசுக் கட்சியை ஸ்தாபித்த வரலாற்றை ஒரு மின்னல் ஒளிக்கீற்றாக மீள் நினைவுக்குட்படுத்தல் பொருத்தமாகுமென கருதுகிறேன்.
‘தமிழர் தாயகத்திலே அத்துமீறிய சிங்களவர் குடியேற்றத்தை நிறுத்தவேண்டும்‘ என தந்தை செல்வாவால் 1947 ம் ஆண்டுகளில் வைக்கப்பட்ட கோரிக்கைக்கு நிரந்தரத் தீர்வு கிட்டாமையால், அதன் வெளிப்பாடாய் அறப்போராகவும், மறப்போராகவும் தமிழ்மக்களினால் முன்னெடுக்கப்பட்டு வந்து இப்போ இளைப்பாறி நிற்கிறது.
இந்த இளைப்பாறலின் தொடர்ச்சியாக இலங்கைத் தமிழ்மக்களால் மீண்டும் எந்த வகையிலான போராட்டம் தேர்ந்தெடுக்கப்பட வேண்டுமென்பதை இலங்கை அரசின் நடவடிக்கைகள் தான் எதிர்காலத்தில் தீர்மானிக்கப் போகின்றதென்ற உண்மையின் ஜதார்த்தம் எம்கண்முன்னே விரிவதை யாராலும் தடுக்க முடியாது.
இலங்கைப் பெரும்பான்மை மக்களால் ஜனாதிபதியாக ஏற்றுக்கொள்ளப்பட்ட அதிகெளரவ மகிந்த ராஜபக்ச அவர்களே! உங்களிடம் பகிரங்கமாக சிலவற்றை முன்வைக்க விரும்புகின்றோம். இதனோடும் இலங்கைப் பாராளுமன்றத்திலே சிறப்பு பங்குவகிக்கும் * இலங்கை அரசின் எதிக்கட்சியினரே! * J.V.P, சிகல உறுமய கட்சியினரே! உங்களோடும் இதுபற்றி பகிர்ந்துகொள்ள பிரியப்படுகிறோம்.
தமிழ்மக்கள் அடங்கலாக முழு இலங்கைக்கும் நீங்கள் தான் ‘கெளரவ ஜனாதிபதி‘ என்று சொல்லித் தெரியவேண்டியதல்ல. இலங்கையின் சகல இனங்களும் சுதந்திரமாகவும், ஒற்றுமையாகவும் வாழவேண்டும் என அறைகூவல் விடுக்கும் அதேவேளை தமிழ் தேசிய கூட்டமைப்புடனும் பேசி தமிழர் பிரச்சனைக்கு தீர்வு காணவேண்டும் என முனைப்பெடுக்கும் உங்களுக்கு பாராட்டுக்கள். இதனைநடைமுறைப்படுத்திவெற்றி காண்பீர்களென்றால் அதற்கும் நன்றி.
வெற்றிக்கும் மேலாக,
காலம் காலமாக புரையோடிக் கொண்டிருக்கும் ‘அத்துமீறிய குடியேற்றம்‘ இன்றுவரை தொடர்வதை தங்களின் மேலான கவனத்திற்கு தெரியப்படுத்தல் எமது கடமையாகிறது.
* திரேதகாலம் என அழைக்கப்படும் வரலாற்றுக் காலங்களுக்கப்பால் திருக்கோணமலையானது இராவணேஸ்வரன்என்ற தமிழ்ச் சக்கரவர்த்தியின் இராஜதானியாக அமைந்திருந்தது. அதனை அடுத்து குறித்துரைக்கக் கூடியதாக குளக்கோட்டன் என்னும் தமிழ் மன்னனின் ஆட்சிக்காலம் பொற்காலமாக கருதப்படுகிறது . குளக்கோட்ட மன்னனின் இறங்குதுறையான ஈச்சிலம்பற்று பிரதேசத்தில் அமைந்த இடம் ‘இலங்கைத்துறைமுகத்துவாரம்‘ எனவும், இதுவே இலங்கையின் முதல் துறைமுகமும் ஆகும் என ஆய்வாளர்கள்(பரண விதாரண போன்றவர்கள்) கருதுகிறார்கள்.
திருக்கோணமலை மாவட்டத்திலே ஒரு பௌத்த சிங்கள சகோதரனோ, ஒரு இஸ்லாமிய சகோதரனோ இல்லாத தனித்தமிழர் வாழும் பிரதேச செயலகப்பிரிவு ஈச்சிலம்பற்று(வெருகல்) ஆகும். இங்கே பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்னதாக இந்துக்கள் வாழ்ந்த பிரதேசம். இதற்கான ஆவணங்கள் கண்முன் உள்ள சாட்சியங்களான இந்து ஆலயங்களாகும்.
2009 ம் ஆண்டு வைகாசி மாதம் 19 ம் திகதியோடு(தமிழீழ விடுதலைப் புலிகளின் பின்னடைவோடு) தாயக எல்லைகள் உடைக்கப்பட்டு இந்து ஆலயங்கள் தெருவிற்கு வந்ததோடு அவ்விடங்களில் பௌத்த ஆலயங்கள் தற்போது நிர்மாணிக்கப்பட்டு வருவதை ஆவண சாட்சியாக தங்களுக்கு தரப்படுகிறது.
பௌத்த ஆலயங்கள் அமைப்பதை தமிழ்மக்கள் தடுக்கவில்லை. அவர்கள் அராஜகவாதிகளுமல்ல. போர் காதலர்களுமல்ல. உங்களால் மாற்றப்படாதவரைக்கும்!
தமிழ் பௌத்தர்கள் அடங்கலாக பெளத்தர்களோ அன்றி மதம் மாறிய பெளத்தர்களோ அவ்விடத்தில் வாழ்ந்திருந்தால் பெளத்த ஆலயங்கள் தேவைகருதி அமைப்பதில் தப்பொன்றுமில்லை. ‘குடியேற்றத்தை‘ மையப்படுத்தி பெளத்த ஆலயங்கள் அமைப்பதில்தான் பிரச்சனை தோன்றுகிறது.
வரலாற்றுக் காலங்களுக்கு முற்பட்ட தமிழ்மக்களின் பாரம்பரிய இந்து வழிபாட்டுத் தலமான ஈச்சிலம்பற்று பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட புன்னையடி - மலை நீலியம்மன் வணக்க ஸ்தலத்தின் தற்போதைய நிலை. இந்து ஆலயம் எல்லையை விட்டு வெளியிலும் இந்து ஆலயம் இருந்த இடத்தில் பௌத்த ஆலய நிர்மாணிப்பு பணிகளை படத்தில் காணலாம்.
எல்லையை விட்டு அகற்றப்பட்ட மலை நீலி அம்மன் ஆலயத்தின் தோற்றம்.
இலங்கையின் முதல் துறைமுகமான இலங்கைத்துறைமுகத்துவாரத்தில் தமிழ்மக்களின் பாரம்பரிய குஞ்சுமலை முருகன் ஆலயத்தின் முன்னால் நடைபெறும் அகழ்வு வேலையும் அதனோடு புதிதாக வைக்கப்பட்டுள்ள பௌத்த சித்திரத்தின் தோற்றமும்.
இலங்கைத்துறைமுகத்துவாரத்தில் புதிதாக அமைக்கப்பட்ட பகவான் புத்தரின் சிலை.
குறிஞ்சிமலை என்று தமிழ்மக்களால் புரான காலத்தில் அழைக்கப்பட்டு வந்து பின்னர் பெயர் மருவி குஞ்சுமலை, குஞ்சியப்பா மலை, குஞ்சிவாப்பாமலை என்று தற்பொழுது அழைக்கப்பட்டுவரும் குறிஞ்சிமலை முருகன் ஆலயத்திற்கு முன்னால் இயற்கையாக அமைந்த தாமரைத் தடாகமும் அதற்கு முன்னால் தற்பொழுது புதிதாக அமைக்கப்பட்ட பௌத்த ஜாதகக்கதைச் சித்திரமும், பௌத்த விகாரை கட்டுமானப் பணியும்.
குறிஞ்சிமலை முருகன் ஆலயத்தில் புதிதாக அமைக்கப்பட்ட பௌத்த ஆலயத்தின் மற்றுமொரு தோற்றம்.
குறிஞ்சிமலையில்(குஞ்சிவாப்பாமலை) அமைக்கப்பட்டிருக்கும் பௌத்த நூல்நிலையம்.
தற்பொழுது ஈச்சிலம்பற்று பிரதேச செயலாளர் பிரிவிற்குள் புதிதாக அமைக்கப்பட்டுவரும் புதிய சிங்களக் குடியேற்றம்.
மேலும்,
எமது ‘தாயகம்‘ காப்பாற்றப்பட வேண்டும் என்ற ஆழ் மன உணர்வு உண்மைத் தமிழர்களுக்கு உந்தும் என்பதில் ஐயமில்லை.
* தமிழ் தேசிய கூட்டமைப்பினரோடு பேசவேண்டும் என நல்ல சகுனம் காட்டிய கௌரவ அமைச்சர் டக்கிளஸ் தேவானந்தா அவர்களே!
* கிழக்கு மாகாணத்தின் ஒரே தமிழ் கௌரவ அமைச்சர் முரளீதரன்(கருணா) அவர்களே!
* கிழக்கு மாகாணத்தின் முதல் தெரிவு செய்யப்பட்ட கௌரவ முதலமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன்(பிள்ளையான்) அவர்களே!
* தமிழ் தேசிய கூட்டமைப்பினரே!
* தேச நலன் நோக்கும் அனைத்து தமிழ் புத்தி ஜீவிகளே!
சிங்கள மக்களிடமும், அரசியல் வாதிகளுடனும் இதன் உண்மைத் தன்மை பற்றி தெளிவுபடுத்தி, தமிழர் தாயகத்திலே ‘தாயக உரிமையோடு‘ தமிழ்மக்கள் சுதந்திரமான, சமநிலை வாழ்வை ஏற்படுத்த வேண்டிய கடமை உங்களிற்கு உண்டென்று உணர்ந்து இதற்கான தீர்வுப் பொறிமுறையை நீங்கள் கூட்டாக சேர்ந்து வன்முறையற்ற ஜனநாயக வழியில் கட்டமைத்து மீட்டெடுக்க வேண்டுமென அனைத்து தமிழ்மக்களும் எதிர்பார்க்கிறார்கள்.
மீண்டும் நல்ல முடிவோடு சந்திக்கும்வரை…….
கனக கடாட்சம்
trincokadatcham@yahoo.com
இலங்கையிலே தமிழ்மக்களின் கலை, கலாசாரம், மொழி, தாயகம், அரசியல் உரிமை போன்ற பலவற்றை சிங்களம் தனது மேலாதிக்கத்தால் கபளீகரம் செய்து தற்பொழுது ‘கழுதை தேய்ந்து கட்டெறும்பு ஆனது‘ போல் தமிழர் நிலை ஆகிவருவதை காலம் காலமாக அவதானித்து வருகிறோம்.
இதிலே, மேலும் தமிழ்மக்களுக்கு உரித்தான பண்டிகைகளும் தேய்ந்து உருமாறி வருவதை எம்மில் எத்தனை பேர் அவதானித்திருப்போம் என்பது தான் கவனத்தில் கொள்ள வேண்டியதாகும்.
திராவிடரால் அனுஷ்டிக்கப்பட்டு வந்த சித்திரைப் புத்தாண்டானது எதுவித ஆதார தொடர்புமின்றி சிங்கள தமிழ் புத்தாண்டென, சிங்கள பௌத்தர்களுக்கும் உடமையானதென்பது என்பதை கண்டுபிடிப்பதானது ஒரு கடமையாக கொள்ளல் அவசியம்.
ஆதாரத்திற்காக ஒரு விடயத்தை மாத்திரம் சிந்திப்பது இலகுவாக இருக்கலாம்.
சித்திரைப் புத்தாண்டு பௌத்தர்களுக்கும் உரித்துடையதெனக் கொண்டால் ஏன் இலங்கையில் வாழும் சிங்கள பௌத்தர்கள் மட்டும் கொண்டாட வேண்டும்? உலகிலே பௌத்தர்கள் பரந்துபட்டு வாழும் நாடுகளான சீனா, யப்பான், பர்மா, பூட்டான் போன்ற எத்தனை நாடுகளில் பௌத்தர்கள் சித்திரைப் புத்தாண்டைக் கொண்டாடுகிறார்கள் என்ற கேள்வியைக் கேட்டால் பதில் பூச்சியம்தான். ஆனால் இலங்கையில் வாழும் சிங்கள பௌத்தர்கள் மட்டும் சித்திரைப் புத்தாண்டை சிங்கள தமிழ் புத்தாண்டென கொண்டாடுவதன் நியாயம் என்ன?
சித்திரைப் புத்தாண்டை சிங்களப் புத்தாண்டாக மாற்றியவர்களின் பக்கம் நின்று, அது சிங்களவர்களுக்குரியதுதான் என நியாயம் கற்பித்து திராவிடருக்கே உரித்தான பண்டிகையான சித்திரைப் புத்தாண்டை சிங்களவருக்குரித்தான பண்டிகையென தாரை வார்த்துக் கொடுக்க முயலும் மேதாவிகள் இதனை புரிந்துகொள்ளல் வேண்டும்.
தைப்பொங்கலை தமிழ் புத்தாண்டாக கொண்டாட வேண்டுமென தமிழக முதலமைச்சர் மு. கருணாநிதி கூறிவிட்டார் என்பதற்காக ஈழத்தில் எமது உரிமையை விட்டுக்கொடுப்பது பொருத்தமானதாக அமைய மாட்டாது. இதற்கும் மேலாக பெரும்பாலான தமிழ் நாட்காட்டிகளில் சித்திரைப் புத்தாண்டென குறிப்பிடாமல் சிங்கள தமிழ் புதுவருடம் என குறிப்பிட்டிருப்பது மேலும் எமது உரிமை இழப்பிற்கு சான்றாக அமைகிறது. பௌத்தர்களுக்கு உரித்தான பண்டிகையாக இது இருந்திருந்தால் இந்தியாவிலிருந்து, குறிப்பாக தமிழ்நாட்டிலிருந்து வெளியாகும் நாட்காட்டிகளில் பௌத்த அல்லது ஆரிய புதுவருடம் என குறிக்கப்பட்டு கொண்டாடியிருக்கப்பட வேண்டும். ஆனால் அப்படி கொண்டாடியிருப்பதற்கான சான்றுகள் ஏதுமில்லை. ஏன் பௌத்த நாடுகளின் நாட்காட்டிகளில் இப்பண்டிகை பற்றி ஒருவரிச் செய்திகூட இல்லை என்பதை கவனிக்க வேண்டும்.
இந்தியா, இலங்கையில் பாரம்பரியமாக கொண்டாடப்படும் இந்து பண்டிகைகள் யாவும் சூரியனை மையமாகக் கொண்டே கணிப்பீடு செய்யப்படுகிறது. தைப்பொங்கலானது சூரியனுக்கான நன்றிப் பண்டிகை. தீபாவளிப் பண்டிகை அமாவாசையை ஒட்டி வருகிறது. அதேபோலத்தான் சித்திரைப் புத்தாண்டின் தோற்றமானது வருடத்தின் சித்திரை மாதத்தில் சூரியன் மீனராசியிலிருந்து மேடராசிக்கு பிரவேசிக்கும் நேரமே புத்தாண்டின் உதய நேரமாக கணிப்பீடு செய்யப்படுகிறது.
குறிப்பாக மகாராஷ்டிரா, குஜராத், ஆந்திரா, கேரளா, தமிழ்நாடு (சித்திரை மாதம்) போன்ற மாநிலங்களில் புதுவருடம் வெவ்வேறுபட்ட மாதங்களில் அனுஷ்டிக்கப்படுகிறது. ஆகவே அங்குள்ள பௌத்தர்கள் அல்லது ஆரியர்கள் சித்திரை மாத புத்தாண்டை தமதாக்கிக் கொள்ளவில்லை. அதுபோல, சிங்கள பௌத்தர்கள் எந்தவித சாஸ்திர முறையுமின்றி, அல்லது சூரியனை மையப்படுத்தி சித்திரைப் புத்தாண்டை கைக்கொள்ளவில்லை. பன்நெடுங்காலத்திற்கு முன் திட்டமிட்டு திராவிடருக்கே உரித்தான பண்டிகையை தமதாக்கி தமிழர்களின் மேலோங்குகையை தடுப்பதே சிங்கள பௌத்தர்களின் நோக்கமாக அமைந்திருக்க வாய்ப்புகள் அதிகம் எனலாம்.
‘முன்னே வந்த கொம்பை பின்னே வந்த செவி மறைப்பது‘ போல திராவிடரின் சித்திரைப் புத்தாண்டை சிங்கள தமிழ் புதுவருடமாக்க இடமளிக்கலாகாது. சித்திரைப் புத்தாண்டை பேதமின்றி இணைந்து கொண்டாடி மகிழலாம். ஆனால் பேரினவாத மேலாதிக்கத்தை கொண்டு எமக்குரிய உரிமைத்துவத்தை பறிக்க முனைதலை எவ்வழியிலும் அனுமதிக்கலாகாது.
சித்திரைப் புத்தாண்டு ஆரியர்களுக்குரியது என்று கற்பிதம் செய்வதும், ஆரியர்களின் வழித்தோன்றல் சிங்களவர்கள் (இதனை பிறிதொரு அத்தியாயத்தில் விரிவாக காண்போம்) என்ற ஆதாரமற்ற செய்தியை கூறுவதும் எமது இனத்தை நாமே குழிதோண்டிப் புதைப்பதாக அமையலாம்.
கனக கடாட்சம்
உங்களின் பிள்ளைகள், உறவுகள் புதைக்கப்பட்ட மண்ணில் அவர்கள் நினைவாக ஒன்று கூடி அழுவதற்காக, அவர்களின் ஆன்மாக்களோடு உறவாடுவதற்கான உரிமையைப் பெற்றுக் கொடுப்போருக்காக வாக்களியுங்கள்.
வாக்குகளுக்காக உங்களைத் தேடி வருவோரிடம் இதையெல்லாம் நிறைவேற்றித் தருவீர்களா என்று கேள்வியை எழுப்புங்கள். அத்தகைய உறுதிமொழி தருவோருக்கு வாக்களியுங்கள். இந்தக் கேள்வியை எழுப்பத் தகுந்த தருணம் இதுவே. இதைத் தவற விட்டால் எம் உறவுகளுக்காக மௌனமாக அழுவதைவிட வேறேதையும் செய்யமுடியாது போகும்.
தமிழ் மக்களுக்கு எதிரான போரில் வெற்றி பெற்ற சிங்கள அரசாங்கம் இப்போது தமிழரின் வரலாறுப் பெருமைமிக்க சின்னங்களையும் பாரம்பரியங்களையும் அழிக்கின்ற முயற்சிகளில் இறங்கியுள்ளது. நல்லூரில் அமைந்திருந்த தியாகி திலீபனின் நினைவுத்தூபி அழிக்கப்பட்டது, கற்சிலைமடுவில் இருந்த பண்டாரவன்னியன் நினைவுச்சின்னம் பெயர்க்கப்படடது, மாவீரர்கள் நினைவாக அமைக்கப்பட்ட நினைவுச் சின்னங்கள் மற்றும் துயிலும் இல்லங்கள் சிதைக்கப்பட்டமை என்று தமிழருக்கு எதிரான பண்பாட்டு வரலாறு அழிப்பு நடவடிக்கைகள் தொடர்ந்து கொண்டிருக்கின்றன.
நல்லூரில் தியாகி திலீபனின் நினைவுத்தூபி அழிக்கப்பட்டது மட்டுமன்றி ஒரே இரவில் அதைப் பெயர்த்துக் கொண்டு போய் குப்பை மேடொன்றில் வீசியிருக்கின்றனர். இது சாதாரணமானதொரு நடவடிக்கையல்ல. சிங்களப் பேரினவாதத்தின் ஊழிக்கூத்து தமிழரின் பண்பாட்டுத் தலைநகரான நல்லூர் வரைக்கும் வந்துவிட்டதன் வெளிப்பாடு. யாழ்ப்பாண மாநகரசபையின் ஆட்சியை சிங்களப் பேரினவாதத்தின் தந்தையான சிறிலங்கா சுதந்திரக் கட்சிக்கும் அதனுடன் கூட்டணி சேர்ந்த ஈபிடிபிக்கும் தாரை வார்த்துக் கொடுத்த யாழ்.நகர மக்களுக்கு அவர்கள் செய்த கைம்மாறு தான் இது. யாழ்ப்பாண மாநகரசபைக்குத் தெரியாமல் இப்படியொரு காரியம் நடந்திருக்க வாய்ப்பில்லை. அவர்களின் துணையுடன் கூட இது நடந்திருக்கலாம்.
கற்சிலைமடுவில் பண்டாரவன்னியன் நினைவுக்கல் பெயர்த்தெடுக்கப்பட்ட சம்பவமும் இதேபோன்றது தான். பண்டாரவன்னியன் என்ற தமிழ் மன்னனின் வரலாற்றையே அழிக்க முனையும் சதி அது. வடக்கு, கிழக்கு தமிழரின் தாயகம் அல்ல, அங்கு தமிழ் அரசுகள் இருந்ததும் இல்லை என்று நிறுவ இதுபோன்ற அழிப்பு நடவடிக்கைகள் சிங்களப் பேரினவாதிகளுக்குத் தேவைப்படுகின்றன. வன்னியில் உள்ள புலிகளின் நினைவுச்சின்னங்களை அழித்து புலிகளின் வரலாற்றையே இல்லாமல் செய்வதற்கு முனைவது போன்ற நிலை தான் பண்டாரவன்னியனுக்கும் வந்திருக்கிறது. வன்னியில் சிங்களப் படையினருக்கு நினைவுத்தூபிகளை அமைத்து வரும் சிங்கள அரசு அங்கிருக்கும் புலிகளின் நினைவுத்தூபிகளை பெயர்த்தெடுத்து இருந்த இடமேதெரியாமல் அழித்து வருகிறது. மாவீரர் துயிலுமில்லங்களை சிதைத்து அந்த மண்ணைக் கொண்டு வீதிகளை அமைக்கிறது. போர்த்துக்கேய, ஒல்லாந்த, ஆங்கிலேயப் படைகள் தமிழர் தாயகத்தில் இருந்த கோவில்களை அழித்தது போன்று இவையும் ஒரு பண்பாட்டு அழிப்பு நடவடிக்கையே.
கோவில்களை அழித்து அவற்றின் கற்களை கொண்டு தேவாலயங்களை அமைத்த அந்நியப் படைகளைப் போன்றே சிங்களப்படைகளும் இன்று செய்து கொண்டிருக்கின்றன. தமிழ்வீரர்களின் நினைவிடங்களில் இருந்து பெயர்க்கப்பட்ட மண்ணைக் கொண்டு சிங்களப் படையினருக்கு நினைவுத்தூபிகள் அமைக்கப்படுகின்றன பௌத்த தேவாலயங்கள் அமைக்கப்படுகின்றன. இவற்றைவிட சுற்றுலா விடுதிகளும் அமைக்கப்படவுள்ளன. திலீபனின் நினைவுத்தூபி அழிப்பு நடவடிக்கை சிங்களப் பேரினவாதம் இன்னமும் உச்சக்கட்ட விழிப்பு நிலையிலேயே இருப்பதை உணர்த்துகிறது. இது தமிழ் மக்களுக்குத் தேர்தல் நேரத்தில் சொல்லப்பட்ட மிகப் பெறுமதி வாய்ந்த செய்தி.
தென்னிலங்கையில் ஜேவிபி ஒன்றுக்கு இரண்டு முறை ஆயுதக்கிளர்ச்சி செய்து அரசுக்கு எதிராகப் போராடிய அமைப்பு. அதற்காக அவர்களில் ஆயிரக்கணக்கானோர் கொன்று குவிக்கப்பட்டனர். ஆனால் இப்போதும் அவர்களால் கொல்லப்பட்ட தமது தலைவர்கள் நினைவாக நிகழ்வுகளை நடத்த முடிகிறது. அவர்களுக்கான நினைவுச் சின்னங்களை அமைக்க முடிகிறது. ஆனால் தமிழ் மக்களால் அப்படிச் செய்ய முடியாது என்று கூறுகிறது சிங்களப் பேரினவாதம். தமிழ் மக்களின் உரிமைக்காகப் போராடியவர்களை நினைவு கொள்ள முடியாத நிலை உள்ளது. மரணித்த வீரர்களுக்காக ஒரு நினைவுத்தூபியைக் கூட வைத்திருக்க முடியாத நிலை காணப்படுகிறது. தமிழ் மக்களின் பாரம்பரிய தாயகத்திலேயே இந்த நிலை. சிங்களப் பேரினவாதம் தமிழர் மீது எந்தளவுக்குக் கோலோச்ச முனைகிறது என்பது இதிலிருந்தே வெளிப்படையாகிறது. இறந்தோரை வணங்கும் மரபு தமிழருடையது.
• ஆனால் அந்த மரபைக் கூடக் கடைப்பிடிக்க முடியாத வகையில் சிங்களப் பேரினவாதம் காடைத்தனங்களைக் கட்டவிழ்த்து விடுகிறது. சிங்கள அரசுடன் இணங்கிப் போகலாம் என்று தமிழ்மக்களுக்கு ஆலோசனை கூறிவோர் இந்த உரிமையைக் கூட விட்டுக் கொடுக்காதவர்களிடத்தில் இருந்து எதைத் தான் பெற்றுக் கொடுக்கப் போகிறார்கள்?
• தமிழ் மக்கள் தமது நிலத்தில் ஒரு நினைவுச்சின்னத்தை வைப்பதற்குக்குக் கூட உரிமை இல்லாத போது அடிப்படைச் சுதந்திரத்தை எப்படிப் பெற்றுக் கொடுக்கப் போகிறார்கள்?
• இறந்தவர்களுக்கு மரியாதை செலுத்துவதே மனிதனின் இயல்பு மரபு. அது எதிரியாயினும் நண்பனாயினும் மாறுபாடு இருக்கக் கூடாது என்பதே நாகரீக மனித சமுதாயத்தின் பண்பு. ஆனால் இறந்து போன ஒருவரின் நினைவுத்தூபியைக் கூட விட்டுக் வைக்கக் கூடாது என்று கங்கணம் கட்டியுள்ள சிங்களப் பேரினவாதம் உயிரோடு இருக்கும் தமிழர்களுக்கா உரிமைகளை வழங்கப் போகிறது?
திலீபன் நினைவுத்தூபி அழிக்கப்பட்டடது போன்றே நாளை தமிழரின் வரலாற்றுச் சின்னமான சங்கிலிய மன்னனின் வளைவு சிலை கூட அழிக்கப்படலாம். ஏன் தமிழர் தாயகத்தில் உள்ள ஏனைய வரலாற்றுச் சின்னங்களைச் சிதைத்து அங்கு பௌத்த வழிபாட்டு சின்னங்களை அமைக்கலாம்.
• இவையெல்லாம் காலமாற்றத்தில் நிகழ முடியாதவை என்று யாராலும் உறுதி கூற முடியாது. பிரபாகரன் இருக்கும் வரைக்கும் தமிழரின் பாதுகாப்புக்கு ஒரு கவசம் இருந்தது. தமிழரின் மீது கை வைத்தால் பிரபாகரன் படை பதில் சொல்லும் என்ற அச்சம் சிங்களப் பேரினவாதத்திடம் இருந்தது. ஆனால் அந்தக் கவசத்தை இழந்து நிற்கும் தமிழரிடம் சிங்களப் பேரினவாதம் வாலாட்டிக் கொண்டிருக்கிறது.
ஆங்கிலேய, ஒல்லாந்த, போர்த்துக்கேயப் படைகள் அன்று செய்த அனைத்தையும் இன்று சிங்களப்படைகள் செய்கின்றன. அன்று கோவில்கள் அழிக்கப்பட்டு தேவாலயங்கள் கட்டப்பட்டன. இன்று தமிழரின் வரலாற்றையும் வீரத்தையும் வெளிபடுத்தும் சின்னங்களை அழித்து பௌத்த விகாரைகள் அமைக்கப்படுகின்றன. இப்படிச் சொல்வது ஒன்றும் இனவாதமோ மதவாதமோ அல்ல.
தேர்தல் நேரத்தில் யாழ்ப்பாண மக்கள் மட்டுமன்றி தமிழ் மக்கள் அனைவருக்குமே விடப்பட்ட சவால் இது.
• மீளவும் திலீபன் நினைவுத்தூபி நல்லூரில் அமைய வேண்டும்.
• அதை மீளவும் அமைப்பதாக வாக்குறுதி கொடுப்போருக்கு வாக்களியுங்கள்.
• மீளவும் பண்டாரவன்னியன் நினைவுக்கல் அதேயிடத்தில் அமைய வேண்டும் அதைச் செய்வதாக உறுதியளிப்போரைத் தெரிவு செய்யுங்கள்.
• உங்களின் பிள்ளைகள், உறவுகள் புதைக்கப்பட்ட மண்ணில் அவர்கள் நினைவாக ஒன்று கூடி அழுவதற்காக, அவர்களின் ஆன்மாக்களோடு உறவாடுவதற்கான உரிமையைப் பெற்றுக் கொடுப்போருக்காக வாக்களியுங்கள்.
வாக்குகளுக்காக உங்களைத் தேடி வருவோரிடம் இதையெல்லாம் நிறைவேற்றித் தருவீர்களா என்று கேள்வியை எழுப்புங்கள்.
அத்தகைய உறுதிமொழி தருவோருக்கு வாக்களியுங்கள். இந்தக் கேள்வியை எழுப்பத் தகுந்த தருணம் இதுவே. இதைத் தவற விட்டால் எம் உறவுகளுக்காக மௌனமாக அழுவதைவிட வேறேதையும் செய்யமுடியாது போகும்.
அன்புத் தோழனே அடிமை விலங்கொடிக்க
அகிம்சைப்போர்புரிந்த திலீபனே
விண்ணிருந்து பார்ப்பேன் விடுதலையை என்று சொல்லி
கண்ணெதிரே சென்றவனே
விண்ணிருந்து பார் விடுதலையின் சீரழிவை
கண்ணெதிரே நடக்கும் கொடுமைகளை
கண்டு மனம் துடிக்கிறது
கேட்க ஒருவரற்ற இனமாய் நாதியற்று நாங்கள்
நடுத்தெருவில் நிற்கின்றோம்
நமக்குள் நடக்கும் குத்துவெட்டுச்
சண்டையெல்லாம் காசுக்கும்
கதிரைக்குமாய் நடக்கிறது
கரிகாலன் கனவெல்லாம்
கண்ணெதிரே சிதறடிக்கப்படுகிறது
நடுத்தெருவில் நமது இனம்
கூறுபோட்ட சிங்களவன் கொடுவாள் எடுத்து
கொடும் செயல் முடித்த கையோடு
நிலத்தோடு நீண்ட நெடுமரமாய்
ஆண்ட பரம்பரையின் ஆலமரம்
அடியோடு சாய்ந்து முள்ளிவாய்காலில்
முறிந்துபோனது
வியாபக விருட்சமே வீழ்ந்துபோனது என்று
ஆனபின்னால்
அனைவரது கைகளிலும்
அக்கிரமக் கோல்
இனத்தை அழித்தவன்
உன் நினைவையும்
அழித்தான்.
கண்ணெதிரே நடப்பவற்றை
எம்மால் கண்டுகொள்ள முடியவில்லை
கதிகலங்கி நிற்கின்றோம்
அன்புத்தோழனே
கல்லறைகள்
கருத்தரிக்கும் என்றே
நம்புபவன்.
ஆண்டுகள் ஆயிரமானாலும்
அழியாது தாயகக் கனவு.
அது மூழும்
என்பிள்ளை பிள்ளையதன் பிள்ளை
பேரன் பூட்டன் காலத்தில்
கரிகாலன் கனவு நனவாகும்.
அப்போ
உன்னோடு நானும்
உடனிருந்து பார்ப்பேன்,
விடுதலையை…..
-தொல்காப்பியன்-
யாழ்ப்பாணத்திலும், வன்னியிலும், விடுதலைப்புலிகள் இயங்கு நிலையில் இருந்த வரைக்கும் எந்தவொரு இனத்துவேச நடவடிக்கைகளும் மேற்கொள்ளாத இலங்கை இனவெறி அரசு தற்பொழுது மிக வெளிப்படையாகவே தனது இனத்துவேச நடவடிக்கைகளை செய்ய ஆரம்பித்துள்ளது.
யாழ்ப்பாணம் நீண்ட காலமாகவே இராணுவத்தின் கட்டுப்பாட்டுக்குள் இருந்திருந்தாலும் விடுதலைப்புலிகளின் மாவீரர் துயிலும் இல்லங்களோ, திலீபனின் தூபியோ இடிக்கப்படவில்லை. மாங்குளத்தில் சிங்களக் குடியேற்றங்களும் மேற்கொள்ளப் படவில்லை.
இரண்டு நாட்களுக்கு முன்னர் தற்செயலாக இலங்கைக்கு விடுமுறையில் சென்று வந்தவர் ஒருவர் தனது ஒளிப்பட கருவியில் பிடித்துக் கொண்டு வந்த சில ஒளிப்படங்களை நான் பார்க்க நேர்ந்தது. அவர் எடுத்து வந்திருந்த ஒளிப்படங்களில் நைனாதீவு நாகபூஷணியம்மன் ஆலயத்தில் பிடிக்கப்பட்ட ஒளிப்படத்தில் காணப்பட்ட அறிவிப்புப் பலகைகள் என்னை ஒருகணம் அதிர வைத்தது. அந்த அறிவிப்புப் பலகைகள் எல்லாமே சிங்களத்தில் மட்டுமே எழுதப்பட்டிருந்ததைக் கண்டேன்.
அதாவது சிங்கள இனவெறி அரசு தற்பொழுது மிகவும் வெளிப்படையாகவே இலங்கை சிங்கரவர்களுக்குரிய நாடு என்று சொல்லாமல் சொல்வதாகப் படுகிறது. 1956 இல் தனிச் சிங்களச் சட்டம் கொண்டுவந்தார்கள் ஆனால் இன்று அதை வெளிப்படையாகவே நடைமுறைப் படுத்துகிறார்கள். கொழும்பில், கண்டியில் ஏன் கதிர்காமத்தில் கூட ஆலயங்களில் தமிழிலும் ஆங்கிலத்திலும் சிங்களத்திலும் அறிவித்தல் பலகைகள் எழுதப் பட்டிருக்குமிடத்தில், யாழ்ப்பாணத்தில் அதுவும் தமிழ் மண்ணில் இருக்கும் ஒரு இந்துக்கோவிலில் சிங்களத்தில் மட்டுமே அந்த அறிவித்தல் பலகையில் எழுதப்பட்டிருக்கின்றது. அதாவது இலங்கையின் வெவேறு பகுதிகளில் வாழும் தமிழ்மக்கள், வெளிநாடுகளில் இருந்து விடுமுறையில் செல்லும் தமிழ்மக்கள், மற்றும் தமிழரோ, சிங்களவரோ அல்லாத வெளிநாட்டுப் பிரஜைகள் அந்த ஆலையத்திற்கு வழிபடவோ பார்வையிடவோ சென்றால், அந்த பலகையில் என்ன எழுதப்பட்டிருக்கின்றது என்று தெரிந்து கொள்வதற்கு ஒரு சிங்களவரையோ அல்லது சிங்களம் தெரிந்த ஒருவரையோ தான் உதவிக்கு நாடவேண்டும்.
எனவே இந்த இனவெறி அரசு என்னத்தை சொல்லவருகின்றது என்பதை தமிழ்மக்கள் தெளிவாக புரிந்து கொள்ள வேண்டும். இதில் மிகவும் மனவருத்தம் என்னவென்றால், தமிழ் தேசியவாத அரசியல் கட்சிகளோ, சிங்கள இனவாத அரசுக்கு துணைபோகின்ற தமிழ் கட்சிகளோ, அந்த பிரதேசத்தில் வாழுகின்ற தமிழ்மக்களோ கண்டுகொள்ளாததும், கண்டிக்காததும் தான்.
மலையூர் பண்ணாகத்தான்
இலங்கை அரசியலில் வரலாற்றிலே இப்போதுதான் புதிதாக ஜனாதிபதி மகிந்த ராஜபக்க்ஷ தமிழருக்கான உரிமைகளை வழங்க மறுக்கின்றார் என்பதில்லை. காலம் காலமாக சிங்களத் தலைமைகள் தமிழருக்கு உரிமை வழங்குவதில் கட்சி பேதங்களை புறம்தள்ளி வைத்துவிட்டு உரிமைகள் வழங்கக்கூடாது என்ற நிலைப்பாட்டில் அதிக ஒற்றுமையுடன் செயற்பட்டு வருகிறார்கள் என்பது வரலாறு.
அந்த வரலாற்றின் தொடர்ச்சியை தற்போதய ஜனாதிபதியும் செவ்வனே மாற்றமின்றி கொண்டு சென்று, மற்றுமொரு சிங்களத் தலைமையிடம் ஒப்படைக்க வேண்டியது அவரின் தலையாய கடமையாகும். இதைத்தான் சிங்களப் பேரினவாதிகளும் எதிபார்க்கிறார்கள். இதிலே சிறு பிசகு ஏற்படுமாயின் தேசத்தின் தலைமையை சிங்களமக்கள் மிக விரைவாக அகற்றிவிடுவார்கள்.
ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க தமிழ்மக்களின் உரிமை வழங்கும் வள்ளலாக கணிக்கவில்லை. மகிந்தவோடு ஒப்பிடுகையில் சிறப்பாகத் தெரிவதை மறுக்கமுடியாது. தமிழீழ விடுதலைப் புலிகளின் எதிர்ப்பு வாதத்தில் சம கொள்கையோடு இருப்பினும் ஈழத்தமிழர் பற்றிய கரிசனையில் ஒப்பீட்டு அடிப்படையில் ரணில் தலைமையிலான ஐக்கிய தேசியக் கட்சி உயர்வானதே, இதுவே பிரதான காரணம், தென்னிலங்கைச் சிங்களமக்கள் ரணில் விக்கிரமசிங்கவின் தலைமையையும், கட்சியையும் தூக்கி வீசுவதற்கு ஆகும்.
கடந்த ஜனாதிபதித் தேர்தலில் சிங்களமக்களின் 'வீரனாக' கருதப்பட்ட சரத் பொன்சேகாவை தென்பகுதி சிங்களமக்கள் நிராகரிப்பதற்கும், ரணிலின் கூட்டே காரணமாகும். அதாவது, இவர்கள் ஆட்சிபீடம் ஏறினால் சிறிதளவு நன்மையாகிலும் தமிழருக்கு செய்துவிடுவார்கள் என்ற குரோத எண்ணமே ஆகும்.
தமிழ்மக்களுடனான விரோதப் போக்கை கடைப்பிடிக்கும் வரை 'நானே ராசா' என்ற பொறிமுறையை மகிந்த ராஜபக்க்ஷ நன்கு புரிந்து கொண்டுள்ளார். அதுவே அவரை தொடர்ந்து ஆட்சிபீடம் ஏற்றும் என்பதில் வெகுவாக நம்பிக்கை கொண்டுள்ளார்.
அண்மையில் சிங்கப்பூர் 'ஸ்ரைட்ஸ் டைம்ஸ்' பத்திரிகைக்கு இலங்கை ஜனாதிபதி மகிந்த வழங்கிய செவ்வியிலிருந்து அவரின் மனநிலை வெளிப்படையாக வெளிச்சத்திற்கு வந்திருக்கிறது. செவ்வியில் குறிப்பாக,
இலங்கையில் சமஷ்டி பற்றி கேட்ட கேள்விக்கு ஜனாதிபதியின் பதிலானது, 'இலங்கையின் அரசியலிலிருந்து விலக அல்லது ஓய்வு பெறுவதென்றால் சமஷ்டியைப் பற்றி பேசலாம்' என்றார்.
மேலும் மாகாணசபைக்கு போலிஸ் அதிகாரம் வழங்குவதுபற்றி வினாவியபோது, 'மாகாண முதலமைச்சர் பாதுகாப்பு சட்ட சபைக்கூட்டத்தை கூட்டுகிறார், ஆனால் அதிகாரம் வழங்கினால் தாங்கள் நினைத்ததெல்லாம் செய்து விடுவார்கள் எனது மக்கள் போலிஸ் அதிகாரங்கள் வழங்க வேண்டாமென்றே கூறுவார்கள்' என்றார்.
இதிலே 'எனது மக்கள்' என கூறியதிலிருந்து பெரிய உண்மை வெளியாகியிருக்கின்றது. இலங்கையில் இரு வேறு மக்கள்கூட்டம் உள்ளதென்பதே. ஒன்று 'எனது மக்கள்' என்ற சிங்களமக்கள்! மற்றையது தமிழ்மக்கள். இரண்டும் பிரிந்து வாழும் இனங்கள் என்பதை அவராகவே ஒப்புக்கொண்டுள்ளார். அதாவது, ஒரு தேசத்தில் இரு வேறுபட்ட நாட்டின் மக்கள்கூட்டம் வாழ்கிறார்கள் என்பதே அதன் கருத்து எனலாம்.
ஆகவே, 'தமது மக்களை' திருப்திப்படுத்தி ஆட்சியேறும் நிலை இருக்கும் வரை தமிழரின் உரிமை கானல்நீர் ஆகும். ஆதலால், தமிழ்மக்கள் தம்மை தாமே சீர்ப்படுத்தி வாழ்வதற்கான கட்டமைப்பை ஏற்படுத்துவதே இதற்கான தீர்வாகும். முதல் வேலைத்திட்டமாக ஈழத்தமிழர் ஒற்றுமையுடன் ஒரு குடையின் கீழ் வருவதே மிகுந்த சாத்தியப்பாட்டை தோற்றுவிக்கும்.
தசக்கிரீவன்
கருத்துகளுக்கு info@thanall.com
ஏப்ரல் 8 இல் நடைபெறவுள்ள சிறிலங்கா நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடும் தமிழ் வேட்பாளர்கள் தமது பரப்புரையின் இறுதிக் கட்டத்தை நெருங்கியுள்ள நிலையில், வாக்காளப் பெருமக்களோ தேர்தல் தொடர்பில் அக்கறையின்றி இருந்து வருவதாகச் செய்திகள் வெளியாகியுள்ளன. ஈழத் தமிழ் மக்களில் அரசியல் விழ்ப்புணர்வு அதிகம் மிக்கவர்கள் எனக் கருதப்படும் யாழ் குடாநாட்டு மக்களிடையே இத்தகையை அக்கறையின்மை அதிகமாக நிலவுகின்றமை இரட்டிப்புக் கவலையைத் தருகின்றது.
ஈழத் தமிழ் மக்களின் அரசியல் வரலாற்றை ஆய்வுக்கு உட்படுத்தும் போது, யாழ் குடாநாடே அதில் முன்னணிப் பாத்திரம் வகிப்பதை மறைப்பதற்கில்லை. ஏனைய பிரதேசங்களில் ஆகர்சமிக்க தலைவர்கள் காலத்துக்குக் காலம் உருவாகிப் பங்களிப்பு நல்கியிருந்த போதிலும், காத்திரமான பல செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டு வந்த போதிலும், தமிழர் அரசியலின் மையம் யாழ் குடாநாட்டிலேயே இருந்து வந்தது. தொடர்ந்தும் இருந்து வருகின்றது.
அத்தகைய யாழ் குடாநாட்டுத் தேர்தல் களம் இன்று கவனத்திற்கு உரிய ஒன்றாக மாறியுள்ள நிலையிலும், அங்கு வசிக்கும் வாக்காளப் பெருமக்கள் தேர்தலில் அக்கறையின்றி இருப்பதற்குப் பிரதான காரணம் எதுவாக இருக்க முடியும்?
நாடாளுமன்ற முறைமைகளுக்கு ஊடாக தமிழ் மக்களின் அரசியல் அபிலாசைகளைப் பூர்த்தி செய்து கொள்வது முடியாதது என்ற புரிதலின் வெளிப்பாடாகவே ஆயுதப் போராட்டம் முகிழ்த்தது. இந்த ஆயுதப் போராட்டமானது தமிழ் மக்களின் உரிமைபெற்ற தேசம் எவ்வகையினதாக அமையும் என்ற மாதிரியைத் தமிழ் மக்களுக்குக் காண்பித்தது.
அது மட்டுமன்றி நாடாளுமன்ற அரசியலுக்கு ஊடாக இது சாத்தியமற்றது என்ற நிதர்சனத்தையும் உறுதிப் படுத்தியது. 1977 இன் பின்னான எந்தவொரு தேர்தலிலும் தமிழ் மக்கள் உணர்வுடன் பங்கெடுத்துக் கொள்ளவில்லை. மாறாக, தேர்தல்களை அவர்கள் தேசிய விடுதலைப் போராட்டத்துடன் தொடர்புபட்ட ஒரு தந்திரோபாயமாகவே கருதியிருந்தனர்.
கடந்த மே மாதத்தில் முள்ளிவாய்க்காலில் விடுதலைப் புலிகளின் தலைமை துடைத்தழிக்கப்பட்ட பின்னர் தமிழர் அரசியலில் ஒரு வெறுமை பரவியுள்ளதை மறைப்பதற்கில்லை. அதன் வெளிப்பாடே மக்களின் இன்றைய தேர்தல் தொடர்பிலான அக்கறையின்மை.
தமிழ் மக்களுக்கு முன்னரும் தேர்தல்களில் உண்மையான அக்கறை இருந்திருக்கவில்லை. ஆனால், அத்தேர்தல்களில் பங்கு கொண்டு வாக்களிப்பதும், வாக்களிக்காமல் தவிர்ப்பதும் ஒரு தந்திரோபாய நடவடிக்கை என்ற புரிதல் அவர்களிடையே இருந்தது. தமிழ் மக்களின் தலைமை அரசியற் சக்தியாகத் திகழ்ந்த விடுதலைப் புலிகள் கூறியவாறு மக்கள் நடந்து கொண்டார்கள். அதாவது, தேர்தலில் பங்கெடுத்துக் கொள்வது ஒரு தந்திரோபாய நடவடிக்கையே என்பதை அவர்கள் ஏற்றுக் கொண்டிருந்தார்கள்.
இன்று தமிழ்த் தேசியத்தின் காவலர்கள் தாமே என்று கூறிக் கொண்டு களத்தில் நிற்பவர்கள், தாம் தேர்தல்களைத் தந்திரோபாய ரீதியில் பயன்படுத்துவதாகக் கூறிக் கொண்டாலும், தமிழ் மக்களின் அடிப்படைக் கோரிக்கைகளான தாயகம், தேசியம், தன்னாட்சி போன்றவற்றை வெற்றி கொள்ள எத்தகைய திட்டத்தைக் கொண்டுள்ளார்கள் என்பதைத் தெளிவு படுத்தவில்லை. இதுவே, மக்களின் தேர்தல் தொடர்பிலான அக்கறையின்மைக்குப் பிரதான காரணம்.
தேர்தல்களை ஒரு தந்திரோபாயமாக உயயோகிக்கின்றோம் என விடுதலைப் புலிகள் கூறிய பொழுது அவர்கள் சமாந்தரமாக ஆயுதப் போராட்டத்தை நடாத்திக் கொண்டிருந்தார்கள். ஆகையால், தமிழ் மக்கள் விடுதலைப் புலிகளின் கூற்றை நம்பி, ஏற்றுக் கொண்டு அதற்கேற்பச் செயற்பட்டார்கள்.
இன்று தேர்தல் களத்தில் நிற்பவர்களுக்கு தெளிவான செயற்திட்டம் எதுவும் இருப்பதாகத் தெரியவில்லை. தமிழ் மக்களின் ஜீவாதாரக் கோரிக்கைளை வென்றெடுக்க என்ன வழி என்பது அவர்களுக்கே தெரியாத நிலையில், எந்த வழிமுறைகளுக்கு ஊடாக தமிழர்களின் அபிலாசைகளை வென்றெடுக்க முடியாது என முன்னர் பரப்புரை செய்து, அதனை மக்களை ஏற்றுக் கொள்ளச் செய்தார்களோ, அதே வழிமுறைகளுக்கு ஊடாக தாம் தமிழர்களின் அபிலாசைகளை வென்றெடுக்கப் போவதாக இன்று கூறும்போது மக்கள் அதனை நம்ப மறுப்பதில் வியப்பில்லை.
எனவே, இன்று மக்களுக்கு இரண்டு விடயங்கள் புரிய வைக்கப்பட வேண்டும்.
முதலாவது, நாங்கள் முன்னைய போராட்ட வடிவத்தை - அதாவது ஆயுதப் போரட்டம் சார்ந்த போராட்ட வடிவத்தை - முற்று முழுதாகக் கைவிட்டு ஜனநாயக வழிமுறைகளுக்கு ஊடாகப் போராடி(?) தமிழ் மக்களின் ஜீவாதாரக் கோரிக்கைகளை வென்றெடுக்கப் போகின்றோம் என்பதை மக்களுக்குத் தெளிவாகக் கூறியாக வேண்டும். இதற்கு அடிப்படையாக விடுதலைப் புலிகளின் தலைமைப் பீடம் அழிக்கப்பட்டு, அந்த அமைப்பின் செயற்பாடுகள் முடக்கப்பட்டுள்ள யதார்த்தத்தை பகிரங்கமாக ஏற்றுக் கொள்ள வேண்டும்.
இந்த நிலையில் தமிழ் மக்களின் இலட்சியத்துக்கான போரட்டத்தை முன்னெடுக்கும் பொறுப்பு தமிழ்த் தேசியத்தை ஆதரிக்கும் அரசியல்வாதிகளின் கைகளிலேயே உள்ளது என்ற யதார்த்தத்தை தமிழ் மக்களுக்குத் தெளிவு படுத்த வேண்டும். ஊடக அறிக்கைகளூடாகவோ, செவ்விகளூடாகவோ மாத்திரம் அதனைச் சாதித்துவிட முடியாது. மக்களின் காலடிக்குச் சென்று விடயங்களைத் தெளிவுபடுத்த வேண்டும். ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு அளப்பரிய தியாகங்களைப் புரிந்ததன் பிற்பாடே தமிழ் மக்கள் விடுதலைப் புலிகளின் கொள்கைகளை ஏற்றுக் கொண்டார்கள். எனவே, அவர்களுக்கு மாற்றீடாக அரசியல் நடத்த முன்வருபவர்களும் தமது நம்பகத் தன்மையை நிரூபித்தாக வேண்டும். அதற்குப் பின்னரே மக்களின் ஒத்துழைப்பை எதிர்பார்க்க முடியும்.
நாடாளுமன்ற மார்க்கமே தற்போது எம்முன்னே உள்ள ஒரேயொரு மார்க்கம் என்பதை மக்களுக்குப் புரியச் செய்வது இரண்டாவது விடயம். இது மிகவும் கடினமான ஒரு செயன்முறையே ஆயினும் செய்யப்பட வேண்டிய ஒன்றே. இதற்கு முறையான நீண்டகாலச் செயற்திட்டம் ஒன்று அவசியம். அதிலே இலக்கு மாத்திரமன்றி இலக்கை அடைவதற்கான வழிமுறைகளும், குறித்த வழிமுறைகள் பயனளிக்காதவிடத்து மேற்கொள்ளப்படக் கூடிய சாத்தியமான மாற்று வழிமுறைகளும் தெளிவுபடுத்தப்பட வேண்டும். அவை மக்கள் முன் சமர்ப்பிக்கப்பட்டு அங்கீகாரமும் பெறப்பட வேண்டும்.
இன்று களத்தில் நிற்கும் தமிழ்த் தேசிய அரசியல்வாதிகளுக்கும் மக்களுக்கும் இடையே பாரிய இடைவெளி காணப்படுகின்றது. மக்களின் எண்ணங்களை விடுதலைப் புலிகள் பிரதிநிதித்துவம் செய்துவந்த நிலையில் முன்னர் இவ் இடைவெளி பெரிதாகத் தெரியவில்லை. தற்போது விடுதலைப் புலிகள் இல்லாத நிலையில் இந்த இடைவெளி தெளிவாகத் தெரிகின்றது.
இந்நிலையில் மக்களின் ஜீவாதாரப் பிரச்சினைகளுக்கான மக்கள் போராட்டங்களை தமிழ்த் தேசிய அரசியல்வாதிகள் முன்னெடுக்க வேண்டும்.
தடுப்பு முகாம்களில் வாடுவோரின் விடுதலை, மீள் குடியேற்றம் என்ற போர்வையில் மற்றுமொரு இடத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ள மக்களின் விடுதலை, மீள் குடியேற்றம் செய்யப்பட்ட மக்களின் அடிப்படை வசதிகளை உறுதி செய்தலும், மேம்படுத்தலும், உயர் பாதுகாப்பு வலயங்களில் இருந்து வெளியேற்றப்பட்ட மக்களின் மீள் குடியேற்றம், சிறைகளில் வாடும் அரசியல் கைதிகளின் விடுதலை, தொடரும் சிங்களக் குடியேற்றம் மற்றும் சிங்கள மயமாக்கல்களைத் தடுத்து நிறுத்துதல், சிதைக்கப்படும் தமிழர் நினைவுச் சின்னங்களைக் காப்பாற்றுதல், மனித உரிமை மீறல்களைத் தடுத்தல், தமிழ் மக்களின் கௌரவத்தைக் காப்பாற்றுதல் எனப் பொதுமக்களின் அன்றாடப் பிரச்சினைகள் எத்தனையோ உள்ளன.
2006 ஆம் ஆண்டின் முற்பகுதியின் பின்னர் சிறி லங்காவில் எங்குமே தமிழ் அரசியல் கட்சிகளால் மக்கள் போராட்டங்கள் எதுவும் நடாத்தப்பட்டதாக நினைவில் இல்லை. இந்நிலையில் அரசியற் கட்சிகளிடம் இருந்து மக்கள் விலகியிருப்பதில் வியப்பேதும் இல்லை.
இது மாத்திரமன்றி இன்று மக்களிடையே விழிப்புணர்வு அதிகமாக உள்ளது. 30 ஆண்டுகளுக்கு முன்னர் கைக்கொண்ட அதே அணுகுமுறை காலத்துக்கு ஒவ்வாதது. பயன் தராதது. எனவேஇ புதிய அணுகுமுறை கையாளப்பட வேண்டும். அத்துடன் புதிய முகங்களும் அறிமுகப் படுத்தப்பட வேண்டும்.
மாற்றம் என்பது சடுதியாக நிகழும் ஒன்றல்ல. அது சூழலைப் பொறுத்து விரைவாகவோ அன்றி மெதுவாகவோ நிகழக் கூடும். எனினும் அதற்கு குறிப்பிட்ட காலம் அவசியம்.
இலக்கு நிர்ணயிக்கப்பட்டு அதனை அடையக் கூடியதான முறையான செயற்பாடுகள் மக்கள் ஒத்துழைப்புடன் சரியான திசையில் பயணிக்குமானால் இலட்சியத்தை வெல்லும் பணி இலகுவாக அமையும். அதற்குத் தேவை சரியான தலைமைத்துவமும் வழிகாட்டலுமே.
-சண் தவராஜா-
2010.03.28
இலங்கை அரசினால் பல தடவைகள் 'குட்டு' வாங்கி குனிந்து கிடக்கும் ஆசிய 'போலிஸ் காரனாகிய' இந்தியா, வெகு அண்மையில் புரிந்துகொண்ட சம்பவங்களில் பிரதானமானது, வடகிழக்கை இலங்கை அரசு துண்டாடியது ஆகும்.
இதற்கு முன்னதாக(1987) இலங்கை இந்திய ஒப்பந்தத்திற்காக வருகை தந்திருந்த இந்திய பிரதமர் அமரர் ராஜீவ் காந்தியை, அணிவகுப்பின் போது ஒரு சாதாரண இலங்கைச் சிப்பாய் தாக்கியதும் அதுபற்றிய உணர்வலைகளை இந்தியா பெரிது படுத்தி கொள்ளாமல் இருந்ததும், அதே சிப்பாய் இலங்கையின் பொதுத் தேர்தலில் போட்டியிட்டதும் ஒருகணம் இந்தியாவின் நிலையை மீட்டிப்பார்க்க வேண்டிய சம்பவங்களாகும்.
அது ஒருபுறம் கிடக்க,
இந்தியாவானது இலங்கையின் வடகிழக்கு இணைப்பை அழுத்தம் திருத்தமாக கூறியிருந்த போதிலும் இலங்கை அரசின் பிரிப்பு நடவடிக்கைகளை நிறுத்த முடியாமல் போயிற்று.
கடந்தகாலங்களில் தமிழீழ விடுதலைப் புலிகளின் நிர்வாகப் பாய்ச்சலோ இலங்கை i அரசின் அதிகார 'பிரிப்பை' யும் மீறி செயற்பட்டுக் கொண்டிருந்ததையும், அதனை வடகிழக்கு சார்ந்த இருபகுதி தமிழ்மக்களும் ஏகோபித்து ஏற்றுக்கொண்டதையும் மறக்க முடியாது.
நிர்வாக ரீதியாக வடகிழக்கு பிரிக்கப்பட்டதன் பின் கிழக்கிற்கான மாகாணசபைத் தேர்தலில் 'பிள்ளையான்' முதலமைச்சராகி தனிமாகான நிர்வாக அலகாக கிழக்கு இயங்க ஆரம்பித்தது. இந்த நிர்வாக அமைப்பினூடாக கிழக்கு மாகாண மக்களுக்கான தனியலகுக்கான தேவைகள் யாவும் பூரணப்படுத்தப்படும் என அரசு கூறிய வார்த்தைகளை நம்பி பிள்ளையான் குழு 'பாபாசியில்' ஏறி வழுக்கி வீழ்ந்த நிலையில் 'மீசையில் மண் ஒட்டவில்லை' என்ற கதையோடு மாகாண சபையை இன்றுவரை ஓட்டிக்கொண்டு இருப்பது அறிந்த விடயமாகும்.
அரசின் ஏமாற்று வித்தைகளை உள்ளிருந்தே புரிந்துகொண்ட 'பிள்ளையான்' இப்பொழுது சற்று விலகி ஜனாதிபதி மகிந்தாவை ஆதரித்தும் - ஆதரிக்காமலும் 'ஓடும் புளியம் பழமுமான' ஒரு நிர்வாகத்தை நடத்திக் கொண்டிருப்பது நன்கு புலப்படுகிறது. இதுவானது, எதிர்காலத்தில் கருணா போன்று 'நடு ஆற்றில்' நிற்கக்கூடாத நிலைக்கான ஆரம்பப் படிக்கட்டாக கொள்ளலாம்.
வடகிழக்கின் நிலப்பரப்பை வெறும் பெயரளவில் தான் துண்டாடிப்பிரிக்க இலங்கை அரசாலும், நீதிமன்றத்தாலும் முடிந்ததே தவிர இன்றுவரை வடகிழக்கு தமிழ்மக்கள் இதனை மனதார ஏற்றுக்கொள்ளவில்லை என்பதற்கும், எதோ ஒரு விதத்தில் தமிழ்மக்களின் அரசியல் தலைமைகளைக் கொண்ட கட்சிகள் தமக்கிடையே மோதிக் கொண்டாலும் தமிழ்மக்களுக்கான அரசியல் உரிமைகளை பெற்றுக்கொடுப்பதற்கான முனைப்பில் இருந்து இம்மியளவும் வழுகவில்லை என்பதற்கு சான்றாக, தமிழ்மக்களின் விருப்பை நாடிபிடித்து அறிந்த வகையில், அண்மையில் நடைபெற்ற வரலாற்று நிகழ்வை மீட்டுவது பொருத்தம்.
தமிழ் தேசிய கூட்டமைப்பின் தேர்தல் விஞ்ஞாபனம் இரா. சம்பந்தன் அவர்களால்(திருக்கோணமலை மாவட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்) வெளியிட்டு வைத்ததும், அடுத்த கட்சியான தமிழ் தேசியத்திற்கான மக்கள் முன்னணியின் தேர்தல் விஞ்ஞாபனம் திருக்கோணமலையில் கஜேந்த்ந்திரகுமார் பொன்னம்பலம் அவர்களால்(யாழ்ப்பாண முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்) வெளியிட்டு வைத்ததும் ஒரு சாதகமான நிலையைக் காட்டுகிறது.
இந்த நிலையானது, வடகிழக்கு மக்களின் ஒற்றுமை நிலை சார்பாக இலங்கை அரசுக்கு விழுந்த பேரிடிச் செய்தியாகும்.
கட்சிகளில் பேதமிருந்தாலும், கொள்கைகளில் பேதமில்லை.
இந்த பேரிடியின் இரைச்சலை இந்தியாவும் தன கவனத்தில் எடுக்க வேண்டியது காலத்தின் தேவையாகும்.
தசக்கிரீவன்
உங்களின் அரசியல் நலன்களுக்காக
புலிகளை விலை பேசுவது நியாயமா?
நாடாளுமன்றத் தேர்தலுக்கு இன்னமும் இரண்டு வாரங்களே உள்ள நிலையில் அனைத்துக் கட்சிகளும் பிரச்சாரங்களைத் தீவிரப்படுத்தியூள்ளன. குறிப்பாக தமிழர் தாயகப் பகுதியில் உள்ள 31 ஆசனங்களுக்காக நடக்கப் போகும் தேர்தலின் முடிவு குறித்த எதிர்பார்ப்பு வலுவடைந்துள்ளது.
தமிழரின் பலத்தைச் சிதைக்க நினைக்கும் சக்திகளுக்குத் துணைபோகும் வகையிலான தேர்தலாகவே இது அமைந்திருக்கிறது. இந்தத் தேர்தலில் தமிழ்த் தேசிய சக்திகள் ஒன்றுபட்ட சக்தியாக தமிழரின் பலத்தை வெளிப்படுத்துவர் என்ற எதிர்பார்ப்புக்கு ஏற்கனவே மண் அள்ளிப் போடப்பட்டு விட்டது.
இதற்குக் காரணம் யார் என்று இப்போது பிரேத பரிசோதனை செய்து கொண்டிருப்பதில் பலன் இல்லை. ஏனென்றால் யாருமே தமது தவறுகளை ஒப்புக்கொள்ளும் நிலையிலோ அல்லது திருத்திக் கொள்ளும் நிலையிலோ இல்லை.
தமிழ்த் தேசியத்துக்கான அரசியல் என்பதை விடுத்து சுயநல அரசியல்போக்குடன் சிந்திக்கத் தலைப்பட்டதன் விளைவு இந்தத் தேர்தலின் அறுவடையாகக் கிடைக்கப் போகிறது.
அது ஒருபுறத்தில் இருக்க, தேர்தல் பிரச்சாரங்களில் ஈடுபடும் தமிழ்த் தேசிய சக்திகள் தமது அரசியல் இலாபத்துக்காக எதையும் பேசலாம்-எதையும் செய்யலாம் என்ற நிலைக்கு வந்து விட்டன என்பதை அவதானிக்க முடிகிறது.
அவர்களுக்கு வக்காலத்து வாங்கும் வகையில் அண்மைக்காலமாக இணையத்தளங்கள் ஏதாவதொரு சார்பு நிலைக்குள் சிக்கிக் கொண்டு பிரசாரம் என்ற ரீதியில் சேற்றை வாரும் காரியங்களில் இறங்கியுள்ளன.
தாம் சார்ந்த அமைப்புக்கு ஆதரவு கொடுப்பது என்பது ஒரு புறத்திலும்- தாம் சாராத அமைப்பைக் கேவலப்படுத்துவது என்பது மற்றொரு புறத்திலுமாக இந்தப் பிரச்சார சுழலுக்கு ஊடகங்கள் பலவும் சிக்கியிருக்கின்றன.
தமிழ்த் தேசியத்தை வலியுறுத்தி தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் தமிழரின் அரசியல் அபிலாஷைகளை வென்றெடுப்பதற்கான வழிமுறைகள், புனர்வாழ்வு என்று எத்தனையோ பிரச்சார வாய்ப்புகளைக் கொண்டிருக்கின்றனர்.
ஆனால் அவை எவற்றிலும் கவனமோ கருத்தோ கொள்ளாமல்- எதிர்த்தரப்பைக் கேவலப்படுத்துவதாக நினைத்துக் கொண்டு விடுதலைப் போராட்டத்தையும் அதற்காக உயிர் கொடுத்த மாவீரர்களையும் கேவலப்படுத்திக் கொண்டிருக்கின்றனர்.
யாரையும் பெயர் குறித்து விமர்சிப்பது எமது நோக்கம் அல்ல. ஆனால் இத்தகைய முயற்சிகளை நிறுத்த வைப்பதற்காக சில சம்பவங்களை வெளிப்படுத்துவது அவசியமானது.
ஒரு வேட்பாளர் மற்றொரு வேட்பாளரை கேவலப்படுத்துவதற்காகவும் தனது வித்துவத்தை வெளிப்படுத்துவதற்காகவும் புலிகள் இயக்கம் பல குழுக்களாகப் பிளவுபட்டிருந்தது என்று கூறியிருக்கிறார்.
ஒரு குழு அவரது கோரிக்கையை நிராகரிக்க இன்னொரு குழுவின் மூலம் தான் சாதித்துக் கொண்டதாக பிரசாரம் செய்து- தானே வெற்றி பெற்றதாக பிரகடனம் செய்கிறார்.
அவரே வன்னியில் தான் மூன்று தசாப்தங்களாகப் போருக்குள் வாழ்ந்ததை சாதனை என்று கூறிக் கொள்வதையும் காணமுடிகிறது.
30 வருடங்கள் தாயகத்தில் வழ்ந்தது சாதனை என்றால் தேர்தலில் போட்டியிடுவதற்கு வன்னியில் வாழ்ந்த 3 இலட்சம் பேரும் அதற்குத் தகுதியானவர்கள் தான்.
தமிழ்த் தேசியத்தைக் கைவிட்டு ஆளும்கட்சியோடு சேர்ந்து போட்டியிடும் கனகரட்ணம் எம்.பி கூட அப்படித்தான் இருந்தவர். அப்படிப் பார்த்தால் பல மாதங்கள் சிறையில் இருந்த கனகரட்ணம் இவரை விடவும் ஒரு படி மேல் அல்லவா இருக்க வேண்டும்.
இன்னொரு வேட்பாளர் மறைந்த ஊடகவியலாளர் நிமலராஜன் குடும்பத்தினருக்காக யாழ்ப்பாண மக்கள் வழங்கிய உதவிகளைக் கையளித்த புகைப்படத்தை வெளியிட்டு தன்னை பிரபலப்படுத்த முயன்றுள்ளார்.
அரசியல் நலனுக்காக நிமலராஜனின் மனைவியும், அவரது குழந்தைகளும், தாயாரும் தானா அந்த வேட்பாளருக்குக் கிடைத்தனர்? இதுவா அரசியல் பிரச்சாரம்?
இப்படியான புகைப்படங்களை வெளியிட்டுப் பிரச்சாரம் செய்வதென்றால் டக்ளஸ் தேவானந்தா போன்றாருக்கு எத்தனை ஆயிரம் புகைப்படங்கள் கிடைக்கும்?
அவர்களே அதைச் செய்யாத போது தமிழ்த் தேசியத்தின் பெயரில் அரசியல் நடத்த முனையும் இவர்கள் இதைச் செய்ய நினைப்பது தவறான அரசியல் முன்னுதாரணமாகி விடப் போகிறது.
சில முக்கிய தலைவர்களின் தோல்வியைத் தவிர்ப்பதற்கான அழுத்தங்களைக் கொடுக்கும் வகையில் புலிகளைக் கேவலப்படுத்தவும்- அவர்களின் கடந்தகால செயற்பாடுகளை விமர்சிக்கவும் பலரும் துணிந்து விட்டனர்.
புலிகள் இயக்கம் தோல்வி காண்பதற்கு முன்னரோ அல்லது அவர்கள் தோல்வி கண்ட போதோ வாயை மூடிக் கொண்டிருந்தவர்களெல்லாம் இப்போது புலிகள் செய்வதெல்லாம் தவறு. தாங்கள் செய்தது- செய்யப் போவதெல்லாம் சரியென்று பிரச்சாரம் செய்கின்றனர்.
புலிகள் செய்ததெல்லாம் சரி என்பது எம் வாதமல்ல. ஆனால் புலிகளின் தவறுகளை அரசியல் நலனுக்காகப் பயன்படுத்தத் துணிந்து விட்டதே இவர்களின் தவறு என்பதைத் தான் சுட்டிக்காட்ட விரும்புகிறோம்.
தமிழ் மக்களின் அரசியல் தலைவிதியைத் தீர்மானிக்கும் சக்தி இப்போது தமிழ்த் தேசிய அரசியல்வாதிகளின் கைகளில் வந்திருப்பது உண்மை. ஆனால் இதற்கு முன்னர் தமிழரின் பாதுகாப்பு- மற்றும் தலைவிதியைத் தீர்மானிக்கும் சக்தியாக இருந்தது புலிகளே. அவர்களின் ஆயுதங்கள் தான் தமிழினத்தை இதுவரை அழியாமல் பாதுகாத்தது என்பது உண்மை.
தமிழரின் பாரம்பரிய பிரதேசங்கள் இப்போதுள்ள அளவாயினும் எஞ்சியிருப்பதற்கு அவர்களின் ஆயுதபலமே காரணமாக இருந்தது. இதையெல்லாம் மறந்து விட்டு புலிகளின் அழிவின் மீதும் சமாதிகளின் மீதும் தமது அரசியல் கதிரைகளுக்கு அடித்தளம் போட முனைவது சுத்த அயோக்கியத்தனம்.
தமிழ்த் தேசிய அரசியல்வாதிகள் தமிழ்மக்களின் முன்பாக தமது கொள்கை நிலைப்பாட்டை விளக்கி அவர்களின் ஆதரவைத் திரட்டுவதற்கு முனைய வேண்டும்.
அதுவே ஆரோக்கியமான அரசியல் வழியாகவும் இருக்கும். சேற்றை வாரி இறைப்பதன் மூலமோ அல்லது வரலாற்றுப் புரட்டுகளின் மூலமோ- குறுக்குவழிகளின் மூலமோ நாடாளுமன்றக் கதிரைகளை அடைய முனையாதீர்கள்.
தமிழ்த் தேசியத்தின் பெயரால் அரசியல் பிழைப்பு நடத்த முடிவெடுத்து விட்ட அனைத்து வேட்பாளர்களுக்கும் ஒரு வேண்டுகோள்.
• நாம் மோதப் போவது- மோத வேண்டியது எமக்குள் அல்ல. அதற்கான தருணமும் இதுவல்ல.
• கர்ணன் கவச குண்டலங்களை இழந்து நின்றது போன்ற நிலையில் எமது பலமான புலிகளின் ஆயுதபலத்தை இழந்து நிற்கிறேம்.
இந்தத் தருணத்தில் எமது கண்களுக்கு முன்னே தெரிய வேண்டியது பொது எதிரியே.
• இது போர்க்களம் அல்ல- அரசியல் களம்.
எமக்கு நாமே சேற்றை வாரும் போது அடையப் போவது தோல்வியே. அந்தத் தோல்வி எதிரியைத் தலைநிமிரச் செய்யும். எம்மைத் தலைகுனிய வைத்து விடும்.
-தொல்காப்பியன்-
மாயாஜால மந்திரத்தினால் கூட சில நம்பமுடியாத நிகழ்வுகள் இலங்கை அரசியலில் நடை பெறுவது விந்தையிலும் விந்தை.
'கனவில் நினையாத காலம் எமை வந்து பிரித்த கதை கூறவா'? என்ற கண்ணதாசனின் கவிதை வரிகள் நிதர்சனமாகி 10 மாதங்கள் கூட கடக்கவில்லை. குறைப்பிரசவத்திலே பல 'திடீர்' அரசியல் குழந்தைகள் இலங்கையிலே பிரசவமாகி விட்டன. இருப்பினும் மிக நிதானமாக செயற்பட்டுக் கொண்டிருக்கும் பழமை வாய்ந்த இரு தமிழ் அரசியற் கட்சிகளை கவனத்திற் கொள்ளலாம்.
* தமிழ் தேசிய கூட்டமைப்பு
* தமிழ் தேசியத்திற்கான மக்கள் முன்னணி(தமிழ் காங்கிரஸ்)
தமிழ் தேசிய கூட்டமைப்பு தமது தேர்தல் விஞ்ஞாபனத்தில் வெளிப்படுத்தி இருப்பதானது,
'தாயக பூமியில் சுயநிர்ணயத்துடன் ஒருமித்த நாட்டில் சமஷ்டி அடிப்படையிலான சுயாட்சித் திட்டம்'
தமிழ் தேசியத்திற்கான மக்கள் முன்னணி தமது தேர்தல் விஞ்ஞாபனத்தில் வெளிப்படுத்தி இருப்பதானது,
'தமிழ்மக்கள் தாயகம், தேசியம், சுயநிர்ணைரிமை, தனித்துவ இறைமைகொண்ட தேசம் என்ற அடிப்படையில் ஒரு நாட்டுக்குள் இரு தேசங்களின் கூட்டு'
இவ்விரு வின்ஞாபனங்களும் தமிழ் மக்களின் நிரந்தர தீர்வை நோக்கி நகர்வதாகவே தெரிகிறது. இருந்தாலும், இதற்கான நீதிபதிகள் ஈழம்வாழ் தமிழ்மக்களே.
இந்த இரு கட்சிகளும் எதிர்வரும் பொதுத் தேர்தலில் எதிரும் புதிருமாக போட்டியிட வசைபாடி வருகிறது. தமிழ்மக்களின் வாக்குகள் உடைந்து பாராளுமன்ற பிரதிநிதிகளின் எண்ணிக்கை குறைவடைய வாய்ப்புக்கள் நிறைய உண்டென்ற குற்றச்சாட்டு பரவலாக முன்வைக்கப்பட்டாலும், பாராளுமன்ற பிரதிநிதித்துவத்தால் என்ன சாதித்துவிடலாம் என்று எண்ணும்போது, இதுவரை காலமும் எதைத்தான் சாதித்துவிட்டதென்றால் 'வெறும் கானல் நீர்தான்' என்பது பதிலாக அமையும்.
பாராளுமன்ற பதவிக்குமப்பால் எமது சிந்தனைகளை மேல்நோக்கி நகர்த்திப் பார்த்தால் பெரும் உண்மை வெளிவரும். அது சிங்கள அரசை நோக்கியிருக்கும் இருகுழல் துப்பாக்கியாக அமையப்போகின்றதென்பது வெளிப்படை. அதாவது, இவ்விரு தமிழ் கட்சிகளுக்கும் எதிர்வரும் பொதுத் தேர்தலில் தமிழ்மக்கள் தமது வாக்குகளை முளுப்படியாக அளித்தால்(பிரதிநித்துவம் இல்லாவிடினும்) முற்றுமுழுதாக தமிழீழ மக்கள் தாயகம், தன்னாட்சி, சுயநிர்ணயம், திறமைகொண்ட தேசம் போன்றவைகளுக்கு வாக்குப் பண்ணியதாகவே அமையும் என்பதில் ஐயமில்லை. அதுவானது,
பிரிந்துவாழ்வதற்கான ஆணையை தமிழீழ மக்கள் பிரகடனப் படுத்தி உள்ளார்கள் என்பதை சிங்களத்திற்கு கூறியிருக்கும் செய்தியாக அமையப் போகிறது. பாராளுமன்றப் பிரதிநித்துவம் இல்லாமல் போனாலும் தமிழ்மக்கள் உடைந்துவிட்டார்கள் என்ற சிங்களத்திற்கு இனிப்பான செய்தி தேர்தலின்பின் கசப்பான செய்தியாகிவிடும்.
தமிழ் அரசியற் கட்சிகளின் பிளவால் தமிழ்மக்கள் உடைந்து விட்டாலும், உள்ளுணர்வான தமிழீழ கொள்கையிலிருந்து விலகாது உறுதியாக உள்ளார்கள் என்பதை சிங்கள தேசமும், சர்வதேசமும் எதிர்வரும் தேர்தல் முடிவுகளிலிருந்து படிக்கப்போகும் பாடமாகும்.
மல்லிகையூரான்
தமிழ் தேசிய கூட்டமைப்பினால் வெளியிடப்பட்ட தேர்தல் விஞ்ஞாபனமானது இலங்கை சிங்களத்தலைமைகளுக்கு பெரும் அச்சுறுத்தலாக அமைந்துள்ளது. குறிப்பாக தமிழீழ விடுதலைப்புலிகளின் நிழல் பிரதியாக தமிழ் தேசிய கூட்டமைப்பு இயங்குகின்றதென்ற குற்றச்சாட்டு இலங்கை அரசினால் சுமத்தப்பட்டு அது இந்தியாவின் அங்கீகாரத்துக்கு செல்ல வாய்ப்புண்டு.
இந்தியாவானது இலங்கையின் குற்றச்சாட்டுக்கு கோடி காட்டுமானால், இராணுவத் தளபதி சரத் பொன்சேகாவுக்கு ஏற்பட்ட நிலைதான் தமிழ் தேசிய கூட்டமைப்பு தேர்தல் விஞ்ஞாபனத்தில் கையொப்பமிட்ட தலைமைகளுக்கும் ஏற்பட இடமுண்டு.
இந்த நிலையில் சர்வதேசம் தனது விஸ்வரூபத்தை தமிழ்மக்களுக்கு சார்பாக காட்ட முயலலாம். இதன்போது புலம் பெயர்ந்த மக்கள் இலங்கை அரசின் அராஜக அடக்கு முறைக்கு எதிரான நிலையை எப்படி எடுக்க வேண்டுமென இப்போதே ஆயத்த நிலையில் இருப்பது நல்லதென தோன்றுகிறது. அதற்கான ஒத்திகைகளை மக்கள் மத்தியில் நடைமுறைப் படுத்திப் பார்ப்பது சிறப்பானது.
வேறுபட்ட பல காரணங்களுக்காக பிளவுபட்டு நிற்கும் புலம்பெயர் மக்கள் இந்த கணமே ஒன்றுபடுதல் அவசியம். எம்மவர்களுக்குள்ளே ஒரே கொள்கையுடன் வேறுபட்ட துருவங்களாகி பனிப்போர் நடாத்திக்கொண்டிருக்கும் புலம்பெயர் மக்கள், கடந்தகால சிதைவுகளை முன்னிறுத்தி தமிழீழ நகர்வுக்காக உடனடியாக ஒன்றுபட்டு ஈழமக்களின் தீர்வை நோக்கி நகரல் வேண்டும்.
நினையா பிரகாரமாக இலங்கையில் எதுவும் எப்போதும் நடைபெறலாம். மின்னாமல் முழங்காமல் வருகின்ற மழைக்கு ஒப்பானது மகிந்த கொம்பனியின் கட்டளைகள். இதனால் வெகு ஜாக்கிரதையாக காய் நகர்த்துவதற்கு புலம்பெயர் புத்திஜீவிகள் தங்களை ஆயத்தப்படுத்தல் அவசியமாகும்.
ஏனெனில்,
'எதிர்வரும் காலங்களில் போராட்ட வடிவம் புலம்பெயர் மக்களிடையே விடப்பட்டுள்ளது' என்ற தலைவரின் கருத்துக்கு உண்மை வடிவம் கொடுக்கப்படும் காலம் நெருங்கிவிட்டதென்பதே ஜதார்த்தம்.
மலையூர் பண்ணாகத்தான்
'தணல்' இணையத்தள வெளியீடுகளை கிரமமாக படித்து வருபவன் என்ற வகையில் சில விபரங்களை உங்களோடு பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன். இயலுமானால் இதற்கான விளக்கங்களை தருவீர்களானால் சந்தோசமடைவேன்.
தங்களின் இணையத்தளமூடாக தமிழ் தேசிய கூட்டமைப்பின் நகர்வுகள் ஓரளவு சாதகத்தன்மையை கடைப்பிடிப்பது தெரிந்தாலும், சில நியாயங்களை சுட்டிக்காட்டுவதையும் காணக் கூடியதாக உள்ளது.
தமிழ் தேசிய கூட்டமைப்பை தேசியத்தலைவர் அங்கீகரித்த காரணத்தாலும், ஈழத்தமிழ்மக்களின் நிரந்தரமான சுதந்திர வாழ்விற்கு பாடுபடுகின்றதென்ற காரணத்தாலும் நான் இதனை ஆதரிக்கிறேன்.
கடந்த மாதம் தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் அவர்கள் கனேடிய வானொலிக்கு வழங்கிய பேட்டியில் தன்னை மறந்து கோபமடைந்ததை பலர் வெறுப்புடன் நோக்கினாலும், நான் அது ஓரளவு சரியென அவர் நிலையிலிருந்து வாதிட்டிருந்தேன். ஆனால் தற்போது கடந்த சில தினங்களுக்கு முன்னர் இரா. சம்பந்தன் அவர்கள் லண்டனில் உள்ள தொலைக்காட்சி ஒன்றுக்கு செய்தி அறிக்கையின் போது அளித்த பேட்டியில் சற்று உணர்ச்சி வசப்பட்டு, தமிழ் காங்கிரஸ் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் மீது வசைபாடியதை கேட்கக் கூடியதாக இருந்தது.
அவர் உணர்ச்சி வசப்பட்டது பிரச்சனை அல்ல. அது அவரின் தனிப்பட்ட குணாதிசயம் சார்ந்த விடயம். ஆனால் நான் கேட்பது அதுவல்ல.
தற்போது தமிழ் தேசியத்திற்கான மக்கள் முன்னணி(தமிழ் காங்கிரஸ்) யால் வெளியிட்டு வைத்த தேர்தல் விஞ்ஞாபனத்தை முழுமையாக படித்தேன். இது வெளிவருமுன்னர் தமிழ் தேசிய கூட்டமைப்பின் விஞ்ஞாபனத்தை ஏற்றிருந்தேன்.
ஈழத்தமிழ் மக்களின் நலன் சார்ந்த குறிப்பாக தமிழ் தேசிய கூட்டமைப்பால் கூறப்படாத பல விடயங்கள் மிக நுட்பமாகவும் ஆழமாகவும் கூறப்பட்டிருந்ததை கண்ணுற்றேன். தேர்தல் விஞ்ஞாபனத்தை பொறுத்தமட்டில் தமிழ் தேசியத்திற்கான மக்கள் முன்னணி வெளியிட்ட விஞ்ஞாபனமே சிறந்ததென முடிவுக்கு வந்துள்ளேன். ஆனால் இவை, தடம் மாறாமல் நடைமுறைப் படுத்தப்படுமா என்பது மறுபுறம் உள்ள கேள்வியாகும். இவற்றையும் தாண்டி, விஞ்ஞாபனம் ஏற்றுக்கொள்ளக் கூடியதாகும்.
தமிழ் காங்கிரஸ்சின் விஞ்ஞாபனம் பற்றி தொலைக்காட்சி அறிவிப்பாளர் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தனிடம் கேட்டபோது, அவர் அளித்த பதிலானது, 'கஜேந்திரகுமார் பொன்னம்பலத்தினால் வெளியிடப்பட்ட விஞ்ஞாபனம் பொருத்தமற்றது. இதனால் எந்த பயனும் தமிழ்மக்களுக்கு ஏற்படாது. இந்த தேர்தல் விஞ்ஞாபனத்தில் வெளியிடப்பட்ட எதனையும் ஏற்கனவே அமரர் பொன்னம்பலத்தாலோ, அமரர் தந்தை செல்வாவாலோ, திருவாளர் பிரபாகரனாலோ கூறப்படவில்லை . அப்படியானதொன்றை எவ்வாறு ஏற்கமுடியும்?' என்று கூறினார்.
இரா. சம்பந்தனின் கருத்தை எந்த வழியிலும் ஏற்றுக்கொள்ள முடியாது. பொன்னம்பலம், செல்வா, தலைவர் பிரபாகரன் ஆகியோரால் கூறப்பட்டவை தான் விஞ்ஞாபனமாக வரவேண்டும் என்ற நியதி எங்கு உள்ளது? அவர்கள் கூறியவற்றிலிருந்து நெறி மாறாமல் செழுமைப் படுத்தப்பட்டு தற்போது தமிழ்மக்களுக்கு பொருந்தக்கூடியதாக இருந்தால் அதுவே சிறப்பு என்று எண்ணுகிறேன்.
தேர்தல் விஞ்ஞாபனத்தின் குறை நிறைகளை குறிப்பிடலாம். 'குருடன் பெண்டிலுக்கு அடித்தது' போல சம்பந்தன் விஞ்ஞாபனத்தை ஆழமாகப் படிக்காமல் எழுந்த வாரியாக குறை கூறியதுபோல் தெரிகிறது. அல்லது தமிழ் தேசிய கூட்டமைப்பு விஞ்ஞாபனத்தில் கூறப்படாத பல விடயங்கள் ஈழ தமிழ்மக்களுக்கு தமிழ் தேசியத்திற்கான மக்கள் முன்னணியின் விஞ்ஞாபனத்தில் கூறப்பட்டிருக்கின்றதென்பதில் தெரிகின்ற சீற்றம் அல்லது தமிழ் தேசிய கூட்டமைப்பின் விஞ்ஞாபனத்தில் கூறப்படாத சில பல நல்ல விடயங்கள் வேறெந்த கட்சியின் விஞ்ஞாபனத்திலும் கூறப்படக் கூடாதென்ற எண்ணமோ? அல்லது அப்படியே கூறப்பட்டிருந்தாலும் அது மக்களால் ஏற்றுக்கொள்ளப்படக் கூடாதென்ற எண்ணம்போலும் தெரிகிறது.
தமிழ்மக்களைப் பொறுத்த மட்டில் யார் குற்றினாலும் நல்ல தரமான அரிசி கிடைக்க வேண்டும். அது தமிழ் தேசிய கூட்டமைப்பிடம் இல்லாவிட்டால் முகத்துக்கு அஞ்சி நடவாமல் மக்களால் அதை தூக்கி எறிய வேண்டிய நிலை ஏற்படலாம்.எதற்கும் இரா. சம்பந்தனிடம் கேட்ட கேள்விகளுக்கான சரியான பதில் இல்லாமல் குதர்க்கமான பதில் கிடைத்தது வேதனைப்படுத்துகிறது. தொடர்ந்து இந்த நிலை நீடிக்காமல் மாற்றப்பட வேண்டும். இது தமிழ் தேசிய கூட்டமைப்பின் ஏனைய அங்கத்தவர்களிடம் மிகுந்த பொறுப்பு உள்ளதென எண்ணுகிறேன்.
தயவு செய்து இந்த மடலை பிரசுரித்தால் நன்றி உடையவனாய் இருப்பேன்.
ஞானவேல் பிரேமச்சந்திரன்
சூரிச் மாநிலம்
சுவிட்சர்லாந்து
ஈழத்தமிழருக்காக குரல் கொடுக்கும் பல அரசியல் கட்சிகள் தற்போதைய பொதுத் தேர்தலில் குதித்துள்ளன. அடிப்படை கொள்கையாக தாயகம், தன்னாட்சி, சுயநிர்ணயம், இறைமை போன்றவற்றை வரித்துக் கொண்டு பெரும்பாலான தமிழ் கட்சிகள் தமிழ்மக்களின் முன் பிரசன்னமாகி உள்ளன. இவை எதனையும் மறுப்பதற்கில்லை. இதிலே குழப்பம் என்னவென்றால் எதை தமிழ்மக்கள் ஏற்றுக்கொள்வது என்பதில்தான்.
ஈழத்தமிழ் மக்களின் சுதந்திர வாழ்விற்காக சூளுரைக்கும் கட்சிகள் ஏன் பிரிந்து நின்று தேர்தலில் போட்டியிட வேண்டும்? இதுதான் அடித்தளத்திலிருந்து எழும் முதல் கேள்வியாகும். ஒன்றை புரிந்து கொள்ள வேண்டும். எதோ ஒரு சுயநலம் இவற்றினிடையே தொக்கி நிற்கின்றதென்பது புலனாகும். ஒரு கொள்கையின் கீழ் கட்சிகள் ஒற்றுமைப்பட விரும்பவில்லை. ஏனென்றால் பின்னணியில் எதோ உள்ளது என்பது உண்மையாகும். தத்தமது சொந்த விருப்பு வெறுப்புகளை முன்னிறுத்தி தேர்தலில் நிற்பார்களானால் நிட்சயமாக எதிர்காலத்தில் தமிழ்மக்களை எமாற்றுபவர்களாகவே இருப்பார்கள் என்பதில் எள்ளளவும் மாற்று கருத்து இருக்க முடியாது.
தமிழ்மக்கள் நிதானமாக சிந்தித்து செயற்பட வேண்டும் என்பதில் அவதானமாக இருக்கவேண்டும். தனிப்பட்ட ஒரு நபரை முன்வைத்து ஒரு கட்சியின் நிலைப்பாட்டை தீர்மானிக்க முடியாது. ஒட்டு மொத்த கொள்கையைக்கொண்டு, அதாவது அது நிரந்தரமான தீர்வை தமிழ்மக்களுக்கு ஏற்படுத்துமா? என்பதை சிந்திக்க வேண்டும்.
கடந்த சில தினங்களுக்கு முன்னர் யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற தமிழ் தேசிய கூட்டமைப்பினரின் மாநாட்டில் இரா. சம்பந்தனின் கருத்து பலரை சிந்திக்க வைத்திருக்கின்றது என்ற உண்மையை சொல்லித்தான் ஆகவேண்டும். ஈழத்தமிழ் மக்களின் குறியீடாக இருக்கும் திருக்கோணமலையை தமிழரிடமிருந்து திட்டமிட்டு சிங்களம் கபளீகரம் செய்ததென்பது அனைவரும் அறிந்த விடயம். இந்த நிலைக்கு கொண்டு வருவதற்கு பல அரசியல் வாதிகளின் பங்களிப்பும் பெரும் காரணமாக இருந்தது என்பது வரலாறு. ஈழ தமிழ்மக்களின் அடையாளமாக திகழும் யாழ்ப்பாணத்தையும் கைவிட நேர்ந்தால் தமிழரின் கதி என்னாவது என்பதை மிக ஆழமாக இரா. சம்பந்தனால் சொல்ல முடிந்திருந்தது என்பது மிகப் பெரிய விழிப்புணர்வை அனைத்து தமிழ்மக்கள் மத்தியில் ஏற்படுத்தும் என்பதில் ஐயமில்லை.
யாழ்ப்பாணத்தில் ஒரு சிங்களக் கட்சிக்கு தலைமை தாங்கி வெற்றிலைச் சின்னத்தில் போட்டியிட்டு அதனை வேரூன்றவைத்த பெருமை டக்லஸ் தேவானந்தாவையே சாரும். அதன் பின்னணியில் ஒரு தாயக தமிழர் தேசம் கபளீகரம் செய்யப்படுவதற்கு ஆயத்தநிலையில் உள்ளதென்பதை அறியாமல் இருப்பது வேதனைக்குரியது.
ஆகவே இதிலிருந்து எம் தமிழ் இனத்தை மீட்க ஒரு பலமான அரசியல் கட்சி தேவை என்பதை இக்கணத்தில் உணர்தல் அவசியம். வெறும் சலுகைகள் எமது பாரம்பரிய பிரதேசத்தை காப்பாற்றாது. உரிமைகளுடன் கூடிய ஜனநாயக போராட்டமே எம் பிரதேசங்களைக் காத்து நிற்கப்போகின்றது.
இதை தெளிவாக வேறுபடுத்தி புரிந்து கொண்டால், எமது உரிமைக்காக குரல் கொடுக்கும் சக்தி எதுவென்பது இலகுவாக புரிந்துவிடும்.
அதையே நாம் இலகுவாக வரிந்துகொள்ள வாய்ப்பாக அமைந்துவிடும்.
மல்லிகையூரான்
கருத்துகளுக்கு: info@thanall.com
தமிழ் தேசிய கூட்டமைப்பின் தேர்தல் விஞ்ஞாபனத்திற்குப் பின்னர் மிக அதிகமாக அங்கலாய்ந்து ஓடித்திரிகிறது மகிந்த அரசு. அதிலும் குறிப்பாக திருக்கோணமலை மாவட்டத்தை கருத்தில் கொள்ளலாம். புதிது புதிதான வாக்குறுதிகளை அள்ளி வீசும் மகிந்த அரசு எப்படியாவது இரு ஆசனங்களைப் பெறுவதிலும், மேலும் ஒருபடியாக இரா. சம்பந்தனை தோற்கடித்தால் 'ஒரு கல்லில் இரு மாங்காய்கள்' என்ற நிலையும் ஏற்பட வாய்ப்புண்டு. இதற்கான பல உபாயங்களைப் பிரயோகித்தாலும், மக்கள் தடம் புரளாமல் தமிழ் தேசிய கூட்டமைப்பிற்கு வாக்களிப்பார்கள் என்பதில் ஐயமில்லை.
கடந்த சில தினங்களுக்கு முன்னர் திருக்கோணமலை - மனையாவெளிப் பகுதியில் அரச வேட்பாளராகிய அமைச்சர் புஞ்சிநிலமைக்கு ஆதரவு கோரி சமாதான நீதவான் இரகுநாதன் தலைமையில் ஒரு கூட்டம் நடைபெற்றது. அதில் உரையாற்றிய அமைச்சர் புஞ்சிநிலமே, மூதூர் கிழக்கு சம்பூர் மக்களை விரைவாக குடியேற்றம் செய்வதற்கு தனக்கு வாக்களிக்கும்படி கோரியிருந்தார்.
அரசு ஒன்றினால் இடம்பெயர வைக்கப்பட்ட மக்களை மீளவும் அந்த அரசு குடியேற்றுவது கடமையா? சலுகையா? இதுவே மேலெழும் கேள்வியாகும். அரசினால் துரத்தப்பட்ட மக்களை மீளவும் அந்த அரசு குடியேற்றுவது உரிமை சார்ந்த கடமை என்பதை புஞ்சிநிலமே அவர்கள் புரிந்துகொள்ளல் அவசியம்.
நீங்களாகவே வெளியேற்றிவிட்டு, ஏதோ தமிழ் மக்களுக்கு நன்மை செய்வது போல மீளக்குடியேற்றுவதானது எந்த அளவில் நியாயமாகலாம்? இடம் பெயர்ந்து வாழ்ந்த காலங்களில் மக்கள் பட்ட துன்பம், இழந்த உயிர், அடைந்த பொருளாதார வீழ்ச்சி, அழிந்த சொத்துக்கள் போன்றவை கணக்கில் அடங்காது. இவை யாவற்றிற்கும், தமது சொந்த வாழ்நிலங்களில் குடியேற்றுவது என்பது அவர்களின் உரிமைக்கு ஈடுசெய்யக் கூடியதா?
அமைச்சர் புஞ்சிநிலமே தோல்வியடைய நேரிட்டால் மீள்குடியேற்றம் இல்லாமல் போய்விடும் என்ற கருத்தை ஒரு 'வெருட்டாக' கூறுவதுபோல் தெரிகிறது. 'கண்களை விற்று சித்திரம் வாங்க' தமிழ்மக்கள் தயாராக இல்லை என்பதை இத்தேர்தல் மிக வெளிப்படையாக காட்டிட இருக்கிறது.
அமைச்சர் புஞ்சிநிலமேயை திருக்கோணமலையில் ஆளுமைப்படுத்த எம்மவர்கள் துணை நிற்கிறார்கள் என்பது ஒரு பெரும் வெட்கக்கேடான செயலாக உள்ளது. இவர்களுக்கெல்லாம் சரியான பாடம் புகட்ட சரியான ஆட்கள் இல்லை என்ற கவலை மேலிடுகிறது.
கடந்த 30 ஆண்டுகளுக்கு முன், வெருகல் சித்திர வேலாயுதர் கோவிலின் கங்காணமாக பதவி வகித்த அமரர் செ. இராசையா அவர்களின் சுவடுகளிலிருந்து ஒரு சம்பவம் நினைவிற்கு வருகிறது.
சேருவில என்கின்ற பௌத்த ஆலயத் தலைமைத் துறவி(தேரர்), ஆலயத்தின் 18 திருவிழாக்களில் ஒரு திருவிழாவை தமக்கு(சிங்கள) தருமாறு அளுத்தம் கொடுத்தபோது, பகிரங்கமாக அரச தலைமைக் கூட்டத்தில் அமரர் இராசையா கூறியதாவது, 'எங்கேயோ கிடந்து விலாசமில்லாமல் காவியை போர்த்திட்டு வந்து எங்கட கோயில்ல விழா கேக்கிற நீ, பின்னுக்கு வெருகல் கோயிலும் எங்கடதான் எண்டு சொல்லி கதிர்காமமாக்க மாட்டாய் எண்டு எப்பிடி நம்பிறது? வந்து கும்பிடுறதெண்டா கும்பிடு! இல்லாட்டி சத்தமில்லாமல் வெளியில போ'
இன்றைக்கு திருக்கோணமலைக்குத் தேவையானதும் இதுதான். வரலாற்றைப் புரட்டுவோம்! வரலாற்றில் தேவையானவற்றை பின்பற்றுவோம்!
கனகசபை தேவகடாட்சம்
கருத்துகளுக்கு: info@thanall.com
தமிழ் தேசிய கூட்டமைப்பு தனது தேர்தல் விஞ்ஞாபனத்தை வெளியிட்டதன் பின்னர் சிங்களத்தின் வயிற்றில் பு(லி)ளியைக் கரைத்துள்ளதை காணக் கூடியதாக உள்ளது.
'கிணறுவெட்ட பூதம் கிளம்பிய' கதை போல புலிகளை இராணுவரீதியாக ஒடுக்கிய பின் அதன் வழியொற்றி தமிழ் தேசிய கூட்டமைப்பு வெளியிட்ட விஞ்ஞாபனம் அதிக தாக்கத்தை சிங்களத்திற்கு தந்துள்ளது. இதில் உணரப்படும் உண்மை யாதெனில் 'கருத்துக்கள் ஒருவரைப் பற்றிக்கொள்ளுமாக இருந்தால் அது அழிக்க முடியாத, வெட்ட வெட்ட தளைக்கும் மரமாகும்' என்று கூறிய லெனினின் கருத்து எவ்வளவு உண்மையானது.
'சிங்களத்துடன் சேர்ந்து வாழ முடியாது' என்ற கருத்தியலை தமிழ்மக்கள் மிக ஆழமாகவே பற்றிக் கொண்டார்கள் என்பதை புரிந்து கொண்ட சிங்களம், தற்போது அதை எந்த வழியில் நசுக்கலாம் என திட்டங்கள் வகுத்த வண்ணம் உள்ளது.
அமைச்சர் டி. யூ. குணசேகர, J.V.P. முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச ஆகியோர் கூட்டமைப்பின் விஞ்ஞாபனம் சார்பாக வெளியிட்ட கருத்துக்களை மிக ஆழமாக உற்று நோக்குதல் அவசியம். விடுதலைப்புலிகளின் தனி ஈழ கொள்கைக்கு புத்துயிர் அளிப்பதாக கூறி விஞ்ஞாபனத்தையும், கூட்டமைப்பையும் 'தாறுமாறாக' விமர்சித்துள்ளதை காணலாம்.
ஜனாதிபதி வேட்பாளர் சரத் பொன்சேகாவை, ஜனநாயக வரம்புமுறைகளுக்கு மாறாக அதுவும் நீதியரசர்களின் கருத்துக்களையும் செவிமடுக்காது, நிறைவேற்று அதிகாரங்களை கையில் எடுத்துக் கொண்டிருக்கும் ஜனாதிபதியின் விருப்புக்கமைய சிறையில் தள்ளியிருக்கும் கொடுமையை உலகம் அறியும். இருப்பினும் மனித நேயத்தை அதிகமாக பேசும் பல நாடுகள் மௌனித்துக் கிடக்கின்றதையும் அறிவோம்.
எதிர்வரும் பொதுத் தேர்தலில் தமிழ் தேசிய கூட்டமைப்பிற்கான மக்கள் ஆணை நிறையவே கிடைக்கப் போகின்றதென்பது மறுக்க முடியாத உண்மை. அதிலும் இரா. சம்பந்தன் இறுதியாக திருக்கோணமலை புத்திஜீவிகளுடன் நடைபெற்ற கலந்துரையாடலில் 'பிரிந்து போனவர்கள் உண்மைநிலை புரிந்து கொண்டு மீண்டும் தமிழ் தேசிய கூட்டமைப்புடன் இணைந்து கொள்ளலாம்' என்ற கருத்து மிக சாதகத் தன்மையை வெளிக்காட்டுகிறது. இது சிங்களத்திற்கு மேலும் எரிச்சலை உண்டாக்கும். அதாவது, சிங்களம் எதிர் பார்த்தபடி தமிழ் கட்சிகளின் பிளவுகள் நீடிக்க வாய்ப்பில்லை என்ற காரணமாக அமையலாம். இதை நசுக்குவதற்கு வேறுபட்ட விபரீத செயற்பாடுகளுக்கு செல்வது சிங்களத்திற்கு அவசியமானது அவசரமானதாகவும் படலாம்.
வழமையாக சிங்களம் காலா காலமாக தனது கையாலாகாத் தனத்தை பிரயோகிக்க உள்ள ஒரே வழிதான் 'நிறைவேற்று அதிகாரமாகும்' எனவே, எமது கண் முன்னால் அதுவும் இந்நாட்டின் மாவீரனாக சிங்கள மக்களால் வரித்துக் கொள்ளப்பட்ட சரத் பொன்சேகாவுக்கே இந்த நிலை என்றால்...........................
எந்தத் தடையும் தாண்டி தியாக சிந்தனையோடு எதிர்வரும் காலங்களில் தமிழ் தேசிய கூட்டமைப்பு தளராமல் மிக உறுதியாக தனது பாதையில் பயணிக்க வேண்டுமென அனைத்து தமிழ்மக்களாலும் எதிர்பார்க்கப்படுகிறது.
அதற்கான முழு பலத்தையும் தளத்திலும், புலத்திலும் ஏன் உலகத்தமிழர்களும் தலைவர்களும் சகல பேதங்களையும் புறம்தள்ளி கைகொடுக்க ஒன்றிணைய வேண்டும் என்பது காலத்தின் தேவையாகும்.
மல்லிகையூரான்
கருத்துகளுக்கு: info@thanall.com
காலை விடியலில் வழமைபோல் தொலைபேசி மணி இன்றும் (12.3.2010) கிணு கிணுத்தது. சமூக சேவையில் தன்னை ஈடுபடுத்திக் கொள்ளும் ஒரு அன்பர் நாட்டு நடப்பையும், பலதும் பத்தையும் வழமைபோல் சிலாகிக்கத் தொடங்கினார்.
'வட்டுக்கோட்டை தீர்மானமும் - நாடுகடந்த தமிழீழமும்' என்ற தலைப்பில் பரஸ்பரம் கருத்துக்களை பரிமாறிக் கொண்டோம். மேலும்,
தமிழ் தேசிய கூட்டமைப்பின் பிளவு தொடங்கி அண்மைக்கால இலங்கைத் தேர்தல்கள், புலம்பெயர் நாடுகளின் தேர்தல்கள் அடங்கலாக உரையாடலின் உள்ளடக்கம் அமைந்திருந்தது.
அதிலும் குறிப்பாக, சில தினங்களுக்கு முன்னர் இணையதளங்களில் வெளியான 'வட்டுக்கோட்டைக்கும் நாடுகடந்த தமிழீழத்திற்கு'மான கருத்து முரண்பாடுகள் எமது காயங்களை ஆற்றுப் படுத்தாமல் கொழுந்து விட்டெரியப்பண்ணிக் கொண்டிருந்தது.
எமது தமிழ் சாதியின் ஒற்றுமையீனத்தை எண்ணி கசந்து கொண்டோம். தமிழீழம் பெறுவதிலே எமக்குள்ள ஒற்றுமையீனத்தையும், தமிழருக்கான உரிமைகள் வழங்கப்படக் கூடாதென்பதில் சிங்களம் காட்டுகின்ற ஒற்றுமையையும் எண்ணி வியந்து கொண்டோம்.
சம்பாஷணையை முடித்துவைக்குமுகமாக அந்த அன்பர் சுருக்கமாக கருத்துக் கூறினார்.
'ஒற்றுமையாக செயற்பட்டால் பெரும்பாலும் அது இலங்கைத் தமிழரின் குணாதிசயமாக இருக்க மாட்டாது! இது வரலாறல்லவா? ஒன்றுமட்டும் உறுதியாக சொல்லலாம். 30 வருட காலமாக அனைத்துத் தமிழர்களையும் ஒரு குடையின் கீழ் ஒற்றுமையாக வைத்திருக்கக் கூடிய சக்தி அந்த வேலுப்பிள்ளையின் மகனால் தான் முடிந்திருந்தது. இந்த நிலைக்கு கொண்டுவர அந்த 30 வருட காலமும் எத்தனை இன்னல்களுக்கு அந்த ஆள் முகம் கொடுத்திருப்பார்? எண்ணிப்பார்க்கவே முடியவில்லை. இப்போது அது சிதறிவிட்டது. இருப்பினும், அந்த 30 வருட காலம்தான் தமிழனுக்கு கிடைத்த வெற்றி! அந்தக் காலம் தான் இலங்கைத் தமிழருக்கு கிடைத்த தமிழீழம்!
இந்த நினைவுகளிலே காலத்தைக் கடத்துவோம்.
நாம் அந்த காலத்தினிலே வாழக் கொடுத்து வைத்தது ஒரு வரப்பிரசாதம்.
அதுவே பொற்காலம்.
இந்த நிம்மதி ஒன்றே போதும்! சாகும்வரை வாழ்வோம்'!
பெருமூச்சு புறப்பட்டு ஓய்ந்தது. தொலைபேசியூடாக ஆதங்கம் தெரிந்தது. உரையாடலை அன்பர் நிறைவுக்குக் கொண்டுவந்தார். இதயம் கனத்த சுமையோடு விடைபெற்றேன்.
உரையாடலை மீட்டிப் பார்க்கிறேன். எவ்வளவு உண்மை அடங்கியிருந்தது. இரணங்களின் வடுக்களில் இருந்து குருதி பீறிப் பாய்கிறது. என்ன செய்ய முடியும்?
ஒற்றுமையீனத்தால் சின்னாபின்னமாகும் எமது தமிழினத்தை இப்படியே அமைதியாக இருந்து பார்த்துக் கொண்டிருப்பதா? இதற்கான பரிகாரம் தான் என்ன? 30 வருடமாக தலை நிமிர்ந்திருந்த இனம் 'வாழைப்பூ' போல தலை தாழ்ந்து வாழ்வதா? 'தலைவன் வழி தொடருவோம்' என கோஷம் எழுப்புவதில் எந்த அளவு உண்மை இருக்கிறது? என்னுள் கேள்விகள் கோர்வையாக எழுகின்றது.
ஒன்று மட்டும் இப்போது பதிலாக தெரிகின்றது.
தமிழ்மக்கள் அனைவரும் விழிக்க வேண்டும். தெளிவு கொள்ள வேண்டும். 'புலம்பெயர் நாடுகள் அடங்கலாக ஒற்றுமைப்படாத எந்த அமைப்பையும் நாம் ஏற்றுக் கொள்ள மாட்டோம்' என உறுதியாக சபதம் எடுத்துக் கொள்ள வேண்டும். உங்களது 'பதவி மோக' சண்டைக்குள் தலைநிமிர்ந்து வாழ்ந்த எமது இனம் பலியாக முடியாது. சரி, பிழைகளை நீங்களாகவே தீர்த்துக் கொள்ளாத வரையில் தமிழ்மக்களாகிய நாம் எதற்கும் உடன்பட்டு வரமாட்டோம். இது தான் எமது தலைவன் காட்டிய வழி என உறுதியோடு தமிழீழத்தின் மேல் சத்தியம் செய்து கொள்வோம்.
வாழ்க தமிழ்! வாழ்க தமிழினம்!
தசக்கிரீவன்
ஒரு நாட்டிலே பொதுத் தேர்தல் ஒன்று ஏற்படுமாயின், அந்த நாட்டில் புதிய புதிய திட்டங்களும், சுபீட்ச வாழ்வும், புரட்சிகர மாற்றங்களும் ஏற்படுவதற்கான முன் மணியோசையாக கொள்ளலாம். ஆனால் இலங்கையை பொறுத்தவரையில், ஆளும்கட்சிக்கு எதிராக எதிர்க்கட்சியும் எதிர்கட்சிக்கு எதிராக ஆளும் கட்சியும் மாறி மாறி பழைய குப்பைகளை கிளறி சந்தியில் நின்று சண்டை பிடிப்பதே மரபாகும். தற்போது நடைபெறவிருக்கும் பொதுத் தேர்தல், கட்சிச் சண்டைகளுக்குள்ளும் தமிழ்மக்களுக்கான அடிப்படை மனித உரிமை மீறல்களை முன்வைத்து தேர்தல் பிரச்சாரம் மேற்கொள்ளுவதை காணக் கூடியதாக உள்ளது. இராணுவ ரீதியாக புலிகளை அழித்த பின்னர் நாட்டில் பொருளாதார சுபீட்சம் ஏற்படுமென தென்னிலங்கை மக்கள் கனவுகள் கண்டிருந்தனர். மாறாக விலைவாசியேற்றம் இமய உச்சமாகி விட்டது. அத்தோடு தமிழ்மக்கள் மேல் கட்டவிழ்த்திருந்த அரச பயங்கரவாதம் தற்பொழுது மேலும் அதிகமாகி விட்டது.
இடம்பெயர்ந்த மக்கள் மீளக்குடியேற வேண்டுமெனில் அரச வேட்பாளர்களுக்கு வாக்குப்பண்ண வேண்டுமென நெருக்குதல் கொடுப்பது ஒரு ஜனநாயக மீறல். இடம்பெயர்ந்த மக்கள் தற்பொழுது தங்களை முதலில் தமது சொந்த இடங்களில் குடியேற்றியபின்னர் தான் அரச வேட்பாளர்களுக்கு வாக்குப் பண்ணுவதாக வாக்குக் கொடுத்துள்ளார்கள். அது ஒரு வகையில் சிறப்பான கொள்கையாக அமையலாம். மீள்குடியேற்றமென்பது ஒரு மனிதனின் அடிப்படை உரிமையாகும். இதை அடகுவைக்குமளவு அரசுக்கு வறட்சியும், தமிழ்மக்களின் தெளிவின்மையையும் காட்டி நிற்கிறது. தமிழ்மக்களின் உரிமைகளுக்கு சார்பாக களமிறங்கும் அரசியல்வாதிகள் போட்டியரசியலை கைவிட்டு முதலில் மக்களை அரசியல் மயப்படுத்த வேண்டும். இதுவே இன்று எம்முன் நிற்கும் பெரும் சவாலாகும்.
மக்கள் அரசியல் மயப்படுத்தப்படும் பொழுது எமது நாட்டின் தமிழ்மக்கள் சார்ந்த, கடந்த - நிகழ் - எதிர் கால அரசியல் சித்தாத்தங்களை விளங்கிக் கொள்ளும் பட்சத்தில், ஓர் விடுதலைப் போராட்டத்தை பயங்கரவாதத்தின் மூலம் அழித்தொழித்த ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் பயங்கரவாத முகம் வெளியில் தெரிய அதிக வாய்ப்புகள் உண்டாகும் என்பதாகும்.
தற்போதைய தமிழ்க் கட்சிகளிடையிலான பிளவு தமிழ்மக்களிடையே உள்ள ஒற்றுமையையும், அரசியல் தெளிவையும் சீர்குலைத்து விட்டது. மிகப் பெரிய பயங்கரவாதியான ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவை சர்வதேச அரங்கிலும், சர்வதேச நீதிமன்றத்திலும் எமது படித்த கனவான்கள் கொண்டுபோய் நிறுத்துவார்களென இனவாஞ்சை கொண்ட தமிழர்கள் கண்ட கனவு பலியாது போய்விடுமோ என்ற ஏக்கம் ஆரம்பிக்க தொடங்கிவிட்டது. பிரச்சனைகள் ஓரிடத்திலிருக்க, அதை நோக்கிய நகர்வுகள் வேறிடமாக இருப்பதை அவதானிக்க கூடியதாக உள்ளது. ஆகவே இதற்கான உடனடி தீர்வுக்கான பொறிமுறையை அனைத்து தமிழ்மக்களும் கண்டுபிடிக்க ஆயத்தமாக வேண்டும். வெறுமனே தேர்தலுக்குள் மூழ்கி, காலம் காலமாக நாம் போராடிவந்த போராட்டங்களுக்கு அர்த்தமில்லாமல் செய்துவிடலாகாது. வெளியில் நிற்பவர்கள் அனைவரையும் உள்வாங்கக்கூடிய ஒரு பொது அமைப்பை உருவாக்கும் பலம் புலம்பெயர்வாழ் தமிழ்மக்களிடமே உள்ளது. தேர்தல் முடிந்த கையோடு வெற்றி தோல்விகளுக்கப்பால், மனக்கசப்புகள் மேலெழுவதற்கு முன், ஓர் புலம்பெயர் நாட்டிற்கு அனைவரையும் அழைத்து புலம்பெயர் வாழ் புத்திஜீவிகள் பிரசன்னத்தில் உலகப்பயங்கரவாதிகளில் ஒருவரான மகிந்த ராஜபக்சவை சர்வதேச நீதிமன்ற குற்றவாளிக் கூண்டில் ஏற்றுவதற்கான ஒரு ஆரோக்கியமான திட்டமிடல் ஒன்றை ஏற்படுத்த வேண்டியது கட்டாய கடமையாகும்.
இதற்காக என்னவிலை கொடுத்தேனும், நேர்த்தியான, ஒற்றுமையான, ஒழுங்கமைக்கப்பட்ட ஓர் அமைப்பு புலம்பெயர் மக்கள் மத்தியில் உருவாக்கப்பட வேண்டும். அதனூடாக பிரதான எடுகோளாக மகிந்த ராஜபக்சவை பயங்கரவாதியாக சர்வதேசத்துக்கு வெளிக்காட்ட வேண்டும். இதுவே எமது தாயகத்து மக்களுக்கு நாம் புலம்பெயர்வாழ் மக்கள் செய்யும் பிராயச்சித்தமாகும்.
தசக்கிரீவன்
ஒரு பழைய சம்பவம் நினைவுக்கு வருவதை தவிர்க்க முடியாதுள்ளது.
தி. மு. க. விலிருந்து புரட்சித் தலைவர் M.G.R. பிரிந்து சென்று அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தை ஸ்தாபகம் செய்து அவர் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்ட பொழுது அதன் கருப்பொருளாக அமைந்திருந்தது 'என்னை ஏன் கருணாநிதி வெளியில் விட்டார்? நான் செய்த குற்றம் என்ன? இதற்கான பதிலை மக்கள் எதிர்வரும் தேர்தலில் அணியணியாக சென்று இரட்டையிலைச் சின்னத்திற்கு வாக்களிக்க வேண்டும்' என்பதேயாகும். தமிழ் தேசிய கூட்டமைப்பில் இருந்து பிரிந்துசென்ற பாராளுமன்ற உறுப்பினர்களின் நிலையும் இதேபோன்றுதான். அன்றைய தேர்தலில் M.G.R. இன் பக்கம் மக்கள் வெள்ளம் திரண்டு நின்றிருந்தது. அதைத் தளமாக கொண்டு, பிரிந்துசெல்வதால் கூடிய நன்மையுண்டு எனக்கருதி அதை வாய்ப்பாக பயன்படுத்திக் கொண்டார். ஆனால் தமிழ் தேசிய கூட்டமைப்பிலிருந்து பிரிந்து சென்றவர்களுக்கு மக்கள் அவர்கள் பக்கம் இல்லை.
கூட்டமைப்புத் தலைமைகளில் ஒருவரான இரா. சம்பந்தனை மட்டும் குறை கூறிக்கொண்டு பிரிந்து செல்வது தேசியத்துக்கு செய்யும் கேடாகும். அதற்காக இரா. சம்பந்தனின் பரிபாலனம் சிறப்பானதென்று கூறவரவில்லை. கண்ணில் தூசு விழுந்தால் கண்ணைப் பிடுங்கி ஏறிவது வழக்கமல்ல. தூசைப் பிடுங்கி எறிவது நியாயம் ஆகும். தேசியத்தை நேசிப்பவர்களாக இருப்பவர்களாயின், தேர்தல் காலங்களுக்கு முன்னதாகவே பொதுக் குழுவைக் கூட்டி அல்லது பொதுக் குழு கூடும் ஒரு சந்தர்ப்பத்தை பயன்படுயத்தி தலைமையை மாற்றுவது அல்லது திருத்துவது போன்ற நடவடிக்கைகளை மேற்கொண்டிருத்தல் வேண்டும். உள்ளிருந்து கொண்டே போராடி ஒரு முடிவு கண்டிருந்தால் மக்கள் பலம் நியாயத்தின் பக்கம் சாய்ந்திருக்கும். வேறொரு சுயநலக் காரணத்தை மனதில் அடித்தளமாக வைத்துக்கொண்டு சம்பந்தனை சாட்டாக சொல்லி விலகிச் செல்வது தமிழ் தேசியத்தை நாசம் செய்வதோடு மட்டுமல்லாது பிரதேச வாதத்தைக் கூட கிளப்பிவிட இடமுண்டு.
எதிர்வரும் தேர்தல் உண்மையாக தேசியத்தை நேசித்தவர்கள் யார் என்பதை காட்டும் கண்ணாடியாக அமையப்போகின்றது. மக்கள் தெளிவோடுதான் இருக்கிறார்கள் என்பதற்கு மாற்றுக் கருத்தில்லை. ஏனெனில் இதேபோன்று E.P.D.P. , E.P.R.L.F. வரதர் அணி போன்றவை தேசியத்திற்கும் விடுதலைப்புலிகளுக்கும் மாறாக கிளம்பியிருந்தபோதும் வடகிழக்கு தமிழ்மக்களின் உணர்வுகளுக்கு முன்னால் காட்டு வெள்ளத்தில் அள்ளுண்டு போவதுபோல் காணாமல் போய்விட்டார்கள். இம்முறை தேர்தலில் E.P.D.P. தமிழீழ தலைநகரில் கால் பதிக்கவே முடியாமல் போயிற்று. இதே நிலை தமிழ் தேசியக் கூட்டமைப்பில் இருந்து பிரிந்து சென்றவர்களுக்கும் வாய்ப்புக்கள் அதிகம். இருப்பினும் ஒரு சில தேசிய உணர்வாளர்கள் மக்களோடு இல்லை என்ற ஓர் இனம்புரியாத நெருடல் தமிழ்மக்கள் மத்தியில் உள்ளதென்பதை மறுக்க முடியாது. இவர்களையெல்லாம் உள்வாங்க முடியாமல் போனது துரதிஸ்டம் தான். கால ஓட்டத்தில் பழமையான பகைகளைஎல்லாம் மறந்து தேர்தல் பெறுபேறுகளுக்கப்பால் ஒன்றிணைந்து தமிழ்மக்களை வழிநடத்தி செல்லவேண்டும் என்பதுதான் பேரவா.
மல்லிகையூரான்
இலங்கையிலே பொதுத் தேர்தல் சூடு பிடிக்க ஆரம்பித்துள்ளது. பாராளுமன்ற உறுப்பினர்களின் தெரிவில் பொதுமக்கள் காட்டும் ஆர்வத்தை விட, வடகிழக்கிலே தமிழ் தேசிய கூட்டமைப்பு உடைந்ததன் பின் தேர்தல் பெறுபேறுகள் எப்படி அமையப்போகின்றது என்பதில் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச காட்டும் ஆர்வம் மிக அதிகம் எனலாம். 'புது முகங்களுடன் தேசிய இனப்பிரச்சனை சார்பாக பேச ஆயத்தமாக இருக்கின்றேன்' என்ற அவரின் அறைகூவல், புதுமுகங்களை என்ன வழிப்படுத்தியேனும் தன்வலைக்குள் சிக்க வைக்கும் உபாயத்தை மறைமுகமாக கூறி நிற்கிறது . இந்த விடயத்தில் தமிழ் வாக்காளர்கள் மிக நிதானமாக செயற்பட்டு, தேசியத்திற்காக தம்மை முழுமையாக அர்பணிப்பவர்களை தெரிவு செய்து பாராளுமன்றம் அனுப்புவார்கள் என்பதில் எள்ளளவும் ஐயமில்லை.
குறிப்பாக, அரசியற் தளத்திலிருந்து சம்பந்தனை வெளி ஏற்றுவதற்கான பெரும் முயற்சிகள் நடந்துகொண்டிருப்பதை அவதானிக்கக் கூடியதாக இருக்கின்றது. ஆரம்பக்கட்ட முயற்சிகள் சிங்களத்திற்கு தோல்வியைத் தந்தாலும், திருக்கோணமலை மாவட்ட தேத்தல் களத்தில் சம்பந்தனைத் தோற்கடிப்பதற்கான பெரும் முயற்சிகள் மேற்கொள்வதை சொல்லியாக வேண்டும்.
திருக்கோணமலையிலே மகிந்தாவின் ஐக்கிய சுதந்திர முன்னணியில் போட்டியிடுவதற்காக பல தமிழர்கள் நேர்முகப்பரீட்சைக்கு தோற்றி 'வெறும் வாயை அரைத்துக் கொண்டு' வீடு திரும்பிய நிலையை மீட்டிப்பார்த்தல் அவசியம். நேர்முகப் பரீட்சை என்பது ஏதோ பெரிய மலையை வேரோடு சாய்ப்பதற்காக அல்ல, வெறும் கண்துடைப்புக்காகவே என்பதை பலர் புரிந்துகொள்ளவில்லை. தமிழர் ஒருவர் அப்பட்டியலில் இடம்பெறுவாரெனில் அந்த தமிழருக்கு விழும் தமிழ் வாக்குகள் அவரை பாராளுமன்ற உறுப்பினராக்க போதாது. இதனால் முஸ்லீம் பிரதிநிதித்துவம் அதிகரிக்க இடமுண்டு. அரசுக்கு அதுவல்ல பிரச்சனை. அமைச்சர் புஞ்சிநிலமையை திருக்கோணமலை பாராளுமன்ற உறுப்பினராக கொண்டு வருவதே முக்கிய கருதுகோள்.
மூதூர் கிழக்கு மீள்குடியேற்றத்தை மையப்படுத்தி புஞ்சிநிலமை செய்யும் பிரச்சாரம் பெரும் அதிர்வை காட்டி நிற்கின்றது. குறிப்பாக, தனக்கு வாக்குப்பண்ணாத மூதூர் கிழக்கு மக்கள் மீள்குடியேற்றம் செய்யப்பட மாட்டார்கள் என்ற கதையைக் கட்டவிழ்த்து வாக்குத் தேடுவதில் ஈடுபட்டுள்ளார்கள். இதனால் ஓர் குறிப்பிட்டளவு தமிழ் வாக்குகள் அவருக்கு விழுவதை தவிர்க்க முடியாது. இதற்கான எதிர்ப்பிரச்சாரத்தை தமிழ் தேசியக்கூட்டமைப்பின் தலைமை வேட்பாளர் இரா சம்பந்தனால் வைக்க முடியாமை நிதர்சனம்.
மாவிலாறுப் பிரச்சனையில் மூதூர்கிழக்கு மக்கள் இடம்பெயர்ந்திருந்தபோது திருக்கோணமலை பாராளுமன்ற உறுப்பினர்களின் நடவடிக்கைகள் புஞ்சிநிலமைக்கு சிறிதளவு சாதகத்தன்மையை ஏற்படுத்த இடமுண்டு. மேலும் மே மாத வன்னி யுத்தத்தின் போது பாதிக்கப்பட்ட மக்களை அவர்கள் இடத்தில் சென்று பார்வையிடுவதில் கூட்டமைப்புத் தலைமகள் காட்டிய அக்கறையின்மை, சக வன்னிப் பாராளுமன்ற உறுப்பினர் சதாசிவம் கனகரட்னம் தடுப்புக்காவலில் இருந்தபோது பாராமுகத்தன்மயையும், 12 பாராளுமன்ற உறுப்பினர்களின் வெளியேற்றமும் இவற்றிக்கு துணை போகலாம்.
இவைகளையெல்லாம் மறுதலித்து எதிர்வாதம் செய்வது ரொம்ப கடுமையான பணி. இருப்பினும் மக்கள் தேசியத்தில் இருந்து விடுபடவில்லை என்பது யதார்த்தம். எது எப்படியாயினும் திருக்கோணமலைக்கு இரா சம்பந்தன் பாராளுமன்ற உறுப்பினராக வரவேண்டியது காலத்தின் கட்டாயம். இதை திருக்கோணமலை மக்கள் நன்கு உணர்ந்துள்ளார்கள் என்பதை மறுப்பதற்கில்லை பிரச்சாரங்களுக்கப்பால், விடுதலைப்புலிகளால் விதைத்துச் சென்ற தேசியம் சுயநிர்ணயம் தன்னாட்சி இவைகளில் இருந்து திருக்கோணமலைத் தமிழ் மக்கள் தடம்மாற மாட்டார்கள் என்பது உறுதி.
மலையூர் பண்ணாகத்தான்
கடந்த சில தினங்களுக்கு முன் தமிழ் இணையத்தளங்களில் வெளியான 'தமிழ் தேசியத்திற்கு பொறிவைக்கும் இலங்கை புலனாய்வுத்துறை' என்ற அரசியல் கட்டுரை பெரும் அதிர்வைத் தந்துள்ளது. தேசியத்தலைவர் பிரபாகரனினால் சுதுமலையில் ஆற்றிய உரையில் 'எப்போது தனித் தமிழீழக் கொள்கையை கைவிடுகின்றேனோ அன்றே என்னை சுட்டுக்கொல்ல வேண்டும்' என்ற வாசகம் இன்றும் எம்மனங்களில் இருந்து மறையாமல் உள்ளது.
ஈழப்போராட்டத்தின் ஆரம்ப வரலாற்றில் 'தமிழ் புதிய புலிகள்' என்ற அமைப்பு 1976 ம் ஆண்டு தலை தூக்கி இருந்தது. 'தம்பி' என்ற செல்லப் பெயரோடு தலைவர் பிரபாகரன் அதனுள் இருந்த காலம் அது. அவ்வமைப்பின் ஆரம்பமாக நான்கு பிரதான கட்டளைகள் உருவாக்கப்பட்டு சத்தியப்பிரமாணம் எடுத்துக் கொண்டதை மீட்டிப்பார்த்தல் பொருத்தமாகும்.
அதில் முக்கியமாக
* இலங்கை அரசுக்கெதிரான ஆயுதப்போராட்டம்
* தமிழீழம் கிடைத்தபின் இயக்கம் கலைக்க வேண்டும்
* புலிகள் அமைப்பில் இருந்து விலகி வேறு அமைப்புகள் உருவாகினாலோ எந்தவிதத்திலும் அரசுக்கு துணை போனாலோ மரண தண்டனை வழங்கப்படும்.
* காதல், பாசம் இயக்க நடவடிக்கைகளுக்கு இடையூறாக இருக்கக்கூடாது.
அமரர் சிவகுமாரின் மூலம் அறிமுகப்படுத்தப்பட்ட சயனைட் வில்லை உட்கொள்ளுதலானது அமைப்பின் உறுதித்தன்மையையும், நம்பகத்தன்மையையும் சர்வதேச மட்டம் வரை உயர்த்தியிருந்தது. அதன்பிறகான வளர்ச்சிக் காலம் மிக உச்சத்தை அடைந்து தமிழீழ விடுதலைப்புலிகளாக தோற்றம் பெற்று கட்டுப்பாட்டுடன் இருந்து வந்ததென்பது அனைவரும் அறிந்த விடயம். இந்த நிலையில் ஊடகங்கள் ஊடாக வெளியான மேற்படி செய்தியை ஒப்பு நோக்குகையில் உயிருடன் இராணுவத்திடம் பிடிபட்ட விடுதலைப்புலிப் போராளிகளின் நடவடிக்கைகள் தலைகீழாக மாறியிருப்பதை அவதானிக்கையில் அருவருப்பாக உள்ளதை உணரக்கூடியதாக உள்ளது.
வன்னி யுத்தத்தின் பின்னராக இலங்கைப் படையினரால் கைதுசெய்யப்பட்ட விடுதலைப்புலிகளின் உறுப்பினர்கள் தற்போது இராணுவத்தின் கையாட்களாக இயங்கி புலம்பெயர்வாழ் விடுதலைப்புலிகளின் செயற்பாட்டாளர்களையும், ஆதரவாளர்களையும் காட்டிக்கொடுத்தல் என்பது மகா துரோகமான செயலாகும். அதாவது இவர்களால் எடுக்கப்பட்ட சத்தியப்பிரமாணங்களின் படி நடக்கத்தவறியமை வரலாற்றுத்துரோகமும் ஆகும்.
என்னதான் நிர்ப்பந்தம் ஏற்பட்டாலும் கொள்கையோடும் கட்டுக்கோப்போடும் வழிநடத்தப்பட்ட விடுதலைப்புலிப் போராளிகள் தடம்புரளலாகாது. ஒட்டுமொத்தமாக அரசாங்கத்தின் ஒட்டுக்குழுக்களுக்கும் இவர்களுக்கும் வித்தியாசம் இல்லாமல் போய்விடும். ஏற்கனவே எழுதப்பட்ட கட்டளையின் பிரகாரம் அரசோடு நின்று காட்டிக்கொடுப்பவர்களுக்கு துரோகிப் பட்டமும் மரண தண்டனையும் ஆயின் உயிருடன் பிடிபட்ட போராளிகள், அமைப்பின் கட்டளைகள் எதைக்கூறுகின்றதோ அதன்படி நடந்திருக்க வேண்டும். ஆசா பாசங்களுக்கு தம்மை உட்படுத்திக் கொண்டு இலங்கை புலனாய்வுப் பிரிவின் அட்டவணையின்படி இயங்குவதானது மன்னிக்க முடியாத மாபெரும் குற்றமுமாகும்.
சுயநலத்திற்காக மாறியவர்கள் என்ற வரிசையில் காட்டிக்கொடுத்தவர்கள், அரசுக்கு சோரம் போனவர்கள், ஒட்டுக்குழுக்கள் போன்றவர்களின் செயற்பாடுகள் துரோகத்தனமென இனம்கண்டு விடுதலைப்புலிகளால் மரண தண்டனை வழங்கப்பட்டவர்களின் காரணங்கள் இப்போது நியாயப்படுத்தப்படலாம்.
எனவே, 'தலைவன் இட்டவழியே எம்வழி' என்று உலகத்திற்கு முன்மாதிரியாக வாழ்ந்து காட்டிய போராளிகள் எந்த இன்னல்கள் வந்தாலும் இலட்சிய வழி மாறாது தமது போரியல் குணங்களை வேட்கையுடன் வெளிப்படுத்தும் போதுதான் தலைவன் என்றும் எம்மோடு வாழ்ந்து வழி காட்டுகின்றான் என்ற கொள்கை உறுதி பெறும். இதுவே தமிழுக்கும் தமிழ் மண்ணுக்கும் நீங்கள் ஆற்றும் இலட்சியப்பணியாக அமையும் என்பதில் ஐயம் இல்லை.
வாழ்க தமிழ்! வாழ்க தாயகம்!
மல்லிகையூரான்
இலங்கையின் வடகிழக்கு மாகாணத்திலே பறிபோகக் கூடாதென தமிழர்கள் நோக்கும் பகுதிகளில் திருக்கோணமலை மாவட்டமும், அம்பாறை மாவட்டமும் பிரதானமானவை எனலாம். இத்தாயகப் பகுதிகளை சிங்களம் தனதாக்கிக்கொள்ள எடுத்துவரும் முனைப்புகள் சொல்லி மாளாது. இந்த நிலையில் சிங்களத்திற்கு வழி சமைத்துக் கொடுக்க எதிர்வரும் பொதுத் தேர்தல் வாய்ப்பாக அமையப்போகின்றது என எண்ணும் பொழுது கவலை கொள்ளாமல் இருக்க முடியாது.
2000 ம் ஆண்டு பொதுத் தேர்தலின்போது திருக்கோணமலையிலே பல புத்திஜீவிகளை உள்ளடக்கிய மகாசபை ஒன்று அமைத்து, பல கோணங்களாக பிரிந்திருந்த தமிழ் கட்சிகளை ஒரு கூரையின்கீழ் கொண்டுவருவதற்கு பல பிரயத்தனங்கள் மேற்கொள்ளப்பட்டன. 'கிளித்தட்டு' பாய்ந்து பல கட்சிகள் புறப்பட ஆயத்தமான போது இவற்றை ஒன்று சேர்க்க வேண்டுமென்ற நல்ல நோக்கத்துடன் ஓர் உணர்வாளர் உண்ணாநோன்பு அனுஷ்டித்த போதும் தமிழ் கட்சிகள் எதுவும் ஒரு கூரையின் கீழ் வர மறுத்துவிட்டன. இதனால் இரு தமிழர் ஆசனங்களை பெறவேண்டிய நிலையிருந்தும் ஒரு ஆசனம் கூட பெறமுடியாமல் போனதும், மூன்று முஸ்லீம் பாராளுமன்ற உறுப்பினர்கள் தெரிவானதும் வரலாறு. அக்காலங்களின்போது புலிகள் பொதுத் தேர்தலில் மறைமுகமாகவோ நேரடியாகவோ பங்குபெறவில்லை.
2004 ம் ஆண்டு பொதுத் தேர்தலின் போது திருக்கோணமலை மாவட்டம் இரண்டு பாராளுமன்ற உறுப்பினர்களை பெற்றிருந்ததை நினைவுக்குட்படுத்தல் அவசியம். புலிகள் பலமாக இருந்த காலத்தில் இத்தேர்தல் நடத்தப்பட்டமையால் புலிகளின் சுட்டுவிரல் அசைவின்படி மக்கள் ஒற்றுமையுடன் வாக்களித்து இரண்டு பாராளுமன்ற உறுப்பினர்கள் பெறப்பட்டது.
இம்முறை பொதுத் தேர்தலுக்காக அம்பாறை மாவட்டத்திலும் தமிழர் மகாசங்கம், தமிழ்க்கட்சிகள் அனைத்தையும் ஒரு கூரையின் கீழ் கொண்டுவருவதற்காக எடுத்த முயற்சி ஈற்றில் தோல்வியில் முடிந்தது. கட்சிகளை ஒன்று சேர்ப்பதற்கு புத்திஜீவிகள் பலர் மாகாண சபை உறுப்பினர் எஸ். புஸ்பராஜா தலைமையில் பிரத்தியேகமாக தம் காலத்தையும் நேரத்தையும் விரயம் செய்தும் எதுவித பயனும் அளிக்கவில்லை. இம்முறை தமிழ் பிரதிநிதித்துவத்தை காப்பாற்றவேண்டியது கடவுளிடம் தான் உள்ளது.
2010 ம் ஆண்டு பொதுத் தேர்தலின்போது திருக்கோணமலையிலே மகாசபையும் இல்லை புலிகளின் கட்டுப்பாடும் இல்லை. இது போன்று அம்பாறை மாவட்டத்திலும் தமிழீழ விடுதலைப் புலிகளின் கட்டுப்பாடு இல்லை. இதனால் சிதறு தேங்காய் போன்று தமிழ் கட்சிகள் தேர்தல் களத்தில் குதித்து தமிழர் பிரதிநிதித்துவத்தை இல்லாமல் செய்வதற்கு வழி அமைந்துவிடுமோ என தமிழ் உணர்வாளர்கள் ஆதங்கப்படுகிறார்கள். தமிழ் கட்சிகளின் பலப் பரீட்சைக்கு களம் அமைக்க இதுவல்ல தருணம். தமிழர் பிரதிநிதித்துவம் இழப்பதால் தமிழ்மக்களுக்கு ஏற்படப்போகும் ஒட்டு மொத்த பாதிப்புகளுக்கும் பிரிந்து நின்று 'சண்டித்தனம்' காட்டும் தமிழ் கட்சிகளே பொறுப்பாகும்.
தசக்கிரீவன்
