தேர்தல் முடிவுகள் சொல்லும் செய்தி!!

இடுகையிட்டது தணல் Dienstag, 2. Februar 2010

'கச்சையோடும் கதர் வேட்டியோடும் இருந்தால் தான் காந்திக்கு மதிப்பு'
'தலைப்பாகையோடு இருந்தால்தான் பாரதிக்கு மதிப்பு'

இதுபோல, இலங்கை அரசியலிலும் தமிழீழ விடுதலைப்புலிகள் இருந்தால் தான் டக்ளஸ் + கருணாவிற்கு மதிப்பு இருக்கும். தற்போதய புலிகளின் பின்னடைவானது இவர்களை மகிந்த அரசியலுக்குள் செல்லாக் காசாக்கி விட்டதை மெது மெதுவாக புரிய ஆரம்பித்துவிட்டது. இதற்கான 'சடுதி பல்டி' அவசியம் தேவைப்படுகிறது.

'மகிந்தா தமிழரின் மனங்களை வெல்லத் தவறிவிட்டார். மாவீரர் துயிலும் இல்லங்களை அழித்து சிங்கள மயமாக்குகின்றார்' என குற்றம் சாட்டி நழுவ முற்படும் கருணாவும், யாழ் நகரில் கடைகளை அடைக்கவைத்து 'அரசிலிருந்து இராஜினாமா செய்யப் போகிறேன்' என 'புலுடா' விட்டு அரசிலிருந்து களர திட்டமிடும் 'டக்ளஸ்' சையும் பார்க்கும் போது ஒரு புறம் நகைப்பாகவும் ஒருபுறம் பரிதாபமாகவும் உள்ளது.

எதிர்வரும் பொதுத் தேர்தலில் 'மகா கனம் பொருந்திய மகா ஜனங்கள்' தகுந்த பாடங்களை படிப்பிக்கப் போகிறார்கள் என்பதை எண்ணும்போது இவர்களின் கவலைக்கிடமான கையறுந்த நிலையை உணரக்கூடியதாக உள்ளது. இலங்கையில் தமிழ் மக்களை பொறுத்த வரையில் மகிந்தாவை நம்பிய இவர்களும், இவர்களை நம்பிய மகிந்தாவும் நடுக்கடலில் நிற்கவேண்டிய நிலை ஏற்பட்டு விட்டது.

வடகிழக்கு, மலையக தமிழ்மக்கள் தமது அரசியல் இறைமைகளில் மிகத் தெளிவாக உள்ளார்கள் என்பதை இத் தேர்தல் புலப்படுத்தியுள்ளது. மேலும் இத்தேர்தலிலே தமிழ்மக்கள் சார்பாக சரத்+மகிந்தா இருவருமே தோல்விதான். இதில் வென்றது தமிழ்+முஸ்லீம் ஒற்றுமை என்பது ஈண்டு கவனிக்கத் தக்கதாகும்.

கடந்த தேர்தலிலே தமிழ்மக்களுக்கான உரிமை வழங்குவதில் இம்மியளவும் அசையக் கூடாதென்ற ஆணையை சிங்கள மக்கள் சிங்களத் தலைமைக்கு (மகிந்தா) வழங்கியுள்ளார்கள். அதேபோன்று தமிழருக்கான நியாயமான தீர்வை வழங்க வரும் சிங்களத் தலைமையை அல்லது தமிழ்மக்கள் எதோ ஒரு அழுத்தத்தில் ஏற்றுக்கொள்ளும் சிங்களத் தலைமையை சிங்கள மக்கள் நிராகரிப்பார்கள் என்பதற்கு சிறந்த உதாரணமாக 'பொன்சேகாவின்' தோல்வி மிக வெளிப்படையாக தெரிகிறது. இதனால் தமிழ்மக்கள் பிரிந்து வாழுவதற்கான ஆணையை இந்தத் தேர்தலினூடாக தேசியத்தை நேசிக்கின்ற சக்திகளுக்கும், சர்வதேசத்துக்கும் சொல்லப்பட்டாயிற்று.


இவற்றிற்கு உதாரணமாக, வடகிழக்கு தேர்தல் பெறுபேறுகளை உற்று நோக்குகையில் சிங்கள மக்கள் தமது அரசியல் போக்கில் மிகத் தெளிவாக உள்ளதையும் காணக் கூடியதாக இருந்தது. கடந்த ஜனாதிபதித் தேர்தலிலே கள்ளவாக்குகள் நீங்கலாக ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச வெற்றிபெற்ற தொகுதிகளைப் பார்க்கையிலே அவை பெரும்பான்மை சிங்கள வாக்காளர்களைக் கொண்ட தேர்தல் தொகுதிகளாகவே உள்ளதைக் காணலாம்.

திகாமடுல்ல மாவட்டத்தை எடுத்துக் கொண்டால் அம்பாறை தேர்தல் தொகுதியிலே அதிகூடிய சிங்கள மக்கள் பெரும்பான்மையாக வாழ்கிறார்கள். அங்கே மகிந்த ராஜபக்சவுக்கு அதிகப்படியான வாக்குகள் கிடைத்துள்ளது. (மாவட்டத்திலே மகிந்தா தோல்வி)
மகிந்த ராஜபக்ச பெற்ற வாக்குகள் : 73,389
சரத் பொன்சேகா பெற்ற வாக்குகள் : 32,895

திருக்கோணமலை மாவட்டத்திலே அதிகூடிய சிங்கள வாக்குகளைக் கொண்ட தொகுதி 'சேருவில' ஆகும். (மாவட்டத்திலே மகிந்தா தோல்வி)
மகிந்த ராஜபக்ச பெற்ற வாக்குகள் : 27,932
சரத் பொன்சேகா பெற்ற வாக்குகள் : 15,260

யாழ்ப்பாணத்திலே கடற்படை வீரர்களையும், தரைப்படைத் தளத்தையும் கொண்ட சிங்கள வாக்காளர்கள் கூடிய தேர்தல் தொகுதி ஊர்காவற்றுறையாகும் (யாழ் மாவட்டத்திலே மகிந்தா தோல்வி)
மகிந்த ராஜபக்ச பெற்ற வாக்குகள் : 4611
சரத் பொன்சேகா பெற்ற வாக்குகள் : 3976

இவையானது வடகிழக்கில் சிங்கள பேரினவாதிகளின் எண்ணப் பாங்கை வெளிப்படுத்தும் வாக்களிப்புகளாகும். இதையே முழு இலங்கையையும் பார்க்குமிடத்து சிங்கள மக்கள் மிக தெளிவான செய்தியைச் சொல்லியுள்ளார்கள்.

இலங்கைத் தமிழ்மக்களுக்கு சுதந்திரமான இறைமையுள்ள எந்தத் தீர்வையும் தரப்போவதில்லை என்றும், தமிழ்மக்களுடன் இணைந்து வாழ்வதற்கான (சிங்கள மக்களுக்கு அடிமைகளாக வாழல்) எந்த சாத்தியப்பாடும் இல்லை என்பதுமாகும்.
இதேபோன்று, தமிழ்மக்கள் இத்தேர்தலூடாக செய்தியை சொல்லியுள்ளார்கள்.
இலங்கை தேசத்தினுள் சொந்த வாழ்வியல் கொண்ட நிலம், இனம், கலாசாரம் கொண்ட தனித்துவ அடையாள இனமான தமிழர் வேறாக சுதந்திரமாக வாழ்வதுதான்.

ஆகவே, இரு பெரும் இனங்களும் இணைந்து வாழ முடியாதென்ற ஒரே செய்தியை கூறியுள்ளமையால் இனங்களின் விருப்பத்திற்கமைய உரிய நடவடிக்கைகளை மேற்கொள்வதில் (ஐக்கிய நாடுகள் சபை) சர்வதேசத்திற்கு எந்தப் பிரச்சினையும் இருக்காது.

தசக்கிரீவன்

0 கருத்துரைகள்

Kommentar veröffentlichen

Subscribe

Blog-Archiv