தனக்கு எதிரான கட்சிகளை இல்லாதொழிப்பதில் ஜனாதிபதி மகிந்தாவுக்கு நிகரானவர் எவருமில்லை எனலாம். தமிழ் தேசிய கூட்டமைப்பின் பிளவுக்கு அவரின் பங்களிப்பு மிகுதியாக இருப்பதை உணரக்கூடியதாக உள்ளது. இந்த வேட்டையில் முதன் முதலாக சிவநாதன் கிஷோரை தனது தாயக் கட்டையாக்கி நகர்த்த ஆரம்பித்தது இன்றுவரை வெற்றியாக அமைந்தது.
எதிர்வரும் 2010 ம் ஆண்டு பொதுத் தேர்தலை நோக்கினால், வடகிழக்கில் மாவட்ட ரீதியான தமிழ் தேசிய கூட்டமைப்பு வேட்பாளர் தெரிவுகளில் முதன்மை வேட்பாளர்களின் விருப்பிலே முழுமையாக தங்கியிருந்ததை அறியலாம். குறிப்பாக தமிழ் தேசிய கூட்டமைப்பில் இணைந்திருப்பதாக கூறும் தமிழரசுக்கட்சி, ரெலோ, E.P.R.L.F, தமிழ் காங்கிரஸ்(அ. விநாயகமூர்த்தி) போன்ற கட்சிகள் தம் சுய அடையாளங்களை வேட்பாளர் பட்டியலினுள் தவற விட்டுவிட்டன. யாழ் மாவட்டத்தை எடுத்துக் கொண்டால், மாவை சேனாதி ராஜாவின் ஆளுமையில் சுரேஸ் பிரேமச்சந்திரனின் ஆலோசனையில் தெரிவு நடைபெற்றிருப்பதைக் காணலாம். தன்னை தமிழ்காங்கிரஸ் என அ. விநாயகமூர்த்தி கூறிக்கொண்டாலும் அது எடுபடுவதாக அமையாது.
E.P.R.L.F என்ற அடையாளத்தை விட சுரேஸ் பிரேமச்சந்திரன் என்ற தனி நபருக்கான அடையாளமே அதிகமாகும். அதேபோன்று திருக்கோணமலை மாவட்ட தெரிவும் இரா. சம்பந்தன் தலைமையே கோலோச்சி நிற்பதை அவதானிக்கலாம். அங்கே ரெலோ, E.P.R.L.F போன்ற ஏனைய கட்சிகளின் ஆளுமையைக் காணவில்லை.
மன்னாரில் செல்வம் அடைக்கலநாதனின் தெரிவு மிகுதியாக இருப்பதால் தமிழரசுக்கட்சி அடங்கலாக ஏனைய கூட்டுக் கட்சிகளின் ஆளுமைகளும் கரைந்துவிட்டதை காணலாம்.
இதே சாயலாக மட்டக்களப்பு, அம்பாறை மாவட்டங்களின் பட்டியல் தெரிவு உள்ளதை அவதானிக்கலாம்.
இதில் சிங்களத்திற்கு கிடைத்த வெற்றி என்னவென்றால், தமிழ் தேசிய கூட்டமைப்பின் பிளவு மட்டுமல்ல, கூடவே கூட்டுக்கட்சிகள் தத்தமது அடையாளங்களை தொலைத்துக் கொண்டதுமாகும். இதனிடையே சிவாஜிலிங்கம் அணி, தமிழ் காங்கிரஸ்(கஜேந்திரகுமார்) அணி என இரு அணிகள் பிளவுபட்டது, மேலும் பின்னடைவை தரப்போகிறது. (இச் சந்தர்ப்பத்தில் விடுதலைப்புலிகளின் கட்டுக்கோப்பை மீள்நினைவுக் குட்படுத்துதல் அவசியம்)
இந்த நிலையில், எதிர்வரும் பொதுத் தேர்தலில் தமிழ்க் கட்சிகளின் கருப்பொருளாகவும் , பேசு பொருளாகவும் எது அமையப்போகிறது என்பதுதான் கேள்வி.
கடந்த ஜனாதிபதித் தேர்தலில் மகிந்தா-சரத் போட்டியில் முன்வைக்கப்பட்டது யுத்த வெற்றியே ஆகும். இருப்பினும் அதை நடத்தியவருக்கா, செயற்பட்டவருக்கா நன்றி செலுத்த வேண்டும் என்ற தென்பகுதி மக்களின் நிலைப்பாட்டில் மகிந்தாவுக்கு கூடிய நன்றிகளை தெரிவித்தனர். ஆனால் இறந்த படைவீரர்களின் சேவை பற்றி பேசப்பட்டது குறைவாகவே காணப்பட்டது.
இதுபோல, தற்போது களமிறங்கியுள்ள தமிழ் தேசிய கூட்டமைப்பு உட்பட அனைத்து தமிழ் கட்சிகளின் கருப்பொருளாகவும், பேசு பொருளாகவும், விடுதலைப்புலிகளின் பின்னடைவை மறந்தும் வாய்திறக்க மாட்டார்கள். ஆனால், மாவீரர்களின் தியாகங்கள் பற்றி விலாவாரியாக வெளுத்து வாங்குவார்கள் என்பது உறுதி. அதுவே கருப்பொருளாகவும் அமையும். இதற்காக தமிழ்மக்கள் தமது தேசியத்தின் உணர்வுகளை வெளிப்படுத்த எந்த தமிழ் அமைப்பை தேர்ந்தெடுக்கப் போகிறார்கள் என்பதில் தான் வெற்றி தங்கியுள்ளது.
எது எப்பிடியாயினும், கடந்த காலங்களைப் போல வடகிழக்கை விடுதலைப்புலிகள் ஒரு குடையின் கீழ் கொண்டு வந்தது போல் இம்முறை வாக்களிப்பு பலம் சாத்தியமாக அமையாது. சுரேஸ் பிரேமச்சந்திரன் கூறுவதுபோல் தமிழ் தேசிய கூட்டமைப்பு 20 ஆசனங்களைக் கைப்பற்றும் என்ற ஆரூடம் பிழைக்கப் போகிறது.
தமிழ் கட்சிகளின் பிளவு, தமிழ்மக்களின் மனங்களிலிருந்த மாவீரர் தியாகங்களையும், தேசியத்தையும் மறக்கடிக்கப்பட்டு விடுமோ என்ற பயம், தமிழ் உணர்வாளர்களுக்கு ஏற்பட்டுள்ளதை உணர்தல் அவசியம்.
பிரச்சார மேடையில் ஒருவரை ஒருவர் கொச்சைப் படுத்தாத நாகரீக அரசியலை செய்யாவிடின், ஒட்டு மொத்தமாக சிங்களம் கண்ட கனவு பலிதமாகி விடும்.
மலையூர் பண்ணாகத்தான்
அண்மையில் ஊடகம் வாயிலாக தமிழ்மக்களுக்கு விடுத்த ஒரு மொட்டைக்கடித அறிக்கையைப் பார்க்க நேர்ந்தது. புத்திஜீவித் தனமாக எழுதப்பட்டதாக கூறிக்கொள்ளும் சிலரின் கருத்து, கடந்த சில தினங்களுக்கு முன்னர் இலங்கையின் தேச நிர்மாண அமைச்சர் கருணா என அழைக்கப்படும் முரளிதரன் அவர்களின் அறிக்கையை சார்ந்திருப்பதாக தெரிகிறது. இதே தோரணையில் அவரின் கருத்தானது 'தமிழ் முஸ்லீம் மக்கள் ஒன்றிணைந்து புத்திசாலித் தனமான தீர்வை எடுக்க வேண்டிய காலம் இது' என கூறியிருந்தார். வெறுமனே தேர்தலுக்காக கூட்டமைக்கும் சம்பிரதாயம் கருணாவில் இருந்து மறையவில்லை என்பது வியக்கத்தக்க விடயம் அல்ல. ஆனால், புத்திஜீவிகளில் இருந்து இன்னமும் மறையாமல் அல்லது வேண்டுமென்றே மறைவதுபோல் பாசாங்கு செய்வது புத்திஜீவிகளைப் பொறுத்தவரையில் விசனத்துக்குரியது.
சொந்தப் பெண்டாட்டியா? அல்லது வைப்பாட்டியா? நீண்ட காலத்துக்கு நிரந்தரமென்பது புரிதலுக்கு உட்படுத்தப்படவேண்டியது. அதாவது தமிழ் கட்சிகள் உட்பட முஸ்லீம் தமிழ் மக்கள் அடங்கலாக ஒற்றுமைப்படல் வேண்டுமென்பது உண்மையே. அது எந்த அடிப்படையில் என்பதுதான் கேள்வி. தமிழ்மக்களுக்கான தேசியம், சுயநிர்ணயம், தன்னாட்சி ஆகியவற்றில் ஒற்றுமைப்பட கோரும் கட்சிகளின் நிலை எவ்வாறு இருக்கும்? வெறுமனே தேர்தல் கூட்டு நிரந்தரமற்றது.
மூன்று தசாப்தங்களுக்கு மேலாக கட்டி எழுப்பப்பட்ட தேசிய அபிலாசைகளான தேசியம், தன்னாட்சி, சுயநிர்ணயம் பேணிப்பாதுகாக்கக் கூடிய தீர்வென்பது நிரந்தரமானது. இந்த அடிப்படையில்தான் ஒற்றுமை மலரல் வேண்டும்.
தீர்வு பற்றி ஊடகங்களுக்கு அறிக்கைவிடும் புத்திஜீவிகள் எழுந்த மானமாக போதிப்பதை விடுத்து தீர்வை குறித்துரைத்து அறிக்கையிடுதல் ஆரோக்கியமானது. மேலும் புத்திஜீவிகளின் கட்டுரையில் 'போருக்குப்பின் தமிழர்களின் நிலைபற்றி' குறித்திருப்பது தமிழ்மக்களின் தெளிவான நிலையை கட்டுரையாளர்கள் புரிந்துகொள்ளவில்லை என்பதை வெளிப்படுத்தி நிற்கிறது. தமிழ்மக்களின் இத்தனை அழிவிற்குப் பின்னரும் தமிழ்மக்களின் குரலாக வடகிழக்கு, மலையகம் உட்பட வாழும் தமிழ்மக்கள் தமிழ் தேசிய கூட்டமைப்பை அரசேற்றிருப்பது கவனிக்கத் தக்கதாகும். துயரங்களின் வெளிப்பாட்டைவிட தேசியத்தில் தமிழ்மக்கள் கொண்டிருக்கும் பற்றுறுதியை தமிழ்மக்கள் காட்டியிருப்பதை புரிந்துகொள்ளல் வேண்டும். கூட்டமைப்பு அங்கத்தினர் சிலர் கொள்கைகளுக்கு மாறுபாடாக நடந்திருந்தாலும் ஒட்டுமொத்தமாக கூட்டமைப்பே நடந்துகொண்டு விட்டதென்ற முடிவுக்கு வந்துவிடலாகாது.
கட்டுரையாளரின் 'போருக்குப் பின் தீர்வு எட்டப்படவில்லை' என்ற கருத்து எந்தவிதத்தில் சாத்தியமாகும்? தீர்வானது போர், வெற்றியின் பின் அல்லது முற்றுமுழுதான தோல்வியின் பின் ஒரு தீர்வு எட்டப்படுதல் இயல்பு. இலங்கையில் இன்னமும் தீர்வு எட்டப்படவில்லை என்பது யுத்தத்தினால் வெற்றியுமில்லை, தோல்வியுமில்லை என்ற ஜதார்த்தத்தை வெளிப்படுத்துவதோடு யுத்தம் ஒரு கொதிநிலையில் உள்ளதென்பதை காட்டிநிற்கின்றது. எனவே,
இவற்றையெல்லாம் உள்வாங்கி புத்திசாலித்தனமான, செயற்படுத்தக்கூடிய, இலகுவழியிலான, வன்முறையற்ற, தமிழ்மக்களின் இலட்சியங்கள் பாதிக்கப்படாத ஒரு தீர்வை முன்வைப்பதுதான் சாலச்சிறப்பென புத்திஜீவிக் கட்டுரையாளர்களின் சிந்தனைகளுக்கு சமர்ப்பிக்கின்றோம்.
குறைபுத்தி ஜீவிகள்
தற்போதைய தேர்தல் காலங்களில் ஊடகங்களிலே பரபரப்பாக பேசப்படும் விடயங்களில் மிக முக்கியமானது தமிழ் தேசிய கூட்டமைப்புத் தலைமை மாற்றப்பட வேண்டுமென உள்வீட்டுப் பாராளுமன்ற உறுப்பினர்கள் கோஷமிடுவது ஆகும். இந்த இக்கட்டான சூழ்நிலையில் தலைமை மாற்றம் சம்பந்தமாக ஆர்வம் காட்டுவது, இருக்கின்ற கொஞ்ச நஞ்ச தேசிய நினைப்பையும் மக்கள் மத்தியிலிருந்து அகற்றுவதற்கான முன்னேற்பாடென கருத இடமுண்டு.
தலைமையுடன் காழ்ப்புக் கொள்வதற்கு பிரதான காரணியாக கடந்த ஜனாதிபதித் தேர்தலைக் கொள்ளலாம். ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் தேசிய கூட்டமைப்பு எடுத்துக் கொண்ட முடிவுகள் பலருக்கும் பல கோணத்தில் வித்தியாசப்படலாம். குறிப்பாக தமிழ் தேசிய கூட்டமைப்பினர் ஒன்று சேர்ந்து எடுத்த 'முடிவென்பது' தான் முக்கியப்படுத்தப் படுகிறது. இவ் முடிவானது தலைமை மட்டும் பொறுப்பாக இருக்கமாட்டாது. சேர்ந்தெடுத்த கூட்டுமுடிவாக இருக்கும்.
உடன்பாடு, முரண்பாடுகளுக்கப்பால் கூட்டமைப்பு எடுத்த முடிவுக்கு கட்டுப்படுதல் என்பது கடைப்பிடிக்க வேண்டிய ஒழுங்காகும். அது, தலைமை என்ற ஒருமைத்தனம் கொண்ட தனிப்பட்ட நபர் கட்டுப்பாடாக இருக்க முடியாது. இதுபோக, ஜனாதிபதி வேட்பாளராக களமிறங்கிய சிவாஜிலிங்கத்திற்கு இறுதி முடிவெடுப்பதற்கு இறுதி நேரம்வரை காலம் கனிந்திருந்தது. சிவாஜிலிங்கத்தின் கொள்கை ஏற்றுக்கொள்ளக் கூடியதாக இருப்பினும் அது மக்கள் மயப்படுத்தப்பட்டு அங்கீகாரம் பெறாத ஒன்றாகும். அதன் பலாபலன்களை அவரின் தேர்தல் முடிவுகள் கூறியது.
காலம் கடந்து செல்லவில்லை என்பதை மனதில் கொண்டு வீட்டுக்குள் இருக்க வேண்டிய இலட்சிய வேட்கைகொண்ட பாராளுமன்ற உறுப்பினர்கள் மீண்டும் ஓட்டமுடியாத வார்த்தைகளைக் கூறி பிளவுபடுவதை தவிர்த்துக்கொள்ளுதல், தமிழ்தேசியத்தை நேசிக்கும் அனைத்து தமிழ்மக்களின் அவாவாகும்.
கூட்டாக இருக்கும் பொழுது தலைமையை ஏற்றுக்கொண்டுவிட்டு எல்லாம் சரியென தலையை ஆட்டி, இப்போது ஒழுக்காற்று நடவடிக்கையின் போது தலைமைக்கெதிராக கூச்சலிடுவது பொருத்தமாகாது. இதற்கான பரிகாரம் என்னவென்று தேடி தேசியத்தை வாழ வைப்பதற்கான வழிமுறைகளைக் காணல் வேண்டும்.
இறுதியாக ஒரு விடயம்!
தமிழ் தேசியக் கூட்டமைப்பிற்கான அங்கீகாரமானது அதனுள் அடங்கும் நபர்களைவிட ஒற்றுமையுடன் இருக்கும் கூட்டுக்குத்தான் என்பதை அனைவரும் உணர்தல் அவசியம். அதனால் தனிப்பட்ட நபர்களுக்கான செல்வாக்கைக் கருத்தில் கொண்டு பிரிந்து செல்வார்களானால் இறுதியில் மக்களால் தூக்கி எறியப்பட்டு மண்கவ்வுவார்கள் என்பது உறுதி. இதனை அனைத்து கூட்டமைப்பு உறுப்பினர்களும் மனதில் ஆழமாக பதித்துக் கொள்ளல் கட்டாயமானது.
இரண்டு முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களான ந. ஸ்ரீகாந்தா, M . K . சிவாஜிலிங்கம் ஆகியோர் கூட்டமைப்பின் கட்டுப்பாட்டை மீறியது தவறென்பதை முதலில் ஒத்துக் கொள்ளல் அவசியம். அதை கூட்டமைப்பின் தலைமை உட்பட அனைவரும் சாதகமாக பரிசீலிக்க வேண்டியதும் அவசியம். மீண்டும் இதுபோன்றதொரு தவறு ஏற்படமாட்டாதென்ற உத்தரவாதத்துடன் இருவரையும் கூட்டமைப்பினுள் உள்வாங்கப் படவேண்டுமென தேசியத்தின் சார்பால் தமிழ்மக்கள் நோக்குகின்றார்கள்.
இதைவிடுத்து, தலைமையை மாற்றுவதென்பது இப்போதைய நிலையில் தேவைப்படாத ஒரு கருத்தாகும். இதனூடாக மேலும் பல விரிசல்கள் ஏற்பட்டு சிதறு தேங்காய்களாக மாறிவிட வாய்ப்புகள் அதிகம்.
மலையூர் பண்ணாகத்தான்
இலங்கை பொதுத் தேர்தலுக்கான வேட்பாளர் மனுத்தாக்கல் 19 .02 .2010 தொடங்கி 26 .02 .2010 வரை என தேதி குறித்தாயிற்று. தமிழ் தேசிய கூட்டமைப்புக்கு ஜனாதிபதித் தேர்தலிலே தமிழ்மக்கள் வழங்கிய ஆதரவை அடிப்படையாக கொண்டு பலர் வேஷங்களைக் கலைத்துக் கொண்டு தேர்தலில் இறங்க கொடுக்கு முடிந்து கட்டிக்கொண்டு நிற்கிறார்கள். பாராளுமன்ற உறுப்பினர்கள் பலருக்கு இம்முறை 'கல்தா' கொடுபடுமென்ற எதிர்பார்ப்பும் காற்றலையில் வரும் செய்தியாக உள்ளது. வேட்பாளர் தெரிவில் பெயர் இடம்பெறாத பலர் 'வார்' கொடுத்து ஓட ஆயத்த நிலையில் உள்ளார்கள். அதற்கான மகிந்தவின் கதவு திறந்த நிலையில் ஆயத்தமாக உள்ளது. இந்த நிலையில் தமிழ் தேசிய கூட்டமைப்பு இக்கட்டான நிலையில் இறுகிப்போய் உள்ளது.
எது எப்படியாக இருப்பினும் தமிழ்மக்களின் ஏகோபித்த உரிமைக்குரலாக தமிழ் தேசிய கூட்டமைப்பை தமிழ்மக்கள் அங்கீகரித்தாக வேண்டிய கட்டாய தேவை உள்ளது. மாற்றொழுங்காக எந்தவொரு தமிழ் கட்சியும் தெரிவதற்கில்லை என்பதை தமிழ்மக்கள் உணர்தல் அவசியம். இந்த இடத்தில் தமிழ் தேசிய கூட்டமைப்பு தெரிவிற்காக பல விதிமுறைகளையும், ஒழுங்குகளையும் ஏற்படுத்தியிருக்கலாம்.
தெரிவுக்காக ஏற்படுத்தப்பட்டிருக்கும் தகமைகள் பற்றி பொதுமக்களுக்கு முன்கூட்டியே அறியத்தருதல் பொருத்தமாகப் படுகிறது. இதனால் சில சிக்கல்கள் உருவாக்கி கட்சியை விட்டுப்பிரிந்தும், பிளந்தும் விடலாம் என எண்ண இடமும் உண்டு. ஆனால், முன்னிலமையை விட பின்னிலைமை மோசமாகக் கூடாதென கூட்டமைப்பின் நலன்கருதி பலர் சிந்திக்க இடமுமுண்டு.
சிலவற்றை எடுத்துரைக்கும் போது, அறியப்பட்ட பழைய விடயங்களாக இருக்கலாம். இருந்தாலும் நலன் கருதி கூறிவைப்பதில் தப்பொன்றும் இருக்காது.
பாராளுமன்ற உறுப்பினராக யார் வருவார் என்பதைவிட யார் வரக்கூடாது என்பதிலேயே கூட்டமைப்பினர் கவனம் செலுத்துவது அவசியம்.
பின்னிட்ட காலங்களிலே எதற்குமே விலைபோகாத உறுப்பினர்களாக உறுதியாக இருப்பார்கள் என்பதை இப்பொழுது தெளிவாக உரைத்துப்பார்த்து நிச்சயிக்கவேண்டிய நிலையில் கூட்டமைப்பு உள்ளதை மறந்துவிடக்கூடாது. ஏனெனில், கடந் 30 வருடங்களுக்கு மேலாக 'விலைபோகாத்தலைமை' எமக்கு கற்றுத்தந்த பாடம் இதுவல்லவா?
உடுவில் மென்டிஸ்
நன்றி காற்றலை
இலங்கை அரசியல் வரலாற்றில் எதிர்க்கட்சியாக அங்கம் வகித்துவரும் கட்சி இதுவரைக்கும் இப்படியான ஒரு அழிப்புக்குள் உட்பட்டதே இல்லையெனலாம். பாராளுமன்றத்திலே அரசுக்கு எதிராக வாய்திறப்பதற்கு ஒரு கட்சி இருக்கக்கூடாது என்ற அராஜகப்போக்கு விஸ்தரிக்கப்பட்டு மக்கள் வரை வந்தடைந்துள்ளது. இருப்பினும், சிங்கள மக்கள் பலவிதமான கட்சிகளாக பிளந்திருந்த போதிலும் 'தமிழனுக்கு உரிமை கொடுக்கக்கூடாது' என்ற நிலைப்பாட்டில் ஒருகட்சியாக நிற்பார்கள் என்பது வரலாறு சொல்லிவந்த உண்மையாகும்.
ஐக்கிய தேசியக்கட்சியின் தலைமை பொருத்தமற்றது என பலவழிகளுக்கூடாக சித்தரித்தும், அதை சாட்டாக வைத்துக் கொண்டு அமைச்சர் பதவியைக் காட்டி அரசுக்கு தாவ வைத்தும் முற்றாக அழிப்பதற்கான முஸ்தீபுகள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவினால் மேற்கொள்ளப்பட்டதென்பதை மறந்துவிடக்கூடாது. இதற்கு மேலும் வலுக்கூட்டுவதாக யுத்த வெற்றியும் அதிபர் மகிந்தாவுக்கு சாதக மாயிற்று.
'கீரைக்கடைக்கு ஒரு எதிர்க்கடை வேண்டும்' என்பதுபோல யுத்த வெற்றியில் சரத் பொன்சேகாவுக்கு அதிக பங்குள்ளதென காட்டி ஐக்கியதேசியக் கட்சி அவரை ஜனாதிபதித் தேர்தலில் களமிறக்கியது. சரத் பொன்சேகாவைப் பொறுத்தமட்டில் யுத்தத்தில் கண்ட வெற்றியும், அதையே அரசியல் மயப்படுத்தப்படும் பொழுது அதிலும் இலகுவாக வெற்றிகண்டுவிடலாமெனக் கொண்ட தன்னம்பிக்கையும் அவருக்கு மேலும் வலுச் சேர்த்தது. சிங்கள மக்கள் யுத்தவெற்றியின் சார்பாக மகிந்தா - சரத் இருவரையும் ஆரம்பத்தில் சமமாகவே பார்த்திருந்தார்கள். காலம் செல்லச் செல்ல தமிழ் தேசியக்
கூட்டமைப்பின் ஆதரவு சரத்திற்கு கிடைத்த பொழுது பிரச்சாரம் திசைமாறத் தொடங்கியது. யுத்தத்திற்கு கட்டளையிட்டவனா? யுத்தத்தை நடாத்தியவனா? என்றாய் ஒப்பீட்டு அடிப்படையிலும், தமிழ் தேசிய கூட்டமைப்பின் சாய்வும் சரத்திற்கு சார்பாக இருக்கவில்லை. (தமிழ் தேசியக் கூட்டமைப்பு சார்ந்திருந்து சத்துருவைத் தாக்கியதென்பது, அதாவது சரத் பொன்சேகாவை தற்போதைய நிலைக்குத் தள்ளியது பிறிதொரு தொடர்கதையின் ஆரம்பமாகும். எது எப்படியோ தமிழ்மக்கள் எதிர்பார்த்தது போல இரண்டாம் பொது எதிரியை 'உள்ளேபோட்ட' பெருமை தமிழ் தேசிய கூட்டமைப்பின் சாணக்கியத்தையே சாரும்.)
மகிந்தாவுக்கு வாக்குப்பண்ணிய சிங்கள மக்கள் பொன்சேகாவுக்கு எதிராக வாக்குப்பண்ணியதாக மகிந்தா கருதிக்கொண்டது, பாரிய விளைவை ஏற்படுத்தப் போகிறது. இந்த இடத்திலிருந்துதான் எதிர்வரும் பொதுத் தேர்தலில் மகிந்தா சரிவானது ஆரம்பமாகப் போகின்றதெனலாம். சரத் பொன்சேகாவின் கைது, மகிந்தாவுக்கு வாக்குப் பண்ணிய ஆதரவாளர்களுக்கு கூட ஒருவித தேசிய சினத்தை ஏற்படுத்தி உள்ளதை புரியக்கூடியதாக உள்ளது. மகிந்தா ஜனாதிபதியாக வரவேண்டுமென சிங்கள மக்கள் எண்ணுவது ஒருபுறம். பொன்சேகாவின் தேசியம் சார்ந்த அவரது பெயருக்கு அபகீர்த்தி ஏற்படக்கூடாதென சிங்கள மக்கள் எண்ணுவது மறுபுறம். ஆகவே பொன்சேகாவின் அவமானம் ஒட்டு மொத்தமாக தமக்கேற்பட்ட அவமானமாக சிங்கள மக்கள் எண்ணுகின்றனர்.
சரத் பொன்சேகா தற்பொழுது விடுதலை செய்யப்படுவாராயின், அதுவானது ஐக்கியதேசியக் கட்சியின் (எதிரிக் கட்சி) எதிர்க் கோஷத்திற்கு பயந்து அரசு விடுதலை செய்ததாக அமையும். குறிப்பாக கோத்தபாய ராஜபக்ச விட்ட சரத் பொன்சேகாவிற்கெதிரான பல அறிக்கைகள் பொய்யானதாகிவிடும். அத்தோடு அரசுக்கு கௌரவப் பிரச்சினையாக கூட மாறிவிட வாய்ப்புண்டு. பொதுத் தேர்தலுக்கு பின்னர் விடுதலை செய்யப்படுவாராயின் சர்வதேச மட்டத்தில் அரசுக்கு மேலும் அபகீர்த்தி ஏற்பட இடமுண்டு. இந்த நிலைகளில் அரசு 'ஆப்பிழுத்த குரங்கு' போல் ஆகிவிடும்.
ஆகவே, ஒட்டுமொத்தமாக நோக்குமிடத்து எதிர்வரும் பொதுத் தேர்தல், கள்ள வாக்குகள் உட்பட அரசின் பல குட்டுக்கள் அம்பலமாகும் மேடையாக அமையலாம். அதுவே அரசுக்கு பின்னடைவான சாத்தியத்தை ஏற்படுத்த ஏதுவாக அமைவதால் சிலவேளைகளில் ஜனாதிபதியின் நிறைவேற்று அதிகாரத்தைக் கொண்டு பொதுத்தேர்தலை ஒத்திப் போட்டாலும் ஆச்சரியப் படுவதற்கில்லை. எதையும் பொறுத்திருந்து பார்த்து ரசிப்போம்.
மல்லைகையூரான்
அனோமா பொன்சேகாவின் கண்களிலிருந்து வருவது கண்ணீர்? தமிழ் தாய்மார்களின் கண்களிலிருந்து வருவது பன்னீர்?
'அரசன் அன்றறுப்பான். தெய்வம் நின்றறுக்கும்' என்ற பழமொழி இவ்வளவு சீக்கிரமாக இலங்கை வரலாற்றுப் பக்கங்களில் ஒரு நிலையான அத்தியாயத்தை உருவாக்குமென்று எவருமே எண்ணியிருக்க மாட்டார்கள். தனது கணவரான சரத் பொன்சேகாவுக்காக (இலங்கையின் ஜனாதிபதி வேட்பாளர்) சர்வதேசத்தை கண்ணீரோடு கூக்குரலிட்டு அழைக்கும் அனோமா, ஒருகணம் இலங்கையில் தமிழ் தாய்மார்களினதும், விதவைகளினதும் கண்ணீரைப் பற்றி பெண் என்ற வகையில் சிந்தித்துப்பார்க்க வேண்டுகிறோம். இவைதான் கண்ணுக்கு தெரியாவிடினும் கொழும்பிலே, தனது வாழ்விடத்திற்கு அருகிலே வீதி வீதியாக எத்தனை தாய்மார் கதறி அழுது கூக்குரலிட்டு திரிந்தார்கள் என்பதை உங்கள் கண்கள் கண்டுகொள்ளாமல் இருந்திருக்க முடியாது. அந்தக் கண்களின் பார்வையானது தமிழ் தாய்மார்கள் என்றும், விடுதலைப்புலிகளின் ஆதரவாளர்கள் என்றும் ஒரு வட்டத்திற்குள் நின்று நீங்கள் ரசித்ததை இச்சந்தர்ப்பத்தில் எண்ணிப்பார்க்க வேண்டுகிறோம்.
'சுவரில் எறிந்த பந்து மீண்டும் வருவது' போல இப்போது தர்மம் வந்து உங்கள் தலையில் வீழ்ந்துள்ளது. உங்கள் கணவருக்காக சர்வதேசத்தை நோக்கி கூப்பாடு போடும் உங்கள் கண்ணீருக்கு ஒரு வலிமையையும் பெறுமதியும் இருக்குமென்றால், அதுவானது ஏற்கனவே தமிழ்த் தாய்மார்களின் கண்ணீரைக் கண்டு இரங்கியிருந்தால் மட்டுமே அது சாத்தியமாகும். அதில் நியாயமும் இருக்கும்.
'தர்மம்' நடாத்தும் நாடக மேடையில் முதல் காட்சி ஆரம்பமாகியுள்ளது. அது உங்கள் கணவரான ஜெனரல் சரத் பொன்சேகாவின் காட்சி. இரண்டாம் பாகம் அதைத் தொடர்ந்து வெகு விரைவில் அரங்கேற இருக்கிறது.
அது ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் காட்சி.
காலம் காட்டும் காட்சிகளுக்காக நாடக மேடையை விட்டு அகலாமல் தொடர்ந்து பொறுமையுடன் காத்திருப்போமா?
தசக்கிரீவன்
ஜனாதிபதித் தேர்தலுக்குப் பின்னர் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் எதிர்காலம் குறித்த பல்வேறு கேள்விகள் எழ ஆரம்பித்துள்ளன.
கூட்டமைப்பு தமிழ்த் தேசியத்தின் குரலாக ஒலிக்கப் போகிறதா என்பது அதில் முதன்மையானது.
இதற்குக் காரணம் ஜனாதிபதித் தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அணிசார்ந்து நின்றதும் பிரசாரத்தில் இறங்கியதுமே.
சரத் பொன்சேகாவுக்கு சார்பாக- எதிர்க்கட்சிகளுக்கு ஆதரவு தெரிவித்து களமிறங்கிய கூட்டமைப்பின் நிலைப்பாடுகளை தமிழ்மக்கள் முழுமையாக ஏற்றுக் கொள்ளவில்லை என்பது வெளிப்படை. இந்தக் கட்டத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு பல்வேறு சவால்கள் இப்போது காத்திருக்கின்றன.
ஆதில் ஒன்று உட்கட்சிப் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பது. அடுத்தது தமிழர் பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்கான முயற்சிகளில் இறங்குவது. நான்கு கட்சிகளின் கூட்டமைப்பாக இயங்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்குள் அண்மைக் காலமாக பல்வேறு குரல்கள் முரண்பாடான கருத்துகளுடன் வெளிவந்து கொண்டிருக்கின்றன.
விடுதலைப் புலிகள் தோற்கடிக்கப்பட்ட பின்னர் -அவர்களால் வழிநடத்தப்பட்ட கூட்டமைப்பின் நிலைப்பாடுகள் போக்கிலும் மாற்றங்கள் தென்படத் தொடங்கின. அதுபோலவே அதன் பல எம்.பிக்களின் போக்கிலும் மாற்றங்கள் தென்பட்டன. பலர் தமது உண்மை முகத்தைக் காண்பித்ததே இந்தக் காலப்பகுதியில் தான்.
முதலில் வன்னி மாவட்ட எம்.பியான வினோ நோகராதலிங்கம் அரசாங்கத்துக்கு ஆதரவாக இயங்கப் போவதாக செய்திகள் வெளியாகின. வவுனியாவில் இடம்பெயர்ந்தோர் தடுத்து வைக்கப்பட்டிருந்த முகாம்களைப் பற்றி சர்வதேசமே கவலையும் கண்டனமும் தெரிவித்துக் கொண்டிருந்த போது- அந்த முகாம்களுக்கு நற்சான்றிதழ் கொடுக்கும் வகையில் இவர் கருத்துகளை முன்வைத்திருந்தார். இதுவே அவர் பற்றிய செய்திகளுக்குக் காரணமாக அமைந்தது.பின்னர் அவர் ஒதுக்கிக் கொண்டார்.
அதற்குப் பிறகு மற்றொரு வன்னி எம்.பியான சிவநாதன் கிஷோர் அரசாங்கத்தின் செயற்பாடுகளுக்கு ஆதரவளிப்பதாக பகிரங்கமாகவே கூறினார். அத்துடன் அவசரகாலச்சட்ட நீடிப்பு பிரேரணை மீதான வாக்கெடுப்பில் அரசுக்குச் சார்பாகவே வாக்களித்தும் வருகிறார்.
இன்னொரு வன்னி மாவட்ட எம்.பியான கனகரட்ணம. எட்டு மாதங்களாகத் தடுப்புக்காவலில் வைக்கப்பட்டிருந்து அண்மையில் தான் விடுவிக்கப்பட்டிருக்கிறார். ஜனாதிபதித் தேர்தலில் மகிந்த ராஜபக்ஸவுக்குச் சார்பாக பிரசாரம் செய்ய வேண்டும் என்ற நிபந்தனையின் அடிப்படையிலேயே அவர் விடுவிக்கப்பட்டதாக கூறப்பட்டது. சுயவிருப்பின் பேரிலோ அல்லது நிர்ப்பந்தத்தின் பேரிலோ மகிந்த ராஜபக்ஸவுக்கு சார்பாக சில மேடைகளில் அவர் தோன்றியது உண்மை.
அதுபோலவே, வேறும் பல எம்.பிக்கள் அரசுக்கு சார்பாகச் செயற்படுவதாகத் தகவல்கள் வெளியாகின. இன்னொரு பக்கத்தில் ஐதேகவுக்கு சார்பாக செயற்படும் அணியொன்றும் அண்மைய ஜனாதிபதித் தேர்தலின் போது வெளிப்பட்டது. அதுவே வலுவானதாக மாற்றம் பெற்றதால் கூட்டமைப்பு சரத் பொன்சேகாவுக்கு ஆதரவு கொடுக்க முன்வந்தது.
இந்த அணிகள் இரண்டுக்கும் நடுவே எந்தத் தரப்பையும் சார்ந்திருக்கக் கூடாது என்று வலியுறுத்தும் ஒரு அணியும் கூட்டமைப்புக்குள் இருக்கிறது.
ஆக மொத்தத்தில் மூன்று முக்கிய அணிகளாக கூட்டமைப்பு பிரிந்து நிற்கிறது. இந்த மூன்று அணிகளும் இணைந்து அடுத்த தேர்தலில் போட்டியிட்டால் தான் அது வடக்கு,கிழக்கில் ஏனைய தரப்புகளுக்கு சவால் நிறைந்த ஒன்றாக மாற்றம்பெற முடியும்.
வடக்கு,கிழக்கில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு இப்போதும் ஆதரவு குறைந்து போகவில்லை என்பது உண்மையே. என்றாலும் அதன் தொடர்ச்சியான செயற்பாடுகள் மக்களிடதில் கேள்விகளையும் அதிருப்திகளையும் ஏற்படுத்தி வருவது என்பது மறுக்க முடியாத விடயம்.
தற்போது மூன்று கருத்துகளுடன் இருக்கும் கூட்டமைப்புக்குள் இருக்கும் குழப்பங்களுக்கு முடிவு கட்டுவதற்கு முயற்சிகள் ஏதும் நடப்பதாகத் தெரியவில்லை.
அண்மையில் சிவாஜிலிங்கத்தையும் சிறிகாந்தாவையும் கூட்டமைப்பு ஒதுக்கி விட்டது. ஜனாதிபதித் தேர்தலில் தனித்துப் போட்டியிட்டதால் சிவாஜிலிங்கமும், அவருக்குத் துணை நின்றதால் சிறிகாந்தாவும் ஓரம் கட்டப்பட்டனர். அடுத்த பொதுத்தேர்தலில் இவர்களுக்கு வாய்ப்பு வழங்கப்படாது என்றும தகவல்.
தமது கட்சியின் முடிவுகளுக்கு முரணாக நடந்து கொண்ட இரு எம்.பிக்களுக்கு அடுத்த தேர்தலில் போட்டியிட வாய்ப்பளிக்கப்பமாட்டாது என்று சம்பந்தன் ஏற்கனவே கூறியுள்ளார்.
ஆனால் அவர்கள் யார் என்று அவர் கூறவில்லை. சிவாஜிலிங்கம், சிறிகாந்தா ஆகியோருக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்கத் துணிந்த கூட்டமைப்பு கட்சியின் கொள்கைக்கு விரோதமாக அவசரகாலச் சட்டத்துக்கு ஆதரவாக வாக்களிக்கும் சிவநாதன் கிஷோர் குறித்து வாய் திறக்கவேயில்லை.
இந்தக் கட்டத்தில் மூன்று பிரிவுகளாகச் செயற்படும் கூட்டமைப்பு அடுத்த பொதுத்தேர்தலில் சந்திக்கப் போகும் சவால்கள் ஏராளம் உள்ளன. அதைச் சமாளிப்பதற்கு முன்னர் கட்சியில் உள்ள பிரச்சினைகளை அது சமாளிக்க வேண்டிய கட்டாயம் உள்ளது.
குறிப்பாக உட்கட்சிப் பிரச்சினைகளைத் தீர்த்துக் கொள்வது அதன் முன் உள்ள மிகமுக்கியமான சிக்கல். அதாவது வேட்பாளர் தெரிவு என்று வரும் போது நான்கு கட்சிகளுமே திசைக்கு ஒன்றாக நின்று கொண்டு ஒன்றையொன்று விழுங்கித் தின்னத் தயாராக இருக்கின்றன. அதைவிட கட்சி சாராத வேட்பாளர்களும் கடந்த தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றனர்.
பெரும்பாலான இடங்களில் அவர்களே அதிக விருப்பு வாக்குகளையும் பெற்றனர். அதற்கு விடுதலைப் புலிகளின் செல்வாக்கே காரணம் என்ற குற்றச்சாட்டும இருக்கவே செய்கிறது. விடுதலைப் புலிகள் இல்லாது போயுள்ள நிலையில் கட்சிசாராத அரசியல்வாதிகளின் நிலை என்னவென்று தீர்மானிக்க வேண்டிய கட்டத்துக்கு கூட்டமைப்பு வந்திருக்கிறது.
இந்த முடிவு எடுக்கப்படும் சந்தர்ப்பத்தில் ஏதாவதொரு பக்கத்தில் அதிருப்திகள் ஏற்படுமானால் அது கூட்டமைப்புக்குள் பெரும் குழப்ப நிலையை உருவாக்கும். கடந்த 2004ம் ஆண்டு பொதுத்தேர்தலின் போதும் இதேபோன்ற சிக்கல்கள் வரவே செய்தன.
பல வேட்பாளர்களை நிறுத்துவதில் ஏற்பட்ட குழப்பங்களுக்கு புலிகள் தலையிட்டு தீர்வு காண நேரிட்டது. குறிப்பாக, தமிழ்க் காங்கிரசின் அப்பாத்துரை வினாயகமூர்த்திக்கு யாழ்ப்பாணத்தில் செல்வாக்கு இருந்தது . ஏற்கனவே யாழ்.மாவட்ட எம்.பியான இருந்தபோதும், அவருக்கு அங்கு போட்டியிடுவதற்கு வாய்ப்பு வழங்கப்படவில்லை. இதுபோன்று பல விடயங்களில் புலிகளின் தலையீடுகள் இருந்தன. இப்போது அப்படியான பிரச்சினைகள் ஏற்பட்டால் தீர்வு காண்பதற்கு வெளியே இருந்து யாரும் வரப் போவதில்லை.
அது கூட்டமைப்புக்குள் விபரீதமான விளைவுகளையே ஏற்படுத்தும். இந்தச் சிக்கல்களை சமாளித்தால் தான் கூட்டமைப்பால் பொதுத்தேர்தலை சவால்களின்றிச் சந்திக்க முடியும். அதேவேளை அண்மையில் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் வெளியிட்டிருக்கும் சில கருத்துகள் தமிழ் மக்களிடத்தில் சந்தேகங்களை ஏற்படுத்தவும் தவறவில்லை. அவர் சிங்கள மக்களிடத்தில் நம்பிக்கையைப் பெறுவதற்காக வெளியிடும் சில கருத்துகள் தமிழ் மக்கள் மத்தியில் சந்தேகங்களை தோற்றுவிப்பதாக அமைந்துள்ளன.
இது முக்கியமானதொரு தருணம்.
தமிழ் மக்களின் நம்பிக்கையையும் நன்மதிப்பையும் பெற்றால் தான் அவர்களின் வாக்கு பலத்தில் மீளவும் நாடாளுமன்றம் செல்ல முடியும். சிங்களத் தலைமைகளுக்கு- சிங்கள மக்களுக்கு நம்பிக்கை தரக் கூடிய வகையில் பேசி அவர்களின் விசுவாசிகள் போன்று காண்பிக்க முனைந்தால் தமிழ் மக்களின் நம்பிக்கையை இழக்க நேரிடும்.
இந்தக் கட்டத்தில் உட்கட்சிப் பிரச்சினையாயினும் சரி- தமிழ் மக்களின் பிரச்சினையாயினும் சரி கூட்டமைப்பு எத்தகைய முடிவுகளை எடுக்கப் போகிறது என்பதில் தான் அதன் அரசியல் எதிர்காலம் அமையப் போகிறது.
- ஹரிகரன்-
நன்றி info தமிழ்

